என் மலர்
செய்திகள்
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நடந்த தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
கிராமங்கள் வளர்ச்சி பெறும்போதுதான் முன்னேற்றம் உருவாகுகிறது. இதற்கு இந்திய தொலைத்தொடர்பு துறை வளர்ச்சியை உதாரணமாக சொல்லலாம். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரும் செல்போன் வாங்கிய பிறகுதான் தொலைத்தொடர்பு துறை உயர் வளர்ச்சியை அடைந்தது.
கிராமங்களின் ஆற்றலை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அதனால் தான் கிராமங்களை மேம்படுத்த மக்கள் நீதி மய்யம் ஆர்வம் காட்டுகிறது.
மக்கள் நீதி மய்யம் மூலம் ஸ்மார்ட் வில்லேஜ்ஸ் (கிராமங்கள்) உருவாக்கப்படும். ஸ்மார்ட் கிராமங்கள் உருவானால் மக்கள் கிராமங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு இடம் பெயரும் நிலை மாறும்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் விரைவில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்படும். அதில் கிராமங்கள் மேம்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக ஸ்மார்ட் வில்லேஜ் திட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படும்.
கிராமங்கள் உண்மையிலேயே ஸ்மார்ட்டாக மாறினால் மக்கள் இடம் பெயர்வதில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படும். கிராமத்து மக்கள் நகர் பகுதிகளுக்கு எப்போது செல்ல வேண்டும்? எதற்காக செல்ல வேண்டும்? என்பதை எல்லாம் தாங்களே தீர்மானிப்பார்கள்.
என்னை நான் அரசியலில் மேம்படுத்திக் கொள்ள தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுடன் கலந்து இருக்க ஆசைப்படுகிறேன். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பானவர்கள் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நான் பல்வேறு விதமான பங்களிப்பை அளித்த பிறகு தான் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளேன். எனவே தயவு செய்து என்னையும் அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
அரசியலில் நான் எடுத்து வைத்திருக்கும் அடி மிகவும் ஆபத்தானது என்பதை நான் நன்கு அறிவேன். அரசியலில் நேர்மைக்கு இடமே இல்லை. ஆனால் அரசியலிலும் நான் நேர்மையை ஏற்படுத்த முயல்வேன்.
தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தயவு செய்து அரசியலுக்கு வாருங்கள். நீங்கள் எனது கட்சிக்குதான் வரவேண்டும் என்பதில்லை. அரசியலுக்கு வந்தால் போதும்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். அரசியலில் உள்ள அழுக்குகளை விரட்ட வேண்டும். அதற்கு நாம் ஒன்று சேர்ந்தால் பெரிய ஆறாக மாறி அந்த அழுக்குகளை அகற்ற முடியும்.
எனக்கு இப்போது 63 வயதாகிறது. என்னிடம் எந்த லட்சியமும் இல்லை. அதுபோன்று எந்த தியாகமும் இல்லை. ஆனால் கடமை இருக்கிறது.
அந்த கடமையின் பலன்களை பார்ப்பதற்கு நான் இல்லாமல் கூட போகலாம். ஆனால் அடுத்த தலைமுறையினர் அந்த கடமையின் பலனை நிச்சயம் அனுபவிக்கும்.
எனவே உங்களுக்கும் அந்த கடமை உள்ளது. அந்த கடமையை நிறைவேற்ற நீங்களும் முன் வந்தால். இந்த மாநிலத்தை சிறப்பான மாநிலமாக மாற்ற முடியும்.
எனது நற்பணி மன்றத்தில் சுமார் 8 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக நற்பணிகளை செய்து வருகிறார்கள். அந்த நற்பணி இயக்கத்தின் மீது மக்கள் நீதி மய்யம் வலுவாக உருவாக் கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த பக்கமும் சாயாத நடுநிலையான கட்சியாகும். இடது பக்கமோ, வலது பக்கமோ நிச்சயம் சாயாது. ஆனால் சாமானிய மக்களின் குரலை பிரதிபலிக்கும் கட்சி யாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழும்.
உலக அளவில் குறிப்பாக ஐரோப்பாவில் நடுநிலை கட்சிகள்தான் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி மட்டுமே நடுநிலை கட்சியாக உள்ளது.
மாற்றங்கள் நிச்சயம் வரும். தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, சாதாரண மக்களிடமும் மாற்றங்கள் வரும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க.வினர் பேசுகின்ற போது பா.ஜ.க. மட்டும்தான் பரிசுத்தமான கட்சி, அதில் உள்ள சாதாரண உறுப்பினர்கள் முதல் பெரிய பதவியில் உள்ளவர்கள் வரை தேவதூதர்கள் போன்று, விவாதத்தின்போதும், பொது மேடைகளில் பேசுகின்ற போதும் பார்க்கலாம். அவர்களுக்கு மட்டும்தான் கொள்கை சித்தாந்தம் இருப்பது போன்றும், மற்ற கட்சிகளுக்கு எல்லாம் சாக்கடைகளில் இருந்து வந்தது போன்றும் பேசுகிறார்கள்.
ஒரு அமைச்சரின் உறவினருக்கு ராணுவ ஹெலிகாப்டர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு நிர்மலா சீதாராமன் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீதுள்ள கோபத்தில்தான் டெல்லி போனார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
எடப்பாடி பழனிசாமிக்கும்- ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே இப்போது தர்மயுத்தம் டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
பதவி இல்லையென்றால் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. முதலமைச்சர் பதவி வழங்கியவர்களுக்கே துரோகம் செய்தவர்கள், மற்றவர்களுக்கு துரோகம் செய்திட எவ்வளவு நாளாகும்.
அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பொது நலத்திற்கு சொன்னதை, சுயநலத்திற்காக பயன்படுத்தும் அளவுக்கு போயிருப்பதுதான் இன்றைய நிலை. இந்த ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் பா.ஜ.க. வேறு வழியின்றி மழுப்பல்தான் சொல்ல முடியும். ஏர் ஆம்புலன்சை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பார்கள்? அது தவறு அதனை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 6, 7 மாதத்தில் தேர்தல் வரும்போது இதற்கான விடைகள் அவர்கள் அனைவருக்கும் கிடைக்கும்.
பா.ஜ.க.விற்கு பயந்து பொதுச்செயலாளரையும், என்னையும் கட்சியை விட்டு ஒதுக்கினார்கள். நான் யாரையும் மிரட்டும் சுபாவம் கிடையாது. இவர்கள் சோதனை பயத்தினால் என்னை ஒதுங்க சொன்னார்கள். அவர்களுக்குதான் இப்போது இந்த நிலைமை வந்திருக்கிறது.
ஆர்.கே.நகர் தேர்தலில் என்னோடு ஆட்டோவில் தொங்கிக் கொண்டு ஓட்டு கேட்டவர்கள், தேர்தல் ஆணையத்தில் துணைப் பொதுச்செயலாளர் என்று அபிடவிட் வழங்கியவர்கள் திடீர் என்று மாற வேண்டிய அவசியம் என்ன?
எங்களை மக்கள்தான் கைதூக்கி விட வேண்டுமே தவிர, வேறுயாரும் எங்களை கைதூக்கி விட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் அம்மா வழி வந்த உண்மைத் தொண்டர்கள், கட்சித் தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தால்தான் அதுதான் எங்களுக்கு நிரந்தர ஆதரவு. மாயக்கரங்கள் எல்லாம் உதவி செய்தால் மக்கள் எங்களை நிராகரித்து விடுவார்கள்.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்ப்பில் நீதி எங்களுக்கு கிடைக்கும். நிச்சயம் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்.
பாராளுமன்றத்தில் 28 உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்பதற்காகத்தான் கவனிப்பதற்காக தங்கமணியும், வேலுமணியும் டெல்லி சென்று வந்தார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
இதுபோன்றதொரு அரசு தமிழகத்திற்கு தேவையா? இதற்காகத்தான் மக்கள் வாக்களித்தார்களா? அம்மா போன்ற எவ்வளவு பெரிய ஆளுமை. தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்காத ஆளுமை பெற்ற ஜெயலலிதாவால் வெற்றி பெற்றவர்கள். இதுபோல் நடந்து கொள்வதற்கு பெயர் என்ன? இது துரோகம். அதனால்தான் இந்த ஆட்சி போக வேண்டும் என்கிறேன்.
நான் முதலமைச்சர் ஆவதற்காக அல்ல. மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. தமிழகத்தில் எவ்வளவு எதிர்ப்பு அலைகள் இருக்கிறது என்பது ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற முடியாது என்று சொன்னவர்கள், தினகரன் பின்னால், கட்சியில்லை, எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்று சொன்னவர்கள் இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை தமிழக மக்கள் யோசித்தார்கள். எங்கள் தொண்டர்கள் கடுமையாக உழைத்தார்கள். துரோகத்திற்கு எதிராக எங்களுக்கு வாக்களித்தார்கள்.
சட்டமன்றத் தேர்தல் வந்தால் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். நான் சொல்வது நடக்கும். டி.டி.வி.தினகரன் என்கிற நபரின் ஆயுட்காலம் இருக்கின்றவரை என்னால் அந்த கட்சியோடு (பா.ஜ.க.) செல்ல முடியாது. காரணம் தமிழகத்தில் மதவாதத்திற்கு இடமில்லை. தனிப்பட்ட முறையில் விரோதம் எல் ம் கிடையாது. எங்கள் கொள்கைக்கும், அவர்களது கொள்கைக்கும் ஒத்துவராது.
எந்த பலன் கருதியும், வெற்றி, தோல்வியை வைத்து அரசியல் ஆதாயத்திற்காக கூட்டு செல்பவன் அல்ல என்று தெளிவாக சொல்லி விட்டேன்.
உண்மையிலேயே மத்தியில் ஆள்பவர்களுக்கு தமிழகத்தின் மீது அக்கறை இருந்தால், இங்கு நடக்கும் ஆட்சியை அவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வருகிறார்களோ, அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக அமையும். எந்த மாயக்கரங்களும் எங்களுக்கு தேவையில்லை. மக்களின் ஆதரவு இருந்தால் போதும்.
இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDinakaran #OPS #EPS
தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 95 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.
சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கருணாநிதியின் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. இதனால், அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு அவரது வீட்டில் கண்காணித்து வருகின்றனர்.
கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையினை கருத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வரவேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Karunanidhi #DMK #MKstalin
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள். அவர்களது விளக்கம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
விசாரணை ஆணையத்தில் 75-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் ஆஜராகி உள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மட்டுமே 20-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜெ.தீபா சார்பில் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை நீதிபதி விசாரித்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும், உணவு தயாரிக்கப்பட்டது குறித்தும் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் 29-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு நடத்தப் போவதாக நீதிபதி கூறினார்.
ஆய்வு நடத்த செல்லும் போது ஜெ.தீபா தரப்பினரை அனுமதிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் கூறியுள்ளார். அதற்கு மனுதாரர் தரப்பில் உள்ளவர்களை ஆய்வு செய்யும்போது அனுமதிக்க வேண்டியதில்லை என்று சசிகலா தரப்பிலும், நீதிபதி தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. #Jayalalithaa #inquirycommission
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணமலை கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த கிருஷ்ண மூர்த்தி, சந்தவாசலில் பணிபுரிந்த கணபதி, சாத்தனூர் அணையில் பணிபுரிந்த சந்திரன், திருக்காட்டுப் பள்ளியில் பணிபுரிந்த மதிவாணன், வேலாயுதம்பாளையத்தில் தலைமைக் காவலர் சிவசுப்பிரமணியன், வத்தராயிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளர் காளிமுத்து, திருச்சியில் போக்குவரத்துபிரிவு, சிறப்பு உதவிஆய்வாளர் சீராளன், கீழச்சீவல்பட்டியில் தலைமைக் காவலர் அண்ணாதுரை, சென்னை பட்டினப்பாக்கத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு, ஆற்காட்டில் பெண் தலைமைக் காவலர் அருள்மொழி, மற்றும் வேட்டைக்காரனிருப்பில் உதவிஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள்.
ஈரோடு மாவட்டம் சிறுவலூரில் தலைமை காவலராகப் பணிபுரிந்த மகேந்திரன், தூத்துக்குடி மாவட்டம், குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறையில் அவில்தாராகப் பணிபுரிந்த முருகேஷ் ஸ்ரீகாந்த், ஆழ்வார்திருநகரில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பால்ஐசக், சந்தவாசலில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த தசரா ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற அதிமுக அரசு சொத்து வரியை 50 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்துவரி 50 சதவிகிதமும், வாடகை குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவிகிதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவிகிதமும் சொத்து வரியை உயர்த்தி, வாடகைதாரர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களுக்கும், கடும்பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை இந்த என்கவுண்டர் எடப்பாடி அரசு ஏற்படுத்தி உள்ளது.
சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களுக்கு, வாடகையை உயர்த்தும் சூழ்நிலை ஏற்படும். இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும்.
மேலும் வாடகை உயர்வால் வணிகர்கள் தாங்கள் வணிகம் செய்யும் பொருளின் மீது கூடுதல் விலையை ஏற்றி, விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும், நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய நெருக்கடியான சூழலை உருவாக்க காரணம் என்ன?
கையாலாகாத அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்ற நிலையில், மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெற வேண்டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கும் மேற்பட்ட நிதியை இன்னமும் பெற முடியாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை வலுபடுத்த முடியாத நிலையிலும், ஆளும் அ.தி.மு.க. அரசு சொத்துவரியை மட்டும் உயர்த்தி வாடகைதாரர்கள், வணிகப் பெருமக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் வண்ணம் மக்களை சொல்லொணாத் துயரத்தில் இந்த நிர்வாகத் திறமையற்ற அ.தி.மு.க. அரசு தள்ளியிருக்கிறது.
மேலும் இங்கு உள்ளாட்சி அமைப்புகளினுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் அந்தந்த இருப்பிடத்திற்கு ஏற்ப வரியை நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள். ஆனால் இங்கு இன்னும் உள்ளாட்சி தேர்தலே நடத்தப்படாத நிலையில், அதிகாரம் உள்ளவர்களே இல்லாது மக்களுக்கு நெருக்கடியான துன்பத்தை தருக்கின்ற எந்த திட்டத்தையும் அறிவிக்க முடியாது.
எனவே அதிகாரமே இல்லாது அவசரகால நெருக்கடியில் சொத்து வரியை 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே மக்களை நெருக்குகின்ற சொத்து வரியை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
தவறும் பட்சத்தில் மக்களுக்கான களத்தில், போராட்டம் உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தே.மு.தி.க. இறங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, ஏற்கனவே பல நெருக்கடியில் உள்ள தமிழக மக்களை மேலும் நெருக்கடி நிலைக்கு ஆளாக்காமல் உடனடியாக சொத்துவரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth #ChennaiCorporation #PropertyTax
மத்திய அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்தில் எச்.ராஜா பேசும் போது கூறியதாவது:-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை தருவோம் என்று வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றியுள்ளோம். நாடு முழுவதும் 30 கோடி ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
7 கோடி வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. நிலையான ஆட்சி இருந்தால் மட்டுமே இது போன்ற சாதனைகள் சாத்தியமாகும்.
தற்போது சினிமாவில் ஓய்வு பெற்ற நடிகர்கள் முதல்வர் கனவில் உள்ளனர். அவர்கள் இளைஞர்கள் சிலரை வசப்படுத்தி தீய செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். அவர்கள் பின்னால் இளைஞர்கள் செல்ல வேண்டாம்.
வருமான வரி சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறது. அதன்படிதான் தமிழக அரசுடன் நட்பாக உள்ளது. இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja
மோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு, ஆம் என 8 சதவீதம் மக்களே கருத்து தெரிவித்துள்ளனர். பாதியளவு பலன் பெற்றதாக 23 சதவீத மக்களும், பலன் பெறவில்லை என 61 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.
இதேபோல் காவிரி ஆணையம் அமைய காரணம் குறித்த கேள்விக்கு மத்திய அரசுதான் என 14 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிக ஆதரவை அளித்துள்ளனர். 41 சதவீத மக்கள் உச்ச நீதிமன்றத்தால் காவிரி ஆணையம் அமைந்ததாக கூறியுள்ளனர். அ.தி.மு.க. காரணம் என என 21 சதவீத மக்களும், எதிர்க்கட்சிகள் காரணம் என 24 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு அருமை என 10 சதவீத மக்களும், நன்று என 11 சதவீத மக்களும், சராசரி என்று 28 சதவீத மக்களும், சரியில்லை என 35 சதவீத மக்களும், மோசம் என 16 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
2016ல் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..? என்ற கேள்விக்கு ஆம் என 11 சதவீதம் பேரும், ஓரளவு என 28 சதவீதம் பேரும், இல்லை என 61 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். #ThanthiTV #ThanthiTVOpinionPoll
அதன்பிறகு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை காரணம்காட்டி தேர்தல் ஆணையத்தில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், கடந்த 6 மாத காலமாக தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படவில்லை.
இந்த நிலையில், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட இருக்கிறது. இதுவரை நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில்தான் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், இந்த முறை அ.தி.மு.க.வுக்கு ராசியான சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
முதலில், ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டு, இந்த மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, 19-ந் தேதிக்கு அது மாற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
எனவே, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகை தரும் தி.மு.க. நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட உள்ளன. பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றுவது? என்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதுபோன்ற எந்த முடிவும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படாது என்று தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #DMK #MKStalin
கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்டு 10-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
விஸ்வரூபம்-2 படம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாடு இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் காரணம். அதில் எனக்கு வருத்தம் உண்டு. இந்த படத்தின் கதை உருவாக காரணம் அந்த வருத்தம்தான். 2007-ம் ஆண்டுக்கு முன்பு விஸ்வரூபம்-2 கதை எழுதப்பட்டது. அப்போது தசாவதாரம், மன்மதன் அம்பு என்ற கோணத்தில் பயணித்ததால் அப்போது எடுக்க முடியவில்லை.
எனவே இப்போது அதை சொந்தமாக தயாரித்துள்ளேன். விஸ்வரூபம்-1 படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய போதே தடைகளை தாண்டி விஸ்வரூபம்-2 படத்தை தொடங்கி விட்டோம். படத்தில் அரசியல் தொடர்பான வசனங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் படம் எடுக்கவில்லை.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த காலத்தில் தொழில் நுட்பம் கிடையாது. அதனால் அவர் தனது படங்களில் கட்சி கொடி, சின்னத்தை காட்டினார்.
விஸ்வரூபம்-2 படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் விஸ்வரூபம்-3 படத்தை எடுப்பது பற்றி யோசிப்பேன். விஸ்வரூபம்-2 படத்திற்கு எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன். அப்போது வந்த எதிர்ப்பு அரசியல் ரீதியானது. இப்போது படத்தை எதிர்க்கும் கெட்டிக்காரத்தனம் யாருக்கும் இல்லை.
விஸ்வரூபம்-1 படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்ப முடிவு செய்து இருந்தேன். ஆனால் தடைகள் ஏற்பட்டது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேறு ஒரு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டேன். அதனால் டி.டி.எச்.சில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. தியேட்டர்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக புதிய தொழில் நுட்பத்தை தடுக்கக்கூடாது.
இது எனது கடைசி படம் அல்ல. கட்சி பணியில் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அரசியலுக்காக சினிமா சம்பாத்தியத்தை தியாகம் செய்யமாட்டேன். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்கள் பணியை செய்வேன் என்று சொன்னதெல்லாம் பொய். எனது தொழில் சினிமா. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகும் நடித்தார்.
தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். முதலில் அங்கு உணவு பொருள் கட்டணத்தை குறைக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
மதுரை மாவட்டம், மேலூரில் இன்று பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட இல. கணேசன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கலாம். அதற்கான கட்சிப்பணிகளை மேலூரில் இருந்து தொடங்கி உள்ளோம்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என டி.டி.வி தினகரன் கருத்து கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே அமித்ஷா ஊழல்வாதிகளுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்து விட்டார்.
காவிரி பிரச்சனைக்காக போராடியவர்கள் இன்று யாரேனும் வயல்வெளியில் இறங்கி விவசாய பணிகளை செய்தார்களா? என்பது தான் தற்போதைய கேள்வி.
இதேபோல சேலம் தோல் தொழிற்சாலை, திருப்பூர் உள்ளிட்ட சாயப்பட்டறை செயல்படும் பகுதிகளிலும் நிலத்தடி தண்ணீர் மாசடைந்தது உண்மை. இதனை ஆய்வு செய்ய வேண்டும்.
தூத்துக்குடி சம்பவம் போல், சேலம் பகுதியில் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நீர் கடலில் கலந்து வீணாவதை அரசு தடுக்க வேண்டும். இதற்காக தஞ்சை பகுதிகளிலுள்ள ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
கவர்னர் பதவி என்பது திரையரங்கில் உள்ள தீ தடுப்பு வாளி போன்றது. கவர்னர் ஆய்வை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. பொது மக்கள் ஆதரிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan #OneNationOneElection
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஐம்பது சதவீதம் முதல் நூறு சதவீதம் வரை சொத்து வரியை திடீரென்று உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. ஊழலில் ஊறித்திளைக்கும் அ.தி.மு.க அரசு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.
மத்திய அரசின் மானிய உதவி தொகைகளை பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் வாடகை தாரர்கள், வணிகப் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வண்ணம் சொத்து வரியை உயர்த்தி மக்களை சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது ஆளும் அ.தி.மு.க. அரசு.
எனவே, கடுமையான இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்தும் உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு வருகின்ற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நகரக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிக் கழக நிர்வாகிகள் மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, இலக்கிய அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, நெசவாளர் அணி, ஆதி திராவிடர் நலக்குழு, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகர் அணி, சிறுபான்மை நலஉரிமை பிரிவு, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் பெருந்திரளாக பங்கேற்று, இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MKStalin #Propertytax