அமெரிக்க தேர்தல் விதிகளில் மாற்றம் - புதிய உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப்
- பல விஷயங்களை மாற்றும் வகையில் உள்ளது.
- ஃபெடரல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவண சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நாளுக்குள் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு பாஸ்போர்ட் போன்ற குடியுரிமை சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். தேர்தல் நாளுக்கு பிறகு பெறப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகளை ஏற்றுக்கொள்ள தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியல்கள் உள்ளிட்ட விவரங்களை கூட்டாட்சி நிறுவனங்களுடன் மாகாணங்கள் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் அதிகாரிகள் இணங்க மறுத்தால் மாகாண நிதி நிறுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, "நவீன, வளர்ந்த, வளரும் நாடுகளால் பயன்படுத்தப்படும் அடிப்படை மற்றும் தேவையான தேர்தல் பாதுகாப்புகளை செயல்படுத்த அமெரிக்கா தவறிவிட்டது.
இந்தியாவும், பிரேசிலும் வாக்காளர் அடையாளத்தை ஒரு பயோமெட்ரிக் தரவுத்தளத்துடன் இணைக்கின்றன. அதே நேரத்தில் அமெரிக்கா பெரும்பாலும் குடியுரிமைக்கான சுய சான்றளிப்பை நம்பியுள்ளது. இந்த உத்தரவு மூலம் தேர்தல் மோசடி முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்," என்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.