தென்கொரியா மீது பீரங்கி குண்டுகள் வீசி திடீர் தாக்குதல்- வடகொரியா நடவடிக்கையால் பதற்றம்
- வடகொரியாவின் தாக்குதலுக்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சியோல்:
வடகொரியா-தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
தங்களை சீண்டினால் அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு சமீபத்தில் வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் தென் கொரியாவின் யோன் பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை பீரங்கி மூலம் குண்டுகளை வீசி வடகொரியா திடீர் தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன் பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல்பகுதியில் விழுந்தன. தாக்குதலையடுத்து தீவுப் பகுதியில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தென்கொரிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பீரங்கி தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை தென்கொரியா அதிகரித்து உள்ளது. வடகொரியாவின் தாக்குதலுக்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இது கொரிய தீபகற்பத்தில் அமைதியை அச்சுறுத்தும் ஆத்திரமூட்டும் செயல்.
இந்த அதிகரித்து வரும் நெருக்கடிக்கு வட கொரியா முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம், மேலும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அவர்களை கடுமையாக வலியுறுத்துகிறோம்.
எங்கள் ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. மேலும் வட கொரியாவின் ஆத்திர மூட்டல்களுக்கு பதிலளிக்கும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.