உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுகிறோம்.. டொனால்டு டிரம்ப் அதிரடி
- அமெரிக்கா இரண்டாவது முறையாக உத்தரவிட்டுள்ளது.
- டஜன் கணக்கான நிர்வாக நடவடிக்கைகளில் கையெழுத்திட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலக அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா இரண்டாவது முறையாக உத்தரவிட்டுள்ளது.
குடியேற்றம் முதல் வெளியுறவுக் கொள்கை, பேச்சு சுதந்திரம், காலநிலை மாற்றம் வரையிலான பிரச்சினைகள் குறித்து இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற டிரம்ப் டஜன் கணக்கான நிர்வாக நடவடிக்கைகளில் கையெழுத்திட்டார்.
தனது முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில் உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்த கொரோனா பெருதொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு செயல்பட்ட விதத்திற்கு 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவிடம் இருந்து நியாயமற்ற முறையில் கடுமையான தொகையை தொடர்ந்து கோருகிறது. இது மற்ற நாடுகளின் மதிப்பிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம். 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனா, அமெரிக்காவை விட 300 சதவீதத்தை மக்கள் தொகை கொண்டுள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்புக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைவாகவே பங்களிக்கிறது," என்று உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவது குறித்து அமெரிக்கா கூறியுள்ளது.
டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் நிதியை இழக்க உள்ளது.