2024 ரீவைண்ட்: நாட்டையே பதறவைத்த மணிப்பூர் கலவரம்
- கடந்த ஆண்டு முதல் மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது.
- அங்கு பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது.
மணிப்பூர்:
மணிப்பூரில் குக்கி, மைதேயி இன மக்களுக்கு இடையே கடந்தாண்டு முதல் மோதல் போக்கு நிலவிவருகிறது. இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலால் மணிப்பூரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பல மக்கள் குடும்பத்தையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது.
வன்முறையைக் கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவ நிறுவனங்களுடன், மத்திய துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டது. அவர்கள் அதிக பதற்றமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலின் 5 மாவட்டங்களிலும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
3 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளை தீயிட்டு எரித்ததால் பதற்றம் அதிகரித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.
இதனால் மணிப்பூரில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது. ஆனாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது. ஜனாதிபதி இந்த பிரச்சனையில் தலையிடவேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.