செய்திகள்
இருமுடிகட்டி செல்லும் பக்தர்கள்

சபரிமலையில் கட்டுப்பாடுகளால் சென்னை ஐயப்பன் கோவில்களுக்கு இருமுடிகட்டி செல்லும் பக்தர்கள்

Published On 2020-12-14 05:43 GMT   |   Update On 2020-12-14 05:43 GMT
இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல முடியாததால் ராஜா அண்ணாமலைபுரம், அம்பத்தூர், செங்கல்பட்டு ஐயப்பன் கோவில்களிலும் இருமுடி கட்டி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வார்கள்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தினசரி ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் ஆன்-லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் 24 மணி நேரத்துக்குள் செய்து கொண்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம். இத்தனை கட்டுப்பாடுகளையும் ஏற்று சென்றாலும் நெய் அபிஷேகத்துக்கு அனுமதி கிடையாது.

இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளால் ஆண்டுதோறும் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மாலை அணிவதை தவிர்த்து விட்டனர். வீடுகளிலேயே விரதம் மேற்கொண்டு ஐயப்பன் பூஜையில் ஈடுபட்டுள்ளார்கள்.

பலர் மாலை அணிந்து கட்டுப்பாடுகள் தளரலாம், அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில் சிலர் 18 படிகளுடன் அமைந்துள்ள உள்ளூர் ஐயப்பன் கோவில்களுக்கு இருமுடி கட்டி சென்று வருகிறார்கள்.

சென்னையை பொறுத்த வரை மடிப்பாக்கம், அம்பத்தூர், செங்கல்பட்டு, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் 18 படிகளை கொண்ட ஐயப்பன் கோவில்கள் அமைந்துள்ளன.

மடிப்பாக்கம் ஐயப்பன் கோவிலில் சபரிமலை கோவில் விதிகளின்படியே தினசரி வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

கோவில் மேல் தளத்துக்கு சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது.

இருமுடிகட்டி வரும் பக்தர்கள் பதினெட்டு படி வழியாக ஏற அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல முடியாததால் பலர் கட்டுகட்டி இங்கு வருகிறார்கள். படியேறி சென்றதும் இருமுடியை பிரிப்பதற்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. அபிஷேக நெய்யை சன்னிதானத்தில் ஒப்படைத்துவிட வேண்டும்.

கடந்த ஒருவாரமாக இருமுடி தாங்கி பக்தர்கள் வர தொடங்கி இருப்பதாகவும் இந்த மாத இறுதியில் இருந்து பக்தர்கள் வருவது அதிகரிக்கலாம் என்றும் குருசாமி ஹரீஷ் தெரிவித்தார்.

இதேபோல் ராஜா அண்ணாமலைபுரம், அம்பத்தூர், செங்கல்பட்டு ஐயப்பன் கோவில்களிலும் இருமுடி கட்டி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வழக்கமாக சபரிமலைக்கு செல்ல இயலாத வயதான ஒரு சிலர்தான் இந்த கோவில்களுக்கு கட்டு கட்டி செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News