என் மலர்
ஒடிசா
- மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று தொழிலதிபர் ரத்தன் டாடா உயிரிழந்தார்.
- மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று மாலை மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்த பிரபல சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் ரத்தன் டாடாவுக்கு மணற் சிற்பம் செய்துள்ளார்.
- பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- மகாலட்சுமியின் இறப்புக்குப் பின்னர் அவர் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த மகாலட்சுமி (24) என்ற இளம்பெண்ணின் உடல் கடந்த சனிக்கிழமை வீட்டின் பிரிட்ஜில் இருந்து 50 துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கணவன் வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில் பெங்களூரில் மகாலட்சுமி பணியாற்றி வரும் மாலில் ஆண்கள் அழகு நிலையத்தில் வேலைப்பார்த்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முக்தி ரஞ்சன் ரே என்ற 30 வயது நபர் அவரை தினமும் அழைத்துச் சென்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் காதல் உறவில் இருந்ததாக அவர்களுடன் வேலை பார்த்து வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாலட்சுமியின் இறப்புக்குப் பின்னர் அந்த நபர் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். இந்த கொலையில் முக்தி ரஞ்சன் ரே முக்கிய குற்றவாளியாக இருந்து வரும் நிலையில் ஒடிசாவில் உள்ள பத்ராக் [Bhadrak] மாவட்டத்தில் துசுரி [Dhusuri] காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் முக்தி ரஞ்சன் ரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் உயிரிழப்பு தொடர்பாக அம்மாநில காவல்துறையினர் பெங்களூரு போலீசுக்கு தகவல் அளித்தனர். அவரது மரணம் தற்கொலையாக அல்லது இருவரையும் கொலை செய்தது வெறு ஒருவரா என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.
- மூதாட்டி பதூரியை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து பென்ஷன் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளனர்.
- கிராம சாலையில் அவர் தவழ்ந்து செல்லும் வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒடிசாவில் தந்து பென்ஷன் பணத்தை வாங்க 80 வயது மூதாட்டி நடக்க முடியாமல் 2 கிலோமீட்டர் தவழ்ந்தே செல்ல நேர்ந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் கியான்ஜ்கர் [Keonjhar] பகுதியில் உள்ள ரைசுவான் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி பதூரி [Pathuri Dehury] மூத்த குடிமக்களுக்கான அரசு ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார்.
வயது மூப்புடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று ஓய்வூதியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தல் இருந்தும் ரைசுவான் கிராம பஞ்சாயத்து அதிகாரி, மூதாட்டி பதூரியை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து பென்ஷன் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார்.
மிகுந்த ஏழ்மையில் வாடும் பதூரி அன்றாட தேவைகளுக்கு பென்ஷன் பணத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில் தனது வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துச் செல்ல புறப்பட்டுள்ளார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மூதாட்டி பதூரியால் நடக்க முடியாமல் இருந்த நிலையில் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு அவர் தவழ்ந்தே சென்று பென்ஷன் பணம் வாங்கியுள்ளார்.
80-year-old woman was forced to crawl nearly 2 km to panchayat office in Telkoi block of Odisha's Keonjhar to collect her old-age pension, despite a government directive to deliver the allowances to homes of elderly and disabled beneficiaries.@CMO_Odisha @BJP4Odisha… pic.twitter.com/DbtXXIrU74
— Siddhant Anand (@JournoSiddhant) September 24, 2024
கிராம சாலையில் அவர் தவழ்ந்து செல்லும் வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதத்திலிருந்து மூதாட்டி பதூரியின் வீட்டுக்கே சென்று பென்ஷன் பணத்தை வழங்க வேண்டும் என்று மாவட்ட BDO அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
- கடந்த மாதம் ருக்சானா, போலங்கிர் பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது குளிர்பானம் குடித்தார்.
- உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம்.
புவனேஸ்வர்:
ஒடிசாவை சேர்ந்த பிரபல சம்பல்புரி பாடகி ருக்சானா பானோ (வயது 27). இவர் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்தார். பாக்டீரியா தொற்று நோய் காரணமாக அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஆனால் அவர் இறந்ததற்கான காரணத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.
இந்த நிலையில் பாடகி ருக்சானா பானோ விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாயும், சகோதரியும் குற்றம் சாட்டினார்கள். மேற்கு ஒடிசாவை சேர்ந்த அவரது போட்டி பாடகர் ஒருவரால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறினார்கள். ஆனால் அந்த பாடகர் பற்றிய விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. பாடகி ருக்சானாவுக்கு ஏற்கனவே மிரட்டல்கள் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது சகோதரி கூறியதாவது:-
கடந்த மாதம் ருக்சானா, போலங்கிர் பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது குளிர்பானம் குடித்தார். அதன்பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் 27-ந்தேதி அவர் பவானிபட்னா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக போலங்கிர் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவ
மனையில் அனுமதித்தோம். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பர்கர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அதன் பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாடகி ருக்சானாவின் தாயாரும் இதே கருத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது.
- காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி மீது தாக்குதல்.
- மேலும் பெண்ணுக்கு எதிராக அதிகாரிகள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
ஒடிசா மாநிலத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இவரது கடையில் சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட, காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாக ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் இருவரையும் தாக்கியுள்ளனர். அதுவும் இல்லாமல் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். தன்னுடைய ஜாக்கெட், பிரா ஆகியவற்றை கழற்றிய பிறகு, ஆண் அதிகாரி ஒருவர் மார்பில் உதைத்ததாக பெண் குற்றம்சாட்டினார். மேலும், இன்ஸ்பெக்டர் தன்னுடைய ஆணுறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதி விசாரணை தேவை என ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நவீன் பட்நாயக் கூறியதாவது:-
கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி ஆகியோர் காவல் நிலையத்தில் நடந்ததை நாம் கேட்டிருப்போம். இருவரும் தாக்கப்பட்டது மற்றும் ராணுவ அதிகாரி வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக வெளியான குற்றச்சாட்டு மிகமிக அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒடிசா மாநிலத்தில் பாஜக-வின் திறமையின்மைமைய இந்த சம்பவம் காட்டுகிறது.
இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
- என்னுடைய ஜாக்கெட்டை கழற்றினர். ஜாக்கெட்டால் என்னுடைய இரண்டு கைகளையும் கட்டினர்.
- ஒரு ஆண் அதிகாரி என்னுடைய மேல் உள்ளாடையை கழற்றிய பிறகு அவர் தொடர்ந்து எனது மார்பில் உதைத்தார்.
ஒடிசா மாநிலத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டது, மற்றும் அதிகாரியின் வருங்கால மனைவி வன்கொடுமைக்கு ஆளானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் ரெஸ்டாரன்ட் ஒன்று நடத்தி வருகிறார். செப்டம்பர் 15-ந்தேதி இரவு நேரம் இவரது கடைக்கு சில இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது இவருடன் தகராறு செய்துள்ளனர். தகராறு எல்லை மீற அதிகாரியின் வருங்கால மனைவி காவல் பரத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தார்.
பரத்பூர் காவல் நிலையத்திற்கு தான் சென்றதும், அங்கு தனக்கு எதிராக நிகழ்ந்த வன்கொடுமை குறித்தும் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி கூறியதாவது:-
இளைஞர்கள் கும்பலிடம் இருந்து எப்படியோ தப்பித்து, புகார் அளிப்பதற்காக பரத்புர் காவல் நிலையம் சென்றேன். வரவேற்பு பகுதியில் பெண் போலீஸ் ஒருவர் மட்டும் அமர்ந்து இருந்தார். வேறு யாரும் காவல் நிலையத்தில் இல்லை. வெளியில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தன்னை எந்த நேரத்திலும் பின்தொடர்ந்து வரலாம். இதனால் வழக்குப்பதிவு செய்து எனக்கு பாதுகாப்பு அளித்தால் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவித்தேன். எனினும், வழக்குப்பதிவு செய்வதற்குப் பதிலாக அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.
நான் வழக்கறிஞர் என்று கூறியபோதிலும், அந்த பெண் போலீஸ் கடுமையாக கோபம் அடைந்து தவறாக நடந்து கொண்டார்.
அந்த நேரத்தில் பாதுகாப்பு வாகனத்தில் பெண் போலீசார் உள்பட பல போலீசார் அந்த காவல் நிலையத்திற்கு வந்தனர். வந்ததும் இரண்டு பெண் காவலர்கள் என்னுடைய முடியை பிடித்து இழுத்து அடிக்க தொடங்கினர். அடிப்பதை நிறுத்துங்கள் என அவர்களிடம் கெஞ்சினேன். அவர்கள் போலீஸ் நிலையத்திற்குள் என்னை இழுத்துச் சென்றார்கள்.
அவர்களில் ஒருவர் என் கழுத்தை நெரிக்க தொடங்கினார். நான் அவரது கையை கடித்தேன். அவர்கள் என்னுடைய ஜாக்கெட்டை கழற்றினர். ஜாக்கெட்டால் என்னுடைய இரண்டு கைகளையும் கட்டினர். அதன்பின் என்னுடைய இரண்டு கால்களையும் கட்டி, ஒரு அறைக்கும் வீசினர்.
பின்னர் ஒரு ஆண் அதிகாரி வந்தார். என்னுடைய மேல் உள்ளாடையை கழற்றிய பிறகு அவர் தொடர்ந்து எனது மார்பில் உதைத்தார். பின்னர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்கர் வந்தார். அவர் அவரது பேன்ட் ஜிப்பை கழற்றி, அவரது ஆணுப்பை காட்டியதுடன், நான் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பினால்... என கேலி செய்தார். மேலும் எனக்கு எதிராக பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்டார்.
இவ்வாறு அந்த பெண் தெரிவித்தார்.
இந்த விவகாரம் வெளியே கசிய ஒடிசா அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநில டிஜிபி-யிடம் இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.
காயம் அடைந்த அந்த பெண் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தங்களை தாக்கியதாக போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர். ஒடிசா உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளனர். அந்த பெண் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் 26-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
- விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்கவில்லை.
- அதிகாரப்பசி உள்ளவர்கள் பொறுக்க முடியாமல் விமர்சிக்கின்றனர் என்றார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
ஒடிசாவில் இரட்டை என்ஜின் ஆட்சி நடப்பதால் வளர்ச்சிக்கான பயணம் புதிய சிறகுகளைப் பெற்றிருக்கிறது.
ஒடிசாவில் பழங்குடியின பெண் எனக்கு இனிப்பு ஊட்டியபோது என் தாயின் நினைவு வந்தது. அந்தப் பெண்ணின் ஆசிர்வாதம் போன்ற உணர்வுபூர்வமான அனுபவம்தான் என் வாழ்வின் மூலதனம்.
என் அம்மா உயிருடன் இருந்தவரை என் பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி பெறுவேன்.
விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர்.
அதிகாரப்பசி உள்ளவர்கள் நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்கள், அதை பொறுக்க முடியாமல் விமர்சிக்கின்றனர் என தெரிவித்தார்.
- அக்னி 4 என்பது அக்னி வரிசை ஏவுகணைகளில் நான்காவது ஆகும்.
- அக்னி 4 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
புவனேஷ்வர்:
இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 4 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
- சுகாதாரத்துறை சார்பில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடந்தது.
புவனேஸ்வர்:
ஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் உஷார் நிலையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிபிலி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடந்தது.
இந்த பணிகளுக்காக 13 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. மேலும் சில பண்ணைகளில் உரிமையாளர்களே இந்த பணிகளை மேற்கொண்டனர். கடந்த 23-ந்தேதி தொடங்கிய இந்த பணிகள் நேற்று மாலையில் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 11,700 கோழிகள் கொன்றழிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள வீடுகள் மற்றும் கிராமங்களில் கோழிகளை அழிக்கும் பணிகள் இன்று நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.
- மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2000 -த்தை கடந்துள்ளது.
- ஜூல் ஓரமிற்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் ஜூல் ஓரம் இன் மனைவி ஜிங்கியா [58 வயது] டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஒடிசாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2000 த்தை கடந்துள்ளது.
இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் ஜூல் ஓரம் மனைவி ஜிங்கியா டெங்கு காய்ச்சலுக்கு தலைநகர் புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் ஜூல் ஓரமிற்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜூல் ஓரம் மனைவியின் மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜூல் ஓரமின் அரசியல் பயணத்தில் ஜிங்கியா முக்கிய பங்காற்றினார் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜூல் ஓரம்-ஜிங்கியா தம்பதிக்கு 2 மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
- ஏற்கனவே கேரளா மற்றும் பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது என கூறினார்.
அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் ஒடிசாவும் இணைந்துள்ளது.
- உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
- மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தை அடுத்த சிராபூரில் உதய் நாராயணன் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
நேற்று மதியம் அரங்கேறிய இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதம் மற்றும் கறி வழங்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் சாப்பிட துவங்கிய நிலையில், ஒரு மாணவர் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை கண்டறிந்தார். உடனே அந்த உணவை சாப்பிட வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் அனைவரும் சிராபூரில் உள்ள சோரோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் கூறும் போது, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெறும் என்றும் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தின் கராக்பூரில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட 80 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.