அதிபரான முதல் ஒரு வாரத்தில் டொனால்டு டிரம்ப் சொன்ன பொய்கள்..
- சிறிய இடைவெளியிலேயே கமலா ஹாரிஸை டிரம்ப் வென்றுள்ளார்.
- 2020 தேர்தலில் மோசடி செய்திருக்காவிட்டால் நான் வென்றிருப்பேன்.
கடந்த திங்கள்கிழமை அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் கடந்த 5 நாட்களில் சொன்ன பல விஷயங்கள் பொய்யானவை என்று தெரியவந்துள்ளது.
ஜனவரி 20 [திங்கள்கிழமை] அவர் பதவியேற்ற பின் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், செய்தியாளர்கள் சந்திப்புகள் பலவற்றில் ஆதரமற்ற வகையில் டிரம்ப் வாய்க்கு வந்ததை பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
தாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதாரக் கூட்டமைப்புக் கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், 2024 அதிபர் தேர்தலில் அவர் கமலா ஹாரிஸை விட பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றதாக தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார். அமெரிக்க மக்கள் தனக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ளனர் என்று கூறினார்.
ஆனால் அசோசியேட் பிரஸ் வெளியிட்டிருக்கும் வாக்குப் பதிவு தரவுகளின்படி, டிரம்ப் பெற்ற எலெக்டோரல் வாக்குகள் 312. கமலா ஹாரிஸ் பெற்ற எலெக்டோரல் வாக்குகள் 226. அதாவது, டிரம்ப் 49.9 சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 48.4 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இதன்படி சிறிய இடைவெளியிலேயே கமலா ஹாரிஸை டிரம்ப் வென்றுள்ளார். இது அவர் குறிப்பிடும் மகத்தான வெற்றிக்கு முற்றிலும் முரணானது. அதே சமயத்தில் கடந்த 2020 தேர்தலில் ஜோ பைடன் 51.3% வாக்குகள் பெற்றிருந்த நிலையில் டிரம்ப் 46.8% பெற்று அதிக இடைவெளியில் தோற்றதும் கவனிக்கத்தக்கது.
அடுத்ததாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2024 தேர்தலில் தனக்கு இளைஞர்கள் அதிக வாக்கு செலுத்தியுள்ளதாக டிரம்ப் கூறினார்.
ஆனால் அசோசியேட் பிரஸ் தரவின்படி, 18 - 29 வயதுடையவர்களிடையே 4 சதவீத புள்ளிகளும் 30 - 44 வயதுடையவர்களிடையே 3 சதவீதப் புள்ளிகளும் கமலா ஹாரிஸ்க்கு கிடைத்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் புள்ளிகளே டிரம்புக்குக் கிடைத்துள்ளது என தெரியவருகிறது.
இதேபோல பென்சில்வேனியா, ப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் பெற்ற வெற்றியை டிரம்ப் மிகைப்படுத்திக் கூறியுள்ளார். மேலும் 2020 தேர்தலில் மோசடி செய்திருக்காவிட்டால் நான் வென்றிருப்பேன் என டிரம்ப் தற்போது பேசியுள்ளார்.
ஆனால் இதுதொடர்பான வழக்கில் மோசடி நடைபெறவில்லை என ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. முன்னதாக தேர்தல் பிரசார சமயத்தில், சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தவர்கள் நாய் உள்ளிட்ட அமெரிக்கர்களின் செல்லப்பிராணிகளை கொன்று சாப்பிடுவதாக டிரம்ப் ஆதாரமற்ற கருத்தை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.