search icon
என் மலர்tooltip icon

    அரியானா

    • லாடோ லட்சுமி திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் 2100 ரூபாய் வழங்கப்படும்.
    • குறைந்தபட்ச ஆதாய விலை உத்தரவாதம், அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பு இடம் பிடித்துள்ளது.

    அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

    மத்திய உள்துறை மந்திரியும், பாஜக-வின் தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அம்மாநில முதல்வர் சைனி, மாநில தலைவர் மோகன் லால் படோனி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    தேர்தல் அறிக்கையில் முன்னாள் அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பு, குறைந்தபட்ச ஆதாய விலை உத்தரவாதம், பெண்களுக்கு நிதியுதவி ஆகியவை தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்துள்ளது.

    லாடோ லட்சுமி திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் 2100 ரூபாய் வழங்கப்படும். 10 தொழில் நகரங்கள் கட்டப்படும் என்றும், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    நாட்டிலுள்ள எந்த அரசு மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரியிலும் ஓபிசி, எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த ஹரியானா மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேட்பாளர்களின் 1,221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
    • 190 பேர் தங்களின் மனுக்களை திரும்ப பெற்றனர்.

    சண்டிகார்:

    பா.ஜ.க. ஆளும் அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இத்தேர்தலில் போட்டியிட பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 1,559 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவை பரீசிலிக்கப்பட்டு 1,221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

    வேட்பு மனுக்களை திரும்பப் பெற நேற்று (திங்கட்கிழமை) கடைசி நாள் என்ற நிலையில், 190 பேர் தங்களின் மனுக்களை திரும்பப் பெற்றனர்.

    இதையடுத்து, 1,031 வேட்பாளர்களுடன் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

    • கர்நாடகாவில் மசூதி அருகே விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது வன்முறை வெடித்தது.
    • போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை போலீஸ் வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகமங்கலா என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது.

    இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்பு போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை காவல்துறை வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.

    இந்த வன்முறை சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அரியானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இந்த வன்முறை சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    குருஷேத்ராவில் உரையாற்றிய மோடி, "நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதை தடுக்கிறது. இன்று இருப்பது பழைய காங்கிரஸ் கட்சி அல்ல. இன்றைய காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறிவிட்டது. பொய் பேசுவதற்கு காங்கிரஸ் வெட்கப்படாது. இன்று காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் கணபதியைக் கூட சிறையில் அடைக்கும் சூழல் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • குருஷேத்ரா பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
    • அதில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது என்றார்.

    சண்டிகர்:

    அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

    மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைவதற்குள் சுமார் 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமத்துவமான முறையில் வளர்ச்சிப் பணிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சியின் அரசியல் நாட்டில் பொய்யையும், அராஜகத்தையும் பரப்பும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. பொய்களைப் பேசுவதில் அவர்களுக்கு அவமானம் இல்லை.

    காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாசல பிரதேசத்தில் யாரும் இன்று மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில், அங்கு மாநில அரசு பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை நிர்வகிக்க தவறிவிட்டது.

    அரியானாவின் முதல் மந்திரி நயாப் சிங் சயினி மாநிலத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். முதலீடுகள் மற்றும் வருவாய் அடிப்படையில் அரியானா முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    மத்தியில் 3-வது முறை ஆட்சி செய்வதற்கு மக்கள் வாய்ப்பு வழங்கினார்கள். அதேபோல் அரியானாவிலும் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    • பேரவையின் பதவிக்காலம் நவம்பா் 3-ந் தேதி வரை இருந்தது.
    • காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா்.

    சண்டிகர்:

    அரியானாவில் முதல்- மந்திரி நாயப் சிங் சைனி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் சட்டப் பேரவையை முன்கூட்டியே கலைத்து, கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று நடவடிக்கை மேற்கொண்டாா்.

    அரசமைப்புச் சட்டத்தின் கீழ், மாநில பேரவை கடைசியாக கூடியதில் இருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்பட வேண்டும்.

    அரியானாவில் பேரவைக் கூட்டம் கடைசியாக கடந்த மாா்ச் 13-ந் தேதி நடைபெற்றது. எனவே, அடுத்த கூட்டத்தை செப்டம்பா் 12-ந் தேதிக்குள் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மாநிலத்தில் அக்டோபா் 5-ந் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் சூழலில், பேரவையை கூட்ட வேண்டியதை தவிா்க்க அதை முன்கூட்டியே கலைக்குமாறு கவர்னருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரைத்தது.

    இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 174 (2) (பி) பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பேரவையை கவர்னர் நேற்று (வியாழக்கிழமை) கலைத்தாா். அரசமைப்புச் சட்ட சிக்கல் ஏற்படாமல் தவிா்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இனி, காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா். அரியானா பேரவையின் பதவிக்காலம் நவம்பா் 3-ந் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார் சாவித்ரி ஜிண்டால்.

    சண்டிகர்:

    இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருந்து வருபவர் சாவித்ரி ஜிண்டால்.

    ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி பிரசாரம் செய்தார்.

    இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரியானாவின் ஹிசார் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்தார்.

    நேற்று பா.ஜ.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் லை பாஜக கடந்த புதன்கிழமை வெளியிட்டது. ஆனால் அதில் சாவித்ரியின் பெயர் இடம்பெறவில்லை. ஹிசார் தொகுதியில் எம்.எல்.ஏவாக உள்ளவரும், சுகாதார அமைச்சருமான கமல் குப்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரியானாவின் ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார்.

    பா.ஜ.க.வில் சீட் மறுக்கப்பட்டதால் கோடீஸ்வர பெண்மணி சுயேட்சையாக போட்டியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

    • காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் கவிதா தலால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
    • காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் எஸ் ஹூடா முன்னிலையில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற இரண்டு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று முன்தினம் 20 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    தொடர்ந்து இன்று காலை வெளியான 2-வது கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்பின் மதியம் 3வது கட்டமாக 11 வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. இந்நிலையில் தற்போது 21 வேட்பாளர்கள் கொண்ட 4 வது வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதுவரை ஆம் ஆத்மி கட்சி 61 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    தற்போது வெளியாகியுள்ள 4 வது பட்டியலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் கவிதா தலால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கவிதா தேவி என்ற பேயரில் அறியப்படும் கவிதா தலால் WWE உள்ளிட்டவற்றில் பங்கேற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். மேலும் ஜுலானா பகுதியைச் சேர்ந்தவரும் ஆவார்.

    இதன்படி இரண்டு மல்யுத்த வீராங்கனைகள் ஒரே தொகுதியில் மோத உள்ளனர். இதுதவிர்த்து பாஜக சார்பில் ஜுலானா தொகுதியில் யோகேஷ் பைராகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் எஸ் ஹூடா முன்னிலையில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். "நான் அரசியலுக்கு வருவது எனது அதிர்ஷ்டம். ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஜுலானா மக்கள் எனக்குக் கொடுக்கும் அன்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்" என்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, வினேஷ் போகத் தெரிவித்தார். 

    • பாரீஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை.
    • அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல் பாரீஸிலும் அரசியல் நடந்தது.

    பாரீஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தபோது தன்னை சந்தித்த இந்திய தடகள சங்க தலைவர் பி.டி. உஷா அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் ஆதரவு அளிப்பதுபோல் நடித்தார் வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியின் 53 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்திலும் அவர் தொடர்ந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை சந்தித்த இந்திய தடகள சங்கத் தலைவர் பி.டி. உஷா அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். மேலும், வினேஷ் போகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் பி.டி. உஷா படம் எடுத்து வெளியிட்டுள்ளார் என வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பாரீஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி. உஷா என்னை சந்தித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல் பாரீஸிலும் அரசியல் நடந்தது. இதனால் எனது மனம் உடைந்தது. மல்யுத்தத்தை விட வேண்டாம் என பலர் கூறினர். ஆனால், எதற்காக நான் அதனை தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது.

    நான் மருத்துவமனையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. வாழ்க்கையில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு ஆதரவு தருவதுபோல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி. உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் உங்களுடன் இருக்கிறேன் எனக்கூறுகிறார். இப்படியா ஒருவர் ஆதரவு தருவார்கள். இது வெறும் நடிப்பு. சரியான நடவடிக்கை இல்லை.

    இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.

    மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    • இரண்டு மந்திரிகள், ஒரு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் ராஜினாமா.
    • விசுவாச தொண்டர்கள் ஓரங்கட்டப்படுவதாக துணைத் தலைவர் குற்றச்சாட்டு.

    அரியானாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வேலை செய்து வருகிறது. அதேவேளையில் ஆட்சியை பாஜக-விடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்த முறை பாஜக ஆட்சியை தக்கவைக்க கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணி தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி வருவது அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே இரண்டு மந்திரிகள், எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மந்திரி கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அரியானா மாநில பாஜக-வின் துணைத் தலைவர் சந்தோஷ் யாதவ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

    கட்சிக்கு விசுவாசமாக உழைத்த தொண்டர்களை விட, உழைக்காதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என சந்தோஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், தனது ராஜினாமா கடிதத்தில் "கட்சிக்கான என்னுடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சிகள் கொள்கையை பின்பற்றியுள்ளேன். ஆனால் அடிமட்டத்தில் போராடி, பக்தியுடன் உழைத்து, கட்சியை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர்களை கட்சி புறக்கணித்து வருகிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொல்ல வேண்டும்.

    இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு கட்சிக்காகவும் தங்கள் சட்டமன்றத் தொகுதி மக்களுக்காகவும் உழைக்காத நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது கட்சியினர் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் பரப்பி வருகிறது" சந்தோஷ் யாதவ் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. சந்தோஷ் யாதவ் அட்டெலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால், மத்திய மந்திரி ராவ் இந்தரஜித் சிங்கின் மகள் ஆர்த்தி சிங் ராவிற்கு கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

    கடந்த சனிக்கிழமை முன்னாள் மந்திரி பச்சான் சிங் ஆர்யா பாஜகவில் இருந்து வெளியேறினார். சிஃபிடான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையிலா் ஜனநாயக் ஜனதா கட்சியில் இருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்த குமார் கவுதமிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ராஜினமானா செய்தார்.

    தற்போது சந்தோஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதால் இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அதற்கு முன்னதாக இரண்டு மந்திரிகள், ஒரு எம்எல்ஏ பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • அரியானாவில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    சண்டிகர்:

    அரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படும் என கருதப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

    ஆம் ஆத்மி கட்சி நேற்று முன்தினம் 20 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து இன்று 2-வது கட்ட பட்டியலையும் வெளியிட்டது. அதில் ஹென்ரி, சதௌரா, தானேசர், ரதியா, அதம்பூர், பர்வாலா, டைகான், பரிதாபாத் மற்றும் பவால் ஆகிய 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3வது கட்டமாக 11 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுவரை ஆம் ஆத்மி கட்சி 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 12-ம் தேதி கடைசி தேதியாகும்.

    கடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் போட்டியிட்டு, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    சண்டிகர்:

    90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் வகுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, 67 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க சமீபத்தில் வெளியிட்டது. சில வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், முன்னாள் துணை பிரதமரான தேவி லாலின் பேரன் ஆதித்யா தேவி லால் இன்று பா.ஜ.க.வில் இருந்து விலகி, இந்திய நேஷனல் லோக் தளம் கட்சியில் இணைந்தார். அவருக்கு அரியானாவின் தப்வாலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 2வது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலனூர் தொகுதியில் வேட்பாளர் ரேணு பாலாவை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தொண்டர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
    • ரேவாரி தொகுதியில் வேட்பாளர்கள் லட்சுமண் யாதவை மாற்றுமாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரண்டீர் கப்திவாஸ், அரவிந்த் யாதவ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    அரியானா:

    90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கு வருகிற அக்டோபர் 5-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் சூடு பிடித்துள்ளது.

    அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் வகுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க கட்சி, 67 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இந்த நிலையில் சில வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சில தகுதியற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ நரேஷ் கவுசிக், ஜஜ்ஜரின் பஹதுர்கர் தொகுதியில் தனது தம்பியை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    கலனூர் தொகுதியில் வேட்பாளர் ரேணு பாலாவை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தொண்டர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.

    ரேவாரி தொகுதியில் வேட்பாளர்கள் லட்சுமண் யாதவை மாற்றுமாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரண்டீர் கப்திவாஸ், அரவிந்த் யாதவ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    இல்லையென்றால் தங்களில் ஒருவர் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. கட்சி தலைமை ஈடுபட்டு உள்ளது.

    ×