வங்கதேசத்தில் தொடரும் பதட்டம் இந்து துறவி, சீடர்கள் மீது வழக்கு
- 500 பேர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவிலும் பாதிப்பு.
டாக்கா:
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 25-ந் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நடந்த வன்முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராக வழக்கறிஞர்கள் சங்கம் தடை விதித்தது.
இந்த வழக்கில் சின்மோய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வருகிற ஜனவரி 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில் சிட்டகாங் மெட்ரோபாலிடன் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் எம்.டி அபு பக்கரிடம் தொழிலதிபரும், பங்களாதேஷின் ஹெபாசாத்-இ-இஸ்லாம் அமைப்பின் ஆர்வலருமான எனாமுல் ஹக் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், நவம்பர் 26-ந் தேதி நீதிமன்றத்தில்
நிலப் பதிவேடு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது சின்மோய் கிருஷ்ண தாஸின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாக புகாரில் கூறியுள்ளார்.
தாக்குதலின் காரணமாக நீண்ட காலமாக சிகிச்சையில் இருந்தமையால் வழக்குத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ஹக் கூறினார்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணதாஸ் மற்றும் அவரது சீடர்கள் 164 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 500 பேர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.