லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல்: பதிலுக்கு கடும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
- காசா மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
- இதனைத் தொடர்ந்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை.
இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்னும் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலின் மெடுலா நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை வானில் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது. எச்சரிக்கை விடுத்த நிலையில் லெபனான் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் அண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான்- இஸ்ரேல் எல்லையில் உள்ள இஸ்ரேல் நகரங்கள் மீது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட், ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டையில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
லெபனான்- இஸ்ரேல் இடையே கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது ஜனவரி மாதம் இறுதிக்குள் லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது, பின்னர் பிப்ரவரி 18-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்கள் நாட்டில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற உத்தரவிடக்கோரி லெபனான் ஐ.நா. உதவியை நாடியுள்ளது.