உலகம்

பிரிட்டனில் பணவீக்கத்தை பாதியாக குறைப்போம்.. சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்போம்: ரிஷி சுனக் உறுதி

Published On 2023-01-04 16:51 GMT   |   Update On 2023-01-04 16:51 GMT
  • பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்க பிரதமர் உறுதியளித்தார்.
  • பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது.

லண்டன்:

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றார்.

பிரிட்டனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், நாட்டின் அனைத்து பிரச்சனைகளும் 2023ல் தீர்ந்துவிடாது என கூறினார். அதேசமயம் 2023ம் ஆண்டு புதிய வாய்ப்புகளை வழங்கி, மீண்டும் பிரிட்டன் பொருளாதாரம் சிறப்பாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது, நாட்டில் பணவீக்கத்தை பாதியாக குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தேசிய கடனைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்த அவர், சிறிய படகுகளில் வந்து பிரிட்டன் கரையில் குடியேறுபவர்களை தடுக்க புதிய சட்டங்களை இயற்ற உள்ளதாகவும், பிரிட்டனின் பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்கவும் அவர் உறுதியளித்தார்.

பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தை விட சற்று குறைவு. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகமாகவே உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரின் எதிரொலியாக, பிரிட்டனில் எரிபொருள் மற்றும் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சம் மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News