search icon
என் மலர்tooltip icon

    ஒடிசா

    • ராமாயண நாடகத்தில் பேய் வேடத்தில் நடித்த நடிகர் பன்றியின் வயிற்றை கத்தியால் கிழித்து அதன் இறைச்சியை சாப்பிட்டுள்ளார்.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ரலாப் பகுதியில் கடந்த 24-ந்தேதி ராமாயண நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    அப்போது பேய் வேடத்தில் நடித்த 45 வயது நாடக நடிகர் மேடையில் உயிருடன் இருக்கும் பன்றியின் வயிற்றை கத்தியால் கிழித்து அதன் இறைச்சியை சாப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று ஒடிசா மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் பாபுசிங் மற்றும் ஜனாதன் பிஜுலி ஆகியோர் பேசினர்.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகர் மற்றும் நாடக அமைப்பாளர்களில் ஒருவரான பின்பதர் கவுடா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி பெற்றது.
    • இதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் பிருத்வி, ஆகாஷ் மற்றும் அக்னி உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    சமீப காலமாக நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய அடுத்த தலைமுறை உபகரணங்களை தயாரிப்பதில் தற்போது டி.ஆர்.டி.ஓ. கவனம் செலுத்தி வருகிறது.

    இதற்கிடையே, டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 1,500 கி.மீ. தூரம் இலக்கைச் சென்று தாக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா கடற்கரை அருகே உள்ள சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    இந்த ஏவுகணை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஏவுகணை வளாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. மூத்த டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிகரமான முடிவுகளை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இந்தியா ஒரு பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் மூலம், மேம்பட்ட ராணுவ தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • ஒடிசா மாநிலத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.30,000 மதிப்பூதியம் அளிக்கப்படுகிறது.

    புவனேஸ்வர்:

    கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் என மொத்தம் 55 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியால் அரசுக்கு 2 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தெரிவித்துள்ளது.

    • ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பூரி:

    ஒடிசாவில் பத்ரக் பகுதியருகே சென்று கொண்டிருந்த பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுபற்றி பூரி நகரின் அரசு ரெயில்வே போலீஸ் காவல் நிலைய உயரதிகாரி எஸ்.கே. பாஹினிபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, பத்ரக் பகுதியை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றதும் அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பின்னர், ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். அந்த ரெயில் பூரி நகரை பாதுகாப்பாக சென்றடையும் வகையில் அவர்கள் இணைந்து செயல்பட்டு பாதுகாப்பை வழங்கினர். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் அடங்கிய 4 குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன என்றார்.

    இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது. பயணிகள் அனைவரும் அந்த பெட்டியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது உடனடியாக கண்டறியப்படவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • அவருக்கு ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 5 அடி உயரமுள்ள விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்காக 4 டன் மணலை பயன்படுத்தி உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரைசதங்களுடன் 9,040 ரன்கள் குவித்துள்ளார். 295 ஒருநாள் போட்டியில் 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 14,000க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். 125 டி20 போட்டியில் ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    • இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ரூர்கேலா:

    ஒடிசா மாநிலம் கந்த்ர்துடா மற்றும் சமர்பிண்டா கிராமத்தை சேர்ந்த பஜனை குழுவினர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மாருதி வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். நேற்று இரவு ஒடிசா சுந்தர்கர் பகுதியில் வேன் வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில வேனில் பயணம் செய்த பஜனை குழுவை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இது பற்றி அறிந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு அவர்கள் மறியல் நடத்தினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    • விவசாய நிலத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் 27 பன்றிகள் விழுந்துள்ளன.
    • இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சார் மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிக்கி தவித்த காட்டுப்பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

    கிணற்றில் சிக்கிய காட்டுப்பன்றிகள் பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

    இரவு உணவு தேடி பாலபத்ரபூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் 27 காட்டுப்பன்றிகள் நுழைந்துள்ளது. விவசாய நிலத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் 27 காட்டுப்பன்றிகளும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்துள்ளன.

    இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் கிணற்றில் இருந்து காட்டுப்பன்றிகள் வெளியே வருவதற்கு இயந்திரங்கள் கொண்டு சரிவுப் பாதை அமைத்தனர். பின்னர் அந்த பாதை வழியாக காட்டுப்பன்றிகள் கிணற்றை விட்டு பத்திரமாக வெளியே வந்தன.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய வனத்துறை அதிகாரி, "ஒரு குட்டி காட்டுப்பன்றி முதலில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம், பின்பு அதை மீட்பதற்காக ஒவ்வொரு பன்றியும் உள்ளே விழுந்திருக்கலாம் என்றும் இந்தச் சம்பவத்தில் ஒரு ஒரு குட்டி காட்டுப்பன்றி இறந்ததாகவும், மீதமுள்ள 26 காட்டுப்பன்றிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது" என்று தெரிவித்தார்.

    தனியார் விவசாய நிலத்தில் இந்த கிணறு தோண்டப்பட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கிணற்றை மூடி வைக்குமாறு சம்பந்தப்பட்ட விவசாயியிடம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
    • பாலாசோர் மாவட்டத்தில் 172,916 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

    வங்கக்கடலில் உருவான டானா தீவிர புயல் நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கிய நிலையில், இன்று காலை கரையை கடந்தது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கரையை கடந்து வலுவிழக்க இன்று மதியம் ஆகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதில் சுமார் 4,500 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர், அவர்களில் 1,600 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

    தற்போது 6,008 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாலாசோர் மாவட்டத்தில் 172,916 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மயூர்பஞ்ச் 100,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    பத்ரக்கில் இருந்து 75,000 பேர், ஜாஜ்பூரில் இருந்து 58,000 பேர் மற்றும் கேந்திரபராவில் இருந்து 46,000 பேர் வெளியேறி உள்ளனர்.

    அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருந்து அனைத்து மக்களையும் வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளோம். அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மருத்துவ சேவையை வழங்குவதற்காக, பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

    பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் மாநிலத்தின் தயார்நிலை குறித்து ஒடிசா முதல்வர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மத்திய அரசு திருப்தி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

    மேலும் டானா புயல் காரணமாக ஒடிசாவில் தீவிர வானிலை நிலவி வருவதால் அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    • ஒடிசா- மேற்கு வங்கம் இடையே நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கியது.
    • ஒடிசாவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    வங்கக் கடலில் உருவான டானா தீவிர புயல் நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கிய நிலையில், இன்று காலை கரையை கடந்தது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கரையை கடந்து வலுவிழக்க இன்று மதியம் ஆகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இவ்விரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். தென்கிழக்கு ரெயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை ரெயில்வே சாா்பில் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம், கொல்கத்தா விமான நிலைங்களில் விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இன்று காலை 9 மணி வரை தற்காலிகமாக இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

    ஒடிசாவின் பிதா்கனிகா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது 110.கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும் சமயத்தில் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    ஒடிசாவின் பாலசோா், பத்ரக், பிதா்கனிகா, புரி உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்து சாலைகளின் குறுக்கே விழுந்தன.

    முன்னெச்சரிக்கையாக கேந்திரபாரா, பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3.5 லட்சம் போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    டானா புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    • முன்னெச்சரிக்கையாக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
    • புவனேஸ்வர் விமான நிலையத்தில் நேற்று மாலை இன்று காலை வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான டானா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றதை அடுத்து மேற்கு வங்கம், ஒடிசாவில் மழை கொட்டியது.

    ஒடிசாவின் லசோர், பத்ரக், பிதர்கானியா, புரி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புயல் காரணமாக பல பகுதிகளில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் ஒடிசாவின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஒடிசாவின் பிடர்கனிகா தேசிய பூங்கா-தாம்ரா துறைமுகம் இடையே புயல் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புயல் காரணமாக, ஏற்கனவே 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், மேலும் 3 லட்சம் பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    புயல் கரையை கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஒடிசாவில் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    புவனேஸ்வர் விமான நிலையத்தில் நேற்று மாலை 5:00 மணி முதல் இன்று காலை 9:00 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    மேற்கு வங்கத்தில் கடற்கரையோரம் வசிக்கும் ஐந்து லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து செல்லும் விமானங்களின் சேவைகள் நேற்று மாலை 6:00 மணி முதல் இன்று காலை 9:00 மணி வரை நிறுத்தப்பட்டன. புறநகர் ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    • புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது.

    புவனேஸ்வர்:

    வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.

    டானா புயல் 24-ம் தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    அதன்படி, 24-ம் தேதி மாலை 5 மணி முதல் 25-ம் தேதி காலை 9 மணி வரை புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்ப்படுகிறது.

    டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது. மேலும், 120 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
    • பாராட்டு தெரிவிக்கும் வகையில் பணத்தை வழங்கியதாக கூறினார்.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் மொத்தமுள்ள 147 இடங்களில் பா.ஜ.க. 78 இடங்களை கைப்பற்றியது.

    இதன் மூலம் ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தின் 24 ஆண்டுகால ஆட்சியை பா.ஜ.க. முடிவுக்கு கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து அங்கு மோகன் சரண்மாஜி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒடிசாவில் சுந்தர்கர் மாவட்டத்தில் பா.ஜ.க. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பைஜயந்த் ஜெய்பாண்டா கலந்து கொண்டார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், பைஜயந்த் ஜெய்பாண்டாவிடம் 100 ரூபாய் கொடுத்து பிரதமர் மோடிக்கு அனுப்புமாறு கூறியதோடு, பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்தார்.

    அவரிடம் பைஜயந்த் ஜெய்பாண்டா பிரதமருக்கு நன்றி தெரிவித்தால் போதும், பணம் அவசியம் இல்லை என வலியுறுத்திய போதும், அந்த பெண் தனது நன்றியை தெரிவிக்க இந்த பணத்தை பிரதமருக்கு அனுப்புமாறு கூறினார்.

    மேலும், பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அந்த பணத்தை வழங்கியதாக அவர் கூறினார்.

    இது தொடர்பான புகைப்படத்தை பைஜயந்த் ஜெய்பாண்டா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதோடு அந்த பெண்ணின் நேர்மையையும், அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் தலைமையின் மீது மக்கள் கொண்டுள்ள நல்ல மாற்றங்களுக்கும், நம்பிக்கைக்கும் இந்த சைகை ஒரு சான்றாகும் என்றார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், எப்போதும் என்னை ஆசீர்வதிக்கும் எங்கள் நாரி சக்திக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் ஆசீர்வாதங்கள் என்னை விக்சித் பாரதத்தை உருவாக்க உழைக்க தூண்டுகின்றன என்று பதில் அளித்துள்ளார்.

    ×