உலகம்
2009 போரில் மனித உரிமை மீறல்: இலங்கை ராணுவ தளபதிகள் உள்பட 4 பேர் மீது இங்கிலாந்து பொருளாதார தடை

2009 போரில் மனித உரிமை மீறல்: இலங்கை ராணுவ தளபதிகள் உள்பட 4 பேர் மீது இங்கிலாந்து பொருளாதார தடை

Published On 2025-03-25 16:52 IST   |   Update On 2025-03-25 16:52:00 IST
  • மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான தனிநபர்கள் 4 பேர் மீது பொருளாதார தடை.
  • இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய போரில் மனித உரிமை மீறல் ஏற்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் உள்பட 4 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடைவிதித்துள்ளது.

இலங்கை ஆயுதப்படை முன்னாள் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணகோடா, முன்னாள் இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணை தலைவராக இருந்து பின்னர், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு இலங்கை பாராளுமன்றத்தில் துணை மந்திரியான வினாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு பேரும் இங்கிலாந்துக்கு பயணம் செய்யவும், அங்குள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக கொலை, துன்புறுத்தல் அல்லது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான 4 பேர் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், "இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்றதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான சுமார் 30 வருட சண்டையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதாக, இலங்கை அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

Tags:    

Similar News