கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டம் கைவிடப்பட்டதா?
- புதிய திட்டத்தை அனைத்து தரப்பினரும் மத்திய, மாநில அரசுக்கும், ரெயில்வேக்கும் கோரிக்கை வைக்க வேண்டும்.
- ரெயில்பாதை குறித்தும், திண்டிவனம் புதுவை ரெயில் பாதை குறித்தும் விளக்கம் கேட்டிருந்தோம்.
புதுச்சேரி:
புதுவை ரெயில் பயணிகள் சங்க தலைவர் கருப்பசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி குப்தா தலைமையில் கடந்த 6-ம் தேதி புதுவை கவர்னரை சந்தித்தனர். புதுவை ரெயில்நிலைய மேம்பாடு, சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் வரை ரெயில் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இந்த ரெயில்பாதை குறித்தும், திண்டிவனம் புதுவை ரெயில் பாதை குறித்தும் விளக்கம் கேட்டிருந்தோம்.
ரெயில்வே நிர்வாகம் அனுப்பிய பதிலில், கிழக்கு கடற்கரை சாலை ரெயில்பாதை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. திண்டிவனம் நகரி, புதுவை ரெயில்பாதை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மறு ஆய்வு செய்து புதிய திட்டத்துக்கு கணக்கெடுப்பு நடத்துவதாக கூறியுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு திண்டிவனம், புதுவை, கடலூர் புதிய ரெயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புதிய திட்டத்தை அனைத்து தரப்பினரும் மத்திய, மாநில அரசுக்கும், ரெயில்வேக்கும் கோரிக்கை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.