சென்னை ஓபன் டென்னிஸ் - லிண்டா, மக்டா லினெட் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
- மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
- நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டங்கள் இன்று இரவு 7 மணிக்கு நடந்தன.
முதல் அரையிறுதியில் அர்ஜெண்டினாவின் நாடியா போடோரோஸ்கா, செக் குடியரசைச் சேர்ந்த லிண்டாவுடன் மோதினார். இதில்
முதல் செட்டை இழந்த லிண்டா, அடுத்த இரு சுற்றுகளை கைப்பற்றினார்.
இறுதியில், லிண்டா 5-7, 6-2 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது அரையிறுதியில் போலந்தின் மக்டா லினெட், இங்கிலாந்தின் கேத்தே சுவானுடன் மோதினார். முதல் செட்டில் 3 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக சுவான் விலகினார். இதனால் லினெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் லிண்டாவும், மக்டா லினெட்டும் மோத உள்ளனர்.
இறுதிப் போட்டியை நேரில் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையும் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.