உலகம்

தீ விபத்தில் சிக்கிய பள்ளி

பள்ளி விடுதியில் தீ விபத்து: ஜன்னல்களை திறக்க முடியாமல் 11 பார்வையற்ற மாணவிகள் உயிரிழப்பு

Published On 2022-10-25 20:03 GMT   |   Update On 2022-10-25 20:03 GMT
  • தீப்பிடித்தபோது அந்த விடுதியில் 21 மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
  • உயிரிழந்த மாணவிகளின் அடையாளம் கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு.

முக்கோனோ:

உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கோனோ மாவட்டத்தில் பார்வையற்ற மாணவ,மாணவிகளுக்காக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை அதிகாலை இங்குள்ள மாணவியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த விடுதியில் 21 மாணவிகள் தங்கியிருந்ததாக மாவட்ட பாதுகாப்பு தலைவர் பாத்திமா இன்டிபசா தெரிவித்துள்ளார்.

தீயில் சிக்கி 11 மாணவிகள் உயிரிழந்து விட்டதாகவும், 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3 பேர் மட்டுமே உயிர் தப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பார்வையற்ற மாணவிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் எரிந்து விட்டதாகவும், அவர்களை அடையாளம் கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீ விபத்து நடந்த போது பள்ளி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் கிருபே, மாணவிகளின் விடுதிக்கு அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த விடுதியில் ஜன்னல்கள் திறக்க முடியாத அளவிற்கு வலுவாக அமைக்கப்பட்டிருந்தததாக இதனால் மாணவிகள் தீயில் இருந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்ததாக அமைச்சர் ஹெலன் கிரேஸ் அசாமோ தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News