உலகம் (World)

உக்ரைன் அமைதி மாநாட்டை நடத்த பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ஜெலன்ஸ்கி.. ஆனா ஒரு சிக்கல்!

Published On 2024-08-24 02:29 GMT   |   Update On 2024-08-24 02:29 GMT
  • போா் குறித்து விவாதிப்பதற்காகக் கடந்த ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்தின் முதல் உக்ரைன் அமைதி மாநாடு நடந்தது
  • கடந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியா அமைதித் தீர்மான கம்யூனில்[communique] சேராமல் தவிர்த்து விட்டது.

பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக போலாந்து சென்று அங்கிருந்து 7 மணி நேரம் ரெயில் பயணமாக நேற்று [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார். அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவ் -இல் சந்தித்த மோடி, போர் நிறுத்தம், இருநாட்டு உறவுகள் குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி இரண்டாவது உக்ரைன் அமைதி மாநாட்டை ஏற்று நடந்த பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

 

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் போா் குறித்து விவாதிப்பதற்காகக் கடந்த ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்தின் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் முதல் உக்ரைன் அமைதி மாநாடு நடந்தது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆனால் ரஷியா இதில் பங்கேற்காததால் மாநாடு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதற்கிடையே விரைவில் 2 வது மாநாட்டை நடத்த உக்ரைன் திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில் தெற்கு நாடுகளில் ஒன்று இந்த 2 வது மாநாட்டை ஏற்று நடத்த வேண்டும் என்று விரும்புவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா, கத்தார், துருக்கி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனும் மாநாட்டை நடத்துவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்த ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியிடமும் இதுகுறித்து பேசியதாகத் தெரிவித்தார். இந்தியா மிகப்பெரிய நாடு, மிகப்பெரிய ஜனநாயகமாக உள்ளது. இருந்தாலும்கடந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியா அமைதித் தீர்மான கம்யூனில்[communique] சேராமல் தவிர்த்து விட்டது. எனவே 2வது மாநாட்டை இந்தியா நடத்துவதில் சிக்கலும் இருக்கிறது என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News