புதுச்சேரி

புதுவையில் மேலும் ஒரு போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-02-19 12:38 IST   |   Update On 2023-02-19 12:38:00 IST
  • மடுகரையை சேர்ந்த போலீஸ்காரர் மலையராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுவை காவல்துறையில் பணிபுரியும் மற்ற போலீஸ்காரர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
  • மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது39). இவர் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

நேற்றுமுன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற நாகராஜ் அங்கு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோக சம்பவம் மற்ற போலீசாரின் மனதில் மறையாத நிலையில் புதுவையில் மேலும் ஒரு போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது பற்றிய விவரம் வருமாறு:-

புதுவை நெட்டப்பாக்கம் அருகே மடுகரை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மலையராஜா (வயது48). இவர் மடுகரை மற்றும் நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து கடந்த சில மாதங்களாக புதுவை போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகில் உள்ள காவல்கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சமீப காலமாக மலையராஜா நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மலையராஜாவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மலையராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

வீட்டின் பின்புறத்தில் உள்ள சிமெண்ட்டு சீட் போட்ட கூடாரத்தில் அவர் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.

படுக்கையில் இருந்து வெளியே சென்ற கணவர் வெகுநேரமாக திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி பிரேமா வீட்டின் பின்புறத்துக்கு சென்று பார்த்தார். அப்போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு பிரேமா அலறினார்.

உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தூக்கில் இருந்து மலையராஜாவை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மலைய ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அவரது மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்றுமுன்தினம் கோரிமேட்டில் போலீஸ்காரர் நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்ட நிலையில் தற்போது மடுகரையை சேர்ந்த போலீஸ்காரர் மலையராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுவை காவல்துறையில் பணிபுரியும் மற்ற போலீஸ்காரர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News