search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • இலவச கண் மருத்துவ முகாமில் சுமார் 800 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர்.
      • கைப்பேசியினால் கண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

      நெல்லை:

      வாசுதேவநல்லுார் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் வாசுதேவநல்லுார் எஸ். தங்கப்பழம் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது.

      எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துமனை மருத்துவர் அபிநயா, விழி ஒளி ஆய்வாளர்கள் இந்திரசுந்தரி, ராமபிரியா, முகாம் மேலாளர் சேக்அப்துல்லா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

      எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் பயிலும் மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் 800 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர்.

      இதில் கண் எவ்வாறு பாதுகாப்பது , கைப்பேசியினால் கண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகள், கண்புரை, வயது முதிர்வு சார்ந்த கண் நோய்கள், சீரான உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு சிகிச்சை முறைகளை கண் மருத்துவ குழுவினர்களால் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

      முகாமிற்கான ஏற்பாடுகளை இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள் மற்றும் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள அலுவலர்கள் செய்திருந்தனர்.

      • நெசவாளர் காலனி பூங்காவில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
      • இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் இலவன்குளம் சாலையில் உள்ள நெசவாளர் காலனி பூங்காவில் விதைப்போம் வளர்ப்போம் குழு சார்பில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இதில் பசியில்லா சங்கரன்கோவில் அறக் கட்டளை நிறுவனர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      இதற்கான ஏற்பாட்டினை சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மற்றும் குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர். கோவில்பட்டி வட்டம் இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.

      • பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
      • விழாவில் 138 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

      ஆலங்குளம்:

      கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் திரவியக்கனி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜுலியா டெய்சி மேரி வரவேற்றார்.

      மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன், மாநில சுற்றுச்சூழல் அணித்தலைவர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் பங்கேற்று 138 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினர்.

      இவ்விழாவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட பிரதி நிதிகள் சீ.பொன் செல்வன், முத்து ராஜ், பொறியாளர் அணி துணை அமைச்சர் சிவராஜன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன், பெத்த நாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி, ஒன்றிய கவுன்சிலர் நாக ராஜன், இளைஞரணி கோமு, நிர்வாகிகள் தளபதி முருகேசன், தங்கச்சாமி, முயல், சீதாராமன், செந்தில், காளிமுத்து, மாரி முத்து, மோகன், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவ குமார், சச்சின், ஜெயக்குமார், ஓவிய ஆசிரியர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • தக்காளி விலை அதிகரிப்பானது நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
      • விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.

      தென்காசி:

      தமிழகத்தில் தக்காளி விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் அதன் விலையானது கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வரை வரலாறு காணாத அளவில் ஏற்றத்துடன் காணப்பட்டு வந்ததால் குடும்பப் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

      தக்காளி விலை அதிகரிப்பானது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்தைகளாக விளங்கி வரும் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை மார்க்கெட்டுகளிலும் அதன் விலையானது அதிகரித்த வண்ணமே இருந்தது. காரணம் உள்ளூர் விவசாயிகளிடம் அதிக அளவில் தக்காளி விளைச்சல் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

      தக்காளி விலையேற்றத்தை அறிந்து பாவூர்சத்திரம், வீரகேரளம்புதூர், சுரண்டை, இலத்தூர், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட தொடங்கினர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.

      பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகளவில் இருப்பதால் அதன் விலையானது கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மேலும் இதன் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

      எனவே விளைச்சல் அதிகம் இருக்கும் வேளாண்மை பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

      • மாசற்ற காற்று, மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும்.
      • சர்வதேச தூய காற்று தினம் 2020-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் 2023-ஐ முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தினை கலெக்டர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

      பின்னர் அவர் பேசியதாவது:-

      காற்று மாசுபாடு பூமியின் சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது. மாசற்ற காற்று, மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவையாகும்.

      ஆகவே 2019-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதன் நிலையான வளர்ச்சி குறித்த தனது 74-வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

      இதன் நோக்கமானது 2030-ம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள வேதிப்பொருட்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நோய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து அதன் மூலம் அனைவருக்கும் சுத்தமான காற்று என்ற தீர்மானத்தை ஐ.நா. ஏற்றுக்கொண்டது. எனவே காற்றின் தரம் மற்றும் கழிவு மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை குறைக்க நாமும் நமது பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும்.

      இந்த ஆண்டுக்கான செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படும் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினத்தின் கருப்பொருளான "தூய காற்றிற்காக ஒன்றி னைவோம்" என்பதை நாம் அனைவரும் நடைமுறைப் படுத்தி நீலவானின் தூய காற்றினை பெற்றிடுவோம்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      நிகழ்ச்சியில் உதவி சுற்றுசூழல் பொறியாளர் சுகுமார், உதவி பொறியாளர் சுற்றுசூழல் ஜெபா , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

      • விழாவில் முதல் நாள் காலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
      • சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

      கடையம்:

      கடையம் அருகே உள்ள கோதாண்ட ராமபுரம் சந்தன மாரியம்மன் கோவில் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.இதைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முதல் நாள் காலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. மாலையில் மங்கள இசை, திருமுறை பாராயணத்துடன் விழா தொடங்கப்பட்டது.

      பின்னர் மகாகணபதி பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி , யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதையடுத்து 2-வது நாள் இரண்டாம் கால யாக பூஜை, மகாகணபதி பூஜை பின்னர் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

      • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.
      • முகாமில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிச்சான்பட்டி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினர்.

      இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், குறிச்சான்பட்டி ஒன்றிய கவுன்சிலர் முரளிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      நிகழ்ச்சியில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர், முதல் நிலை அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு, அன்பழகன், வாடியூர் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிசாமி, குறிச்சான்பட்டி ஊராட்சி தலைவர் மகர ஜோதி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் முத்துலெட்சுமி, ஆலங்குளம் வட்டார மருத்துவர் ஆறுமுகம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி மற்றும் மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      • குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர்.
      • விளையாட்டுப் போட்டிகளில் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

      தென்காசி:

      பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானுார் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தினவிழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தின விழா கொண்டாடப்பட்டது.

      பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார். மாணவி சுதர்சினி வரவேற்று பேசினார். மாணவி வைஷ்ணவி ஆசிரியர் தின விழா கொண்டாடுவதன் நோக்கத்தை எடுத்து கூறினார். 10-ம் வகுப்பு மாணவிகள் பள்ளி ஆசிரியைகள் எவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நாடகம் மூலம் எடுத்து கூறினர்.

      தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக திசையன்விளை வி.எஸ்.ஆர். கல்விக்குழுமம் நடத்திய 4 மாவட்டங்களுக்கு இடையேயான கபாடி போட்டியில் பள்ளி மாணவர்கள் 0-14 மற்றும் யு-19 பிரிவில் விளையாடி வெற்றி கோப்பையை கைப்பற்றினர். மேலும் கோவில்பட்டியில் வித்யாபாரதி நடத்திய பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

      சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு கலை-விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் திறம்பட பங்கேற்று வெற்றி பெற்றனர்.

      வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவின்போது பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களால் ஆசிரியைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் ஆசிரியைகள் உற்சாக மாக கலந்து கொண்டனர்.

      முடிவில் மாணவி ஆஸ்மி நன்றி கூறினார்.

      • முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி விழாவில் கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
      • விழாவின் போது பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் அ.தி.மு.க. சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி பொருளாளர் மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

      விழாவில் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், தலைமை நிலைய பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், நகர அவை தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், நகர பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, எழில்நகர் கிளை செயலாளர் பாபு, களப்பாகுளம் கிளை செயலாளர் பசும்பொன், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் முருகன், செந்தில்குமார், குட்டி மாரியப்பன், சிவஞான ராஜா உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

      • கூட்டத்தில் சாலை வசதிகள் உள்ளிட்ட 45 பொருள் குறிப்புகள் நிறைவேற்றப்பட்டது.
      • காய்-கனி சந்தையில் உரிமம் புதுப்பிக்காத கடைகளை திரும்ப ஏலம் விட வேண்டும்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சி சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் சங்கரசுப்பிமணியன் பொருள் குறிப்புகள் வாசித்தார்.

      கூட்டத்தில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம், ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் வெண்கல சிலை புதிதாக திறப்பு மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி மன்றத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்கியதற்கு ஆலங்குளம் பேரூராட்சி மன்றம் சார்பாக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் பேரூராட்சி பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொது சுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் உள்ளிட்ட 45 பொருள் குறிப்புகள் நிறைவேற்றப்பட்டது.

      தொடர்ந்து உறுப்பினர் சாலமோன் ராஜா பேசுகையில், ஆலங்குளம் பஸ் நிலைய கழிவறையை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும். காய்கனி சந்தையில் உரிமம் புதுப்பிக்காத கடைகளை திரும்ப ஏலம் விட வேண்டும் என பேசினார். உறுப்பினர் பழனிசங்கர் பேசுகையில், போலீஸ் நிலையம் அருகில் நான்கு வழிச்சாலைக்காக அமைய உள்ள பாலத்தின் அடியில் பள்ளி மற்றும் தகன எரிமேடைகளுக்கு மக்கள் செல்லும் வகையில் பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிளை வலியுறுத்த வேண்டும் என்றார்.

      உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகையில், தனியார் பள்ளிகள் மிக குறைந்த அளவே சொத்துவரி செலுத்தி வருகின்றனர். அவர்கள் கட்டிட அளவுக்கு தக்க நியாயமான சொத்து வரி வசூலிக்க வேண்டும் எனவும், உறுப்பினர் சுந்தர் பேசுகையில், பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி பன்றிகள் வளர்ப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசினர்.

      • மழலையர் பிரிவு மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை போன்று உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
      • மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் பாட்டு பாடி நடனமாடி அசத்தினர்.

      தென்காசி:

      செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மழலையர் பிரிவு மாணவர்கள் கிருஷ்ணர் போன்றும் மாணவிகள் ராதை போன்றும் உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணை போன்ற பொருட்களை பள்ளிக்குக் கொண்டு வந்தனர்.

      கிருஷ்ணர் மற்றும் ராதை போன்று வேடம் அணிந்து வந்த மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் பாட்டு பாடி நடனமாடி அசத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா செய்திருந்தார்.

      • கே.டி.சி. நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
      • மாரிபாண்டியிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மூன்று சக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கீழப்பாவூர் எஸ்.கே.தெருவை சேர்ந்த மாரிபாண்டி (வயது 40) என்பது தெரியவந்து.

      அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.11 லட்சம் மதிப்பிலான 2,700 லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

      ×