அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு: பிரான்சில் மக்கள் போராட்டம்
- பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது.
- தலைநகர் பாரீசில் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரீஸ்:
பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன.
இதற்கிடையே ஓய்வு வயது 64 ஆக உயர்த்தும் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தாமல் நிறைவேற்ற அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரித்து பேராட்டங்கள் வெடித்தது.
தலைநகர் பாரீசில் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கான்சார்ட் சதுக்கம் அருகே குப்பை உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நேரம் செல்ல செல்ல போராட்டம் தீவிரமடைந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் போலீசாருடன் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.
வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரித்தனர். பிரான்சின் மற்ற நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதில் இம்மானுவேல் மெக்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தீவிர வலதுசாரி எதிர்க்கட்சி தலைவர் மரின் லுபென் தெரிவித்துள்ளார்.