உலகம்

சிரியா: 13 ஆண்டுகளாக வெல்ல முடியாத போரை 13 நாட்களில் கிளர்ச்சியாளர்கள் வென்றது எப்படி தெரியுமா?

Published On 2024-12-09 18:29 IST   |   Update On 2024-12-09 18:30:00 IST
  • மேற்கு நாடுகள் ரஷியா மீது பல தடைகள் விதித்திருந்தும் ஆசாத்தின் விஸ்வாசம் ரஷியா பக்கமே உள்ளது.
  • துருக்கி HTS ஐ விரும்பாத போதிலும் சிரியாவில் உருவான கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் 2011 முதல் 13 ஆண்டுகளாக பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிட்டனர். ஆனால் அவரை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை.

திடீரென கடந்த வாரத்தில் ஒரு சாதராண நாளில் தொடங்கி 13 நாட்களுக்கும் குறைவாக நீடித்த ஒரு தாக்குதலில், அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. அதிபர் ஆசாத் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இடம் பொருள் ஏவல் என்றால் அது மிகையாகாது.

இடம் பொருள் ஏவல்

'ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்'  என்ற திருக்குறளே இங்கேயும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

கடந்த 2011 தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபர் ஆசாத்துக்கு பக்கபலமாக ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் கிளர்ச்சியை ஒடுக்க பேருதவியாக இருந்தது. கடைசியாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த சொற்ப அலெப்போ நகர் பகுதிகளையும் ரஷியா கைப்பற்றி 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஆசாத்துக்கு பரிசளித்தது ரஷியா. தற்போது மேற்கு நாடுகள் ரஷியா மீது பல தடைகள் விதித்திருந்தும் ஆசாத்தின் விஸ்வாசம் ரஷியா பக்கமே உள்ளது.

 

ஆசாத்

இருப்பினும் ரஷியா தற்போது உக்ரைன் போரில் ஈடுபட்டு வருவதால் சிரியாவில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஈரான் இஸ்ரேலுடன் மோதிக்கொண்டு உள்ளது. ஆசாத்தின் இரண்டு கூட்டாளிகளும் திசைதிருப்பட்டிருக்கும் நிலையில் சிரியா எடுப்பார் கை பிள்ளையாக இருப்பது காத்திருந்த கிளர்ச்சியர்களுக்கு உறைத்துள்ளது

மேலும் முந்திய கிளர்ச்சியில் போராட்டக்காரர்களை ஒடுக்க ஆசாத்துக்கு முக்கிய உதவியாக இருந்த மற்றொரு அமைப்பு அண்டை நாடான லெபனானில் இயங்கி வந்த ஹசன் நஸ்ரல்லா தலைமையிலான ஹிஸ்புல்லா. ஆனால் தற்போது இஸ்ரேலுடனான மோதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டு பெரும் படைகளையும் ஹிஸ்புல்லா இழந்துள்ளது.

நவம்பர் 27 அன்று லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் தங்களை சேதங்களில் இருந்து மீட்டுருவாக்கம் செய்து வரும் ஹிஸ்புல்லா இந்த முறை ஆசாத்துக்கு உதவி செய்யாமல் கை விரிந்துள்ளது.  

ஊழல் - கொள்ளை

இதற்கிடையே சிரியாவிலும் உள்நாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரிய அளவிலான ஊழல் மற்றும் அதிகாரிகளே கொள்ளையடித்த காரணத்தால் ராணுவ பீரங்கிகள் மற்றும் விமானங்களில் எரிபொருள் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் வந்துள்ளது.

மேலும் பல சிரியர்கள் தங்கள் நாட்டு மக்களுடன் சண்டையிட விரும்பாததால் லெபனானுக்கு தப்பிச் சென்றதால் ராணுவ வீரர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தாலும் எந்த திசையிலும் இருந்து உதவி இல்லாமல் மன உறுதியை இழந்திருந்தது கிளர்ச்சியாளர்களுக்குச் சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

அல்-கோலானி

கிளர்ச்சிக் கூட்டணியின் முக்கிய தலைமையாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பு செயல்பட்டது. முந்தைய காலங்களில் அல்-கொய்தாவுடனான தொடர்பை பேணி வந்த அமைப்பே இந்த HTS .

 

அல்-கோலானி

இந்த அமைப்பின் தற்போதைய தலைவரான அபு முகமது அல்-கோலானி திட்டத்தின் பேரிலேயே கடந்த வாரம் இந்த முழு அளவிலான தாக்குதல் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் கோலானி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

HTS

துருக்கியின் கை

துருக்கி HTS ஐ விரும்பாத போதிலும் சிரியாவில் உருவான கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது. எனவே தற்போதைய நடவடிக்கையில் துருக்கியின் பங்கு உள்ளதாகவும் அரசியல் அரங்கில் அனுமானங்கள் எழுந்துள்ளன. ஆனால் துருக்கி வெளியுறவு துணை அமைச்சர் நுஹ் யில்மாஸ் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 

குஷியில் இஸ்ரேல்

பஷர் அல் அசாத் ஆட்சியின் வீழ்ச்சியில் மற்றொரு வெற்றியாளர் இஸ்ரேல். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஈரான், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை வழங்கிய பாதையைத் தடுத்துள்ளது.

ஏற்கனவே பலவீனமான ஹிஸ்புல்லாவை இப்போது இஸ்ரேல் அதிக பலத்துடன் அழிக்க முடியும். கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் சிரியா முழுவதும் அபாயகர ஆயுதங்கள் இருக்கும் இலக்குகளை அழித்து அவை கிளர்ச்சியாளர்கள் வசம் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மற்றொரு புறம் ரஷிய ஆதரவு ஆசாத்தை ஒழித்துக்கட்ட மேற்கு நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஊக்கமளித்து உதவியதாகவும் அரசியல் அரங்கில் கருத்து நிலவுகிறது.

Tags:    

Similar News