சிரியாவின் தலைவிதியை மாற்றிய 14 வயது சிறுவன்.. ஒரே ஒரு ஓவியத்தால் ஆசாத் சாம்ராஜ்யம் சரிந்தது எப்படி?
- அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- தாரா மக்கள் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.
ஆசாத் ஆட்சியின் வீழ்ச்சி
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்தது.
இதற்கிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனைகள், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. ரஷியாவின் உதவியுடன் அப்போது தனது ஆட்சியை ஆசாத் காப்பற்றிக்கொண்டார்.
உலக சக்தியான ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை தொடரவே செய்தது. அதன் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் முக்கிய நகரங்களையும் கடைசியாக டமாஸ்கஸ் உட்பட அலெப்போ, ஹமா, தாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
'எஜாக் எல் டோர், யா டாக்டர்'
2011 ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஒரு இளைஞனின் 14 வயது பள்ளிச் சிறுவனின் புரட்சிகரமான செயல் நாட்டின் தலைவிதியையே மாற்றியமைத்துள்ளது.2011 சிரியா உள்நாட்டு போரின் பிறப்பிடமாக விளங்கும் தாரா நகரத்தில் இந்த கதை தொடங்குகிறது.
நாடு முழுவதும் மக்கள் மனதில் அடக்கி வைத்திருந்த எதிர்ப்பு சிறுவனின் கிராஃபிட்டி ஓவியமாக முதல் வடிவம் பெற்றது. தாரா நகரை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் மௌவியா சியாஸ்னே, அதிபர் ஆசாத் உடைய புகைப்படத்தைப் பள்ளி சுவரின் கிராஃபிட்டி ஓவியமாக வரைந்து அவரின் மருத்துவ பட்டத்தை குறிப்பிட்டும் வகையில் ['எஜாக் எல் டோர், யா டாக்டர்'] ['இது உங்களின் முறை டாக்டர்'] என்று எழுதுகிறான். இது உள்ளூர் காவல்துறையினரின் கண்ணில் படவே, மௌவியாவும் அவனது நண்பர்களும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.
26 நாட்கள்
ஆசாத்தின் முகபாரத் [ரகசிய போலீஸ்] அவர்களைக் காவலில் வைத்து 26 நாட்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறார்கள். தாரா மக்கள் மத்தியில் இந்த செய்தி காட்டுதீ போல் பரவி கோபத்தை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை விடுதலை செய்யவேண்டி அவர்களின் பெற்றோர்களும், தாரா மக்கள் பலரும் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.
26 நாட்கள் சித்திரவதைக்குப் பின்னர் விடுதலையான சிறுவர்களின் படங்கள் சிரியா முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. தாராவில் மட்டுமின்றி சிரியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மார்ச் 15, 2011 சிரியா முழுவதும் "எதிர்ப்பு தினம்" அனுசரிக்கப்படுகிறது. இது பின்னர் நாடு தழுவிய இயக்கமாக மாறுகிறது. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கிளர்ச்சி > போராட்டம்
எதிர்த்து பேசுவோரைச் சிறையில் அடைத்தனர் அவ்வாறு அடைக்கப்பட்ட எண்ணற்றோரைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ஆயுதங்களை ஏந்தி கிளர்ச்சியாளர்களாக மாறுகின்றனர்.
அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 13 மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.
ரஷியாவின் உதவியால் அப்போது தப்பிய ஆசாத் ஆட்சி தற்போது கடந்த வாரம் திடீரென புத்துயிர் பெற்ற கிளர்ச்சியால் ஒரே வாரத்தில் வீழ்ந்துள்ளது. இதனால் நேற்று வரை கிளர்த்தியாளர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இனி ஆட்சியாளர்கள் என்று குறிப்பிடப்படுவார்கள்.