என் மலர்tooltip icon

    கேரளா

    • அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா விசாரணை.
    • துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் புனியம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது49). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், பா.ஜ.க.வில் உள்ளூர் நிர்வாகியாக இருக்கிறார்.

    அவருடைய நண்பர் சந்தோஷ். கட்டிட ஒப்பந்த தாரரான அவர் பல புதிய கட்டிடங்களை கட்டி வந்துள்ளார். அவ்வாறு மாதமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டு கட்டிடத்திற்கு ராதா கிருஷ்ணனை நேற்று இரவு அழைத்துச் சென்றார்.

    அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சந்தோஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராதாகிருஷ்ணனை சுட்டார். இதில் அவரது மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    இந்தநிலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், சத்தம் வந்த கட்டிடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். சந்தோஷ் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தார்.

    உயிருக்கு போராடிய ராதாகிருஷ்ணனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். ராதாகிருஷ்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சந்தோசை கைது செய்தனர்.

    அப்போது அவர் குடி போதையில் இருந்துள்ளார். இதனால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ராதா கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின் றனர்.

    சந்தோஷ் எதற்காக ராதாகிருஷ்ணனை துப்பாக் கியால் சுட்டு கொன்றார்? என்பது உடனடியாக தெரிய வில்லை. அவர் பா.ஜ.க.வில் இருப்பதால் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆனால் முதற்கட்ட விசா ரணையில் அவரது கொலைக்கு அரசியல் காரணம் இல்லை என்பது தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொலைக்காக காரணம் குறித்து சந்தோசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சந்தோஷ் வைத்திருந்த துப்பாக்கி காட்டு பன்றிகளை சுடுவதற்கு பயன்படுத்தக்கூடியது ஆகும். அவர் காட்டுப்பன்றிகளை சுடும் குழுவில் இருப்பதால், துப்பாக்கியை உரிமம் பெற்று வைத்துள்ளார். அதனை பயன்படுத்தி நண்பரான ராதாகிருஷ்ணனை சந்தோஷ் கொலை செய்து விட்டார்.

    பா.ஜ.க. பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கைது செய்யப்பட்ட 2 பெண்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • கடத்தலில் தொடர்புடைய வேறு நபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு வரக் கூடிய விமானங்களில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுகிறது.

    இதுபோன்ற கடத்தலை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சில பயணிகள் சட்டவிரோதமாக விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் போதை பொருட்களை கடத்துவது நடந்தபடியே இருக்கிறது.

    இந்தநிலையில் பாங்காங்கில் இருந்து கொச்சி வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் கலப்பின கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானம் இரவில் கொச்சி வந்ததும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர்.

    அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மாடல் அழகியான மான்வி சவுத்ரி, டெல்லியை சேர்ந்த ஒப்பனை கலைஞர் சிபத் ஸ்வாந்தி ஆகிய இருவரும் 15 கிலோ கலப்பின கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் நடத்தப்படும் சோதனையில் கண்டுபிடிக்க முடியாத வகையில் 'மேக்கப்' பொருட்கள் இருந்த பெட்டியில் மறைத்து வைத்துகொண்டு வந்துள்ளனர். ஆனால் சுங்கத்துறையினர் அதனை கண்டு பிடித்துவிட்டனர். இதையடுத்து மாடல் அழகி மற்றும் பெண் ஒப்பனை கலைஞர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் கடத்தி கொண்டுவந்த ரூ4.5கோடி மதிப்புள்ள கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பெண்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கலப்பின கஞ்சாவை ஒரு கும்பலுக்கு கொடுப்பதற்காக கொச்சிக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

    மாடல் அழகியிடம் இருந்து கஞ்சாவை வாங்குவதாக கூறிய நபர்கள் யார்? என்று சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய வேறு நபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரளா கையெழுத்திடவில்லை.
    • கேரளாவுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும்

    கேரளாவின் பொதுக் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கேரளா கல்வி அமைச்சர் சிவன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய பங்கின் நிலுவைத் தொகை முறையே ரூ.280.58 கோடி மற்றும் ரூ.513.54 கோடி என்றும், 2025-26 ஆம் ஆண்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட தொகை ரூ.654.54 கோடி என்றும் தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், கேரளாவின் கல்வி நிதிக்கான பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதற்கும் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும் கேரளாவைப் பாராட்டும் மத்திய அரசு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

    • கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு குறைந்துள்ளதால் கேரளாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளன.
    • மத்திய அரசு எவ்வளவு நெருக்கடிகளை கொடுத்தாலும் கேரளா சிறப்பாக செயல்படுகிறது

    நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் போலவே கேரளா மாநிலமும் மத்திய அரசு கொடுக்கும் நிதி நெருக்கடிகளை எதிர்த்து வலுவாக எதிர்த்துப் போராடும் என்று கேரளா நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்துள்ளார்.

    கேரளா சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய நிதியமைச்சர் பாலகோபால், "மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு குறைந்துள்ளதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளன.

    பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது மத்திய அரசின் அக்கறையின்மை அணுகுமுறையால், நிதி ரீதியாக வலுவான நிலையில் இருந்த தெலுங்கானா போன்ற மாநிலங்கள் கூட இப்போது மத்திய அரசின் நிதிக் கொள்கையால் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

    மத்திய அரசு எவ்வளவு நெருக்கடிகளை கொடுத்தாலும் கேரளா சிறப்பாக செயல்படுகிறது. பல்வேறு சவால்களை சந்தித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸைப் போலவே, கேரளாவும் வலுவாக முன்னேறும்" என்று தெரிவித்தார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    இதையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம் சுனிதா வில்லியம்சை மீட்க சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது.

    இந்நிலையில்,க்ரு டிராகன் விண்கலம், நேற்று இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார்.
    • போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரசேரூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபூர்(வயது23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கோட்டக்கல் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    வசதி படைத்தவர் போன்று காட்டிக் கொண்டதால் அப்துல் கபூருடன் அந்த மாணவி நெருங்கி பழகி வந்துள்ளார். அதனை பயன்படுத்தி பல இடங்களுக்கு மாணவியை அப்துல் கபூர் அழைத்துச் சென்றுள்ளார்.

    ஓட்டலில் தங்கியிருந்த போது மாணவிக்கு உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்திருக்கிறார். இதனால் அந்த மாணவி போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். அதனை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்ற அப்துல்கபூர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    அந்த நேரத்தில் மாணவியை நிர்வாணமாக வீடியோவும் எடுத்திருக்கிறார். மாணவி பிளஸ்-1 படித்த கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான 5 ஆண்டுகளாக அப்துல் கபூரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபடி இருந்திருக்கிறார்.

    இந்தநிலையில் போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சையில் இருந்தபோது மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது தன்னை வாலிபர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி வரும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    மேலும் தன்னை அந்த வாலிபர் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்திருப்பதாகவும் கூறினார். அதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி கோட்டக்கல் போலீஸ் நியைத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிந்தனர்.

    மாணவிக்கு போதை மருந்து கொடுத்து சீரழித்த அப்துல் கபூர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்துல் கபூரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்கின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.
    • பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

    திருச்சூர்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அருகே மந்தாரத்தொடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 57). இவரது உறவினர்கள் சதானந்தன், விசாலாட்சி, ருக்மணி, கிருஷ்ண பிரசாத். இவர்கள் 5 பேரும் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சதானந்தன் ஓட்டி சென்றார்.

    அவர் செல்போனில் கூகுள் மேப் பார்த்தவாறு பாலக்காடு நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். திருச்சூர் அருகே கொண்டாழி-திருவில்யா மலை ஆகிய 2 பகுதிகளை இணைக்கும் காயத்ரி ஆற்றின் குறுக்கே எழுண்ணுள்ளத்து கடவு பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.

    பின்னர் கார், நீரில் மூழ்க தொடங்கியது. ஆற்றில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நபராக 5 பேரும் மீட்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் மூலம், ஆற்றில் இருந்து கார் மீட்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
    • பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது. கோவிலின் தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவிலில் விளக்கேற்றினார்.

    ஐயப்பன் கோவிலில் முதன்முறையாக பக்தர்கள் 18-ம் படி ஏறியதும் கொடிக்கம்பம் வழியாக நேரடியாக சென்று தரிசனம் செய்யும் புதிய நடைமுறை நேற்று அமல்படுத்தப்பட்டது. அதன்படி 18-வது படியில் ஏறிய பக்தர்கள், கொடிக் கம்பம் மற்றும் பாலிக்கல் மண்டபம் மற்றும் மேம்பாலம் வழியாக செல்லாமல், நேரடியாக கோவிலின் முன்புறம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதன்மூலம் பக்தர்கள் 30 முதல் 50 விநாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்தனர். மேலும் இந்த முறை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவியது. 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். அதன்பிறகு பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

    2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 11-ந்தேதி ஆராட்டு விழா நடைபெற உள்ளது.

    • நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்.
    • நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    தொடர்ந்து நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    முன்னதாக, "பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர், "பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்தது. நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்" என தெரிவித்தார்.

    சபரிமலையில், பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 1-ந்தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆராட்டு விழா தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 11-ந்தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.

    • தற்போது மற்றொரு மிகவும் ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரி கேரளாவிற்குள் நுழைந்துள்ளார்.
    • அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதாக ஐந்து ஆர்எஸ்எஸ்-பாஜக பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

    கேரள மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியில் மறைந்த காந்தியவாதி பி. கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

    இதில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் இடது ஜனநாயக முன்னணி (LDF) ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால் தற்போது மற்றொரு மிகவும் ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரி கேரளாவிற்குள் நுழைந்துள்ளார்.

    அதுதான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் பாஜகவை தோற்கடிக்க முடியும், ஆனால் ஆர்எஸ்எஸ் விஷம். இது குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இது நம் நாட்டின் கட்டமைப்பில் பரவினால், அனைத்தையும் அழித்துவிடும் என்று பேசினார். இந்த உரைக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

     

    துஷார் காந்தி தனது கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும்  அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதாக ஐந்து ஆர்எஸ்எஸ்-பாஜக  பிரமுகர்கள்  நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் நெய்யாட்டின்கரா நகராட்சி கவுன்சிலர் மகேசன் நாயரும் அடங்குவார்.

    இந்நிலையில் துஷார் காந்திக்கு எதிரான செயல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல் என்று கண்டித்துள்ளார்.

    காங்கிரசும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று ஊடகங்களிடம் பேசிய துஷார் காந்தி, கேரளாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை. வகுப்புவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்தையும் கருத்தையும் திரும்பப்பெறப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

    • அமெரிக்காவில் பிரதமர் மோடி டிரம்பை சந்தித்ததை பாராட்டி அறிக்கை வெளியிட்டார்.
    • சசி தரூரின் செயல்கள் காங்கிரஸ் கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் இருந்து 4 முறை தொடர்ந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த சசிதரூர்.

    மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய மந்திரியாக பதவி வகித்த சசி தரூர், ஐ.நா.சபையில் உயர் பதவி வகித்தவர்.

    அமெரிக்காவில் பிரதமர் மோடி-டொனால்டு டிரம்ப் சந்திப்பை பாராட்டி அறிக்கை வெளியிட்டது. இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல் மந்திரி பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் புகழ்ந்து தள்ளியது என இவரது செயல்கள் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தை கடுப்பாக்கியது.

    மேலும், பிப்ரவரி 25-ம் தேதி மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சசி தரூர் இதற்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்துவந்தார்.

    இந்நிலையில், கேரள கம்யூனிஸ் கட்சியின் முதல் மந்திரி பினராயி உடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

    கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அளித்த விருந்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்துகொண்டார். விருந்து நிகழ்ச்சியின்போது சசிதரூர் பினராயைச் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது காங்கிரஸ் மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துயுள்ளது.

    • இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
    • ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில் ஏராளமானோர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதன் மூலம் பலர் பிரபலமாகி விடுகிறார்கள்.

    அப்படி பிரபலமான ஒரு வாலிபர், தன்னுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஹபீஸ் சஜீவ். இவர் இன்ஸ்டாகிராமில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் கேரளாவில் பிரபலமான நபராக அவர் மாறினார். இந்தநிலையில் அவருக்கு ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

    அந்த பெண் ஹபீஸ் சஜீவுடன் நட்பாக பழகினார். இதனைத்தொடர்ந்து இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதன் காரணமாக அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. ஹபீஸ் சஜீவ் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்.

    அங்கு வைத்து தான் 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பாராம், அந்த வீட்டுக்கு இளம்பெண்னை வரவழைத்த ஹபீஸ் சஜீவ் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்துள்ளார். அந்த வீட்டில் வைத்து இளம்பெண்ணை ஹபீஸ் சஜீவ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    திருமணம் செய்வதாக கூறி அவர் பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஹபீஸ் சஜீவ் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹபீஸ் சஜீவ் மீது ஆலப்புழா தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்பு ஹபீஸ் சஜீவை கைது செய்தனர். அவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 69 (துணிச்சலான வழிகளை பயன்படுத்தி உடலுறவு கொள்ளுதல்), 74 (பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் பெண்ணை தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தை பயன்படுத்துதல் )ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    ரீல்ஸ் வீடியோ எடுக்க பயன்படுத்திய பெண்ணை வாலிபர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை.
    • பெற்றோரின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர் கோடு பைவளிக்கே பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, கடந்த மாதம் வீட்டிலிருந்து திடீரென மாயமானார். அவர் அதே பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர் ஒருவருடன் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் 25 நாட்களுக்கு மேல் ஆகியும் தங்களது மகளைப்பற்றி எந்த தகவலும் தெரியாததால், மாணவியின் பெற்றோர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மாயமான சிறுமியை கண்டுபிடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் சிறுமியை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். மாயமான இருவரின் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் தேடினர்.

    மேலும் அவர்கள் வீடு இருந்த பகுதியை ஒட்டியிருக்கும் வனப்பகுதியில் டிரோன்களை பயன்படுத்தி தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அந்த மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி மாயமான விவகாரத்தில் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு, போலீசாருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் சினேகலதா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-

    மைனர் பெண் மற்றும் பெண் காணாமல் போனதாக புகார் வந்தவுடன் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். புகாரின் செல்லுபடி தன்மையை முதல் கட்டத்தில் ஆராய வேண்டிய அவசியமில்லை. மைனர் குழந்தைகள் காணாமல் போனதாக கேள்விப்படும் போது, விசாரணை அதிகாரியின் மனதில் போக்சோ பிரிவு இருக்க வேண்டும்.

    பைவளிக்கேயில் காணாமல் போன சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணையை தவறாக கூற முடியாது. அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கும் ஒரு குறிப்பாணையை காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும்.

    அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை 30-வது நாளில் இறந்து கிடந்த சம்பவத்தில் பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தாங்க முடியாதது. அது அந்த குழந்தையின் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். விசாரணை பொருத்தமானதல்ல என்ற பெற்றோரின் கவலைகள் தீர்க்கப்பட வேண்டும்.

    'கோவிட்' காலத்திற்கு பிறகு உலகம் நிறைய மாறி விட்டது. குழந்தைகள் பல தாக்கங்களுக்கு ஆளாகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் சினிமாவை கட்டுப்படுத்துவது மட்டும் போதாது. இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    ×