நைஜர் நாட்டில் தொழுகையின்போது மசூதி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 44 பேர் உயிரிழப்பு
- முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.
- இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மசூதியை சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 13 பேர் படுக்கையமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் அருகிலுள்ள சந்தை மற்றும் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்தையடுத்து 3 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நைஜர், மாலி மற்றும் புர்கினா பசோ ஆகிய 3 நாடுகளும் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக அல்கொய்தா உள்ளிட்ட ஜிகாதி கிளர்ச்சிக் குழுக்களால் நடத்தப்படும் கிளர்ச்சியை ஒடுக்க போராடி வருகிறது.