வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு
- உக்ரைன்-ரஷியா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
- உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
வாஷிங்டன்:
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. அமெரிக்கா செல்லும் ஜெலன்ஸ்கி கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சம்மதம் தெரிவித்தார். அப்போது ரஷியாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.