என் மலர்
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து தென்காசி வருகை தந்தார்.
- நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து தென்காசி வருகை தந்தார். அவருக்கு தென்காசி மாவட்ட எல்லையான ஆலங்குளத்தில் அழகு ட்ரைவ்-ன் ஓட்டல் அருகில் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், நகரச்செயலாளர் நெல்சன், காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், மாவட்டபிரதிநிதி வாசு, மாறன், இளைஞரணி ரமேஷ், அத்தியூத்து கோமு, தளபதி முருகேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூர் செயலாளர்கள், தி.மு.க. மாநில, மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- லாரியை திருவனந்தபுரத்தை சேர்ந்த லிஜு (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.
- இன்ஸ்பெக்டர் ராஜா லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார்.
கடையநல்லூர்:
சிவகிரியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு பால் டேங்கர் லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை திருவனந்தபுரத்தை சேர்ந்த லிஜு (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 4 மணி அளவில் கடையநல்லூர் போலீஸ் குடியிருப்பு அருகே வந்த போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
இதனால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் வாகனங்களால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார். இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தடுப்பு சுவரில் சிக்னல் அமைக்காததால் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆவுடையானூர் செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
- தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்களை தொற்று நோய் பாதிக்கும் நிலை உள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி சந்தை அருகே நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் இருந்து ஆவுடையானூர் கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சிய ளிப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக மார்க்கெட் சாலை அருகே முகப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. தேங்கி நிற்கும் மழை நீரால் துர்நாற்றம் வீசி வருவதால் கொசுக்கள் கிருமிகள் மூலம் பொதுமக்களை தொற்று நோய்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் அருகே குண்டும் குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்புவ தோடு, முறையாக புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
- கட்சி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் பெயர் அடங்கிய பூத்கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் நாடார் திருமண மண்டபத்தில் ஆலங்குளம் நகரம் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கிளை செயலாளர்களுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலங்குளம் நகர செயலாளர் சுப்பரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.பி. பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் பெயர் அடங்கிய பூத்கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, ஆலங்குளம் நகர துணை செயலாளர் சாலமோன்ராஜா, ராமலிங்கம், புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பால் விநாயகம், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வீரபாண்டியன், பூலாங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிக்சன், தங்கசாமி முத்தையா, தனபால், குமரன், செந்தில் முருகன். பெரியபாண்டியன், முத்துராஜ், ஐசக் சேகர், சத்தியராஜ் உள்பட அ.தி.மு.க. நகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் சத்துணவு அமைப்பாளர்களிடம் தட்டு மற்றும் டம்ளர் வழங்கினார்.
- நிகழ்ச்சியில் துணை சேர்மன் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
அரசு மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு, முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளிகளில் செயல்பட்டு வருவதையொட்டி அனைத்து குழந்தைகளுக்கும் தட்டு மற்றும் டம்ளர் வழங்கும் விழா வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி சத்துணவு அமைப்பாளர்களிடம் தட்டு மற்றும் டம்ளர் வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய கணபதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலகர் (சத்துணவு) மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உள்ளார் விக்கி, தி.மு.க. கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மருத்துவர் சந்தியா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை செய்தார்.
- முகாமில் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் நெல்லை கேன்சர் சென்டர் மருத்துவர் சந்தியா கலந்து கொண்டு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை செய்தார். முகாமில் புற்றுநோய் தடுக்கும் விதமாக விதமாக பிளாஸ்டிக் பை ஒழித்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி தலைவர் முகம்மது உசேன், துணை தலைவர் ராமலெட்சுமி சங்கிலி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவனம் செய்திருந்தது.
- காலிமனையில் மரங்கள் இருந்ததால் அதனை அகற்றும் நிலை ஏற்பட்டது.
- ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியின் மரத்தை மறு நடவு செய்தனர்.
தென்காசி:
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சக்திநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் தங்கள் காலிமனையில் வீடு கட்டும் பணி தொடங்க இருந்தனர். அந்த காலி மனையில் மரங்கள் இருந்ததால் அதனை அகற்றும் நிலை ஏற்பட்டது. மரங்களை விறகிற்காக வெட்டுவதற்கு மனமின்றி அதனை வேருடன் அகற்றி மறு நடவு செய்வதற்கு முடிவு செய்தனர்.
இதற்காக ஆலங்குளத்தில் உள்ள பசுமை இயக்கம் தன்னார்வலர்களை தொடர்பு கொண்டனர். இதனையடுத்து தென்காசி சென்ற தன்னார்வலர்கள் அங்கிருந்த வேம்பு, புங்கை என காலிமனையில் இருந்த 3 மரத்தை வேருடன் எடுத்து ஆலங்குளம் கொண்டு வந்தனர். ஆலங்குளம் தீயணைப்பு நிலையம் முன்பு ஆலங்குளம் மருத்துவர் புஷ்பலதா ஜான் ஏற்பாட்டில் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியின் மரத்தை மறு நடவு செய்தனர். மரம் நடும் நிகழ்வில் பசுமை இயக்கம் தன்னார்வலர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
- சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகிய வற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும்.
- மாவட்டத்தில் 17 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு கூட்டம் அனைத்துதுறை அலுவ லர்களுடன் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அரசு கட்டிடங்கள், சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களின் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும். நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அன்றாட பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொது சுகாதார துறையின் மூலம் தேவையான மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைக ள் இறப்புகள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு எடுத்து நிவாரண உதவி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 17 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
மழைகாலங்களில் ....
அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படும். பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மழைகாலங்களில் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடித்தண்ணீரில் குளோரின் கலந்த குடித்தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துறை அலுவலர்களும் வருகின்ற வடகிழக்கு பருவமழையினை உரிய முன்னேற்பாடுகளுடன் எதிர்கொண்டு இயற்கை இன்னல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சங்கர், தனது வீட்டை விற்று லட்சக்கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார்.
- வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சங்கர் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). இவர் ஜவுளி வியாபாரியான இவர் இந்து முன்னணி நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவர் பங்கு சந்தையில் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.
பங்குசந்தையில் முதலீடு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் தனது வீட்டை விற்று லட்சக்கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டதால், அவரது பங்கு சரிவு ஏற்பட்டு நஷ்டம் அடைந்ததாகவும், அதனை சரிசெய்ய வேறு இடங்களில் கடன் வாங்கி முதலீடு செய்து அந்த பணத்தையும் அவர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சங்கர், கடந்த 2 நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இரவு நேரம் வரை அவர் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.
அப்போது அவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அவரது மனைவி சண்முகப்பிரியா கதறி அழுதார். தகவல் அறிந்து அங்கு வந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், சங்கர் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் அடையும் வரையில் ஒரு கோடிக்கும் மேலான பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழா முதல்-அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது போன்று மாவட்ட கழகம் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் சார்பிலும் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும், தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் சிறப்பாக நடத்த வேண்டும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் தலைமையில் நடைபெற்றது.
- குடிநீர் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தென்காசி:
கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மாணிக்க ராஜ், துணைத்தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ. 1,000 வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கீழப்பாவூர் பேரூராட்சி பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொது சுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வது, மேலும் நடப்பு ஆண்டு அரசின் திட்ட நிதி மற்றும் பொதுநிதியின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலை, வடிகால், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வரப்பெற்றுள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் வார்டு உறுப்பி னர்களின் ஆதரவோடு நிறை வேற்றப்பட்டு வேலை உத்தரவு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
- வட்டார வாரியாக 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை செயின் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெயிடுதல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரக்கூடிய மாணவ- மாணவிகளில் தமிழ் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்களுக்காக மாவட்ட கலெக்டர் தலைமையிலும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையிலும் ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒருங்கிணைப்பு தமிழ் ஆசிரியர்கள் மொத்தம் 152 பேர் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரம் வாரியாக இந்த 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டு இவர்களின் செயல்பாடுகளை கவனிக்க 29 தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 55 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.தொடர்ந்து மாவட்டம் முழுமையும் ஒரே மாதிரியாக இந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மாதம் இருமுறை இந்த மாணவர்களுக்கு தேர்வும் நடத்தி அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு செய்து மாதம் 2 முறை அறிக்கைகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்தையா அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.