உக்ரைன் புனரமைப்புக்காக 3 பில்லியன் டாலர் வழங்கும் இங்கிலாந்து
- உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% சரிவு ஏற்பட்டுள்ளது
- உக்ரைனுக்கு உதவ இங்கிலாந்தில் சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023
ரஷியப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார்.
ரஷியாவுடனான போரினால் பொருளாதார ரீதியாக உருக்குலைந்திருக்கும் உக்ரைனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடும் நோக்கில், 61 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களும், உலகளாவிய முதலீட்டாளர்களும் லண்டனில் இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் எதிர்பார்க்கும் உதவிகளை திட்டமிடுவதற்காக "சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023" என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% சரிவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் தனது நிதியாதாரத்தை வலுப்படுத்த தனியார்துறை முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் உதவியை எதிர்பார்க்கிறது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட முக்கிய பொது சேவைகளை மேம்படுத்த உக்ரைன் உலக வங்கி கடன்களை பெறுவதற்கு இங்கிலாந்தின் ஆதரவு வழிவகுக்கும்.
இதுகுறித்து ரிஷி சுனக், "ஒரு துடிப்பான, ஆற்றல்மிக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் அடங்கிப்போக மறுக்கும் நாடு உக்ரைன். எனவே, எங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் எதிர்தாக்குதலுக்கான எங்கள் ஆதரவை அளித்து இந்த போரில் அவர்கள் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நாங்கள் நிற்போம்" என கூறியுள்ளார்.
மொத்த ஆண்டு வருமானம் $1.6 டிரில்லியனுக்கும் அதிகமாக உள்ள 38 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உக்ரைனின் மீட்பு மற்றும் புனரமைப்புக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. விர்ஜின், சனோஃபி, பிலிப்ஸ், ஹூண்டாய் மற்றும் சிட்டி ஆகிய பல பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தகம், முதலீடு, மற்றும் நிபுணத்துவப்பகிர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க "உக்ரைன் வணிக உடன்படிக்கை" எனும் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் புனரமைப்புத் திட்டங்களுக்கு உதவ இங்கிலாந்து ஆரம்பகட்டத்தில் 20 மில்லியன் பவுண்டு, பிறகு தனித்தனியாக 250 மில்லியன் பவுண்டு அளவிற்கு மேம்பாட்டு நிதியையும் வழங்கும். அதில் பாதிக்குமேல், ஐக்கிய நாடுகள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளின் மூலம் மனிதாபிமான நோக்கில் முன்னணியில் நின்று சேவையாற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க பயன்படும்.
ஒட்டுமொத்தமாக, ரஷிய-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு இங்கிலாந்து உக்ரைனுக்கு 347 மில்லியன் பவுண்டு உதவி செய்திருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.