என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இஷான் கிஷன்
நான் பேச மாட்டேன்...எனது பேட் பேசும்- இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன் பேட்டி

- ஒருநாள் போட்டியில் கிரிஸ் கெயில் சாதனையை முறியடித்தார் இஷான் கிஷன்.
- அதிவேக 150 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
வங்காளதேசம் அணிக்கு எதிராக சிட்டாகாங்கில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் 210 ரன்கள் குவித்தார். இதில் 126 பந்துகளில் அவர் இரட்டை சதம் அடித்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாக பதிவானது.
இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெயில் ஒரு நாள் போட்டியில் 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை கிஷன் முறியடித்துள்ளார். மேலும் கடந்த 2011 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 112 பந்துகளில் இந்திய வீரர் சேவாக் 150 ரன்கள் அடித்திருந்தார்.
இதன் மூலம் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக 150 ரன்கள் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். தற்போது அதை முறிடித்துள்ள கிஷன், நேற்றைய போட்டியில் 103 பந்துகளை எதிர்கொண்டு 150 ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஷான் கிஷன் கூறியுள்ளதாவது:
இந்திய அணியில் பெரிய வீரர்கள் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் விளையாடுகின்றனர். அதனால் இந்த நிலையில்தான் நான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. உங்கள் திறமையை வெளிப்படுத்த நீங்கள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே இடம் பெறுவீர்கள்,
ஏனெனில் இது ஒரு வாய்ப்பு, நீங்கள் பெரிய ஸ்கோரைப் பெற வேண்டும், ஒரு பெரிய வீரர் இப்படித்தான் உருவாகிறார், அவர் தனக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். அடுத்த போட்டியில் விளையாடுவேனா இல்லையா என்பது குறித்து நான் யோசிப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக விளையாடுவதே எனது வேலை. நான் அதிகம் பேசுவதில்லை, எனது பேட் தான் பேச வேண்டும் என நினைக்கிறேன்.
நான் விராட் கோலி அல்லது ஹர்திக் பாண்ட்யாவின் அர்ப்பணிப்பைப் பார்த்து, அவர்கள் வழியில் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை கொடுக்க முயற்சிக்கிறேன். நாங்கள் எந்த லீக் ஆட்டத்திலும் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல, எங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம்.
கோலியுடன் இணைந்து பேட் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் அந்த நேரத்தில் அது என் மனதில் இல்லை. அவருடன் பேட்டிங் செய்ய நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.