என் மலர்
ராஜஸ்தான்
- சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது என்றார் உதயநிதி
- கஜேந்திர சிங் ஷெகாவத் மத்திய கேபினெட் அமைச்சராக உள்ளார்
சில தினங்களுக்கு முன், தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஒரு விழாவில் பேசும் போது, "சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டியது" என கருத்து தெரிவித்தார். இக்கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியாவெங்கும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
உதயநிதியின் கருத்து பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் உண்டாக்கியிருக்கிறது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத் (55). மத்திய 'ஜல் சக்தி' மந்திரியாக இருக்கும் இவர், கேபினெட் அமைச்சராக பதவி வகிப்பவர்.
நேற்று ஷெகாவத், பா.ஜ.க. சார்பாக ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் நடைபெற்ற பரிவர்த்தன் யாத்திரையில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அதில் அவர் கூறியதாவது:-
உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது.
இவ்வாறு கஜேந்திர சிங் தெரிவித்தார்.
உதயநிதியின் சனாதனம் தர்மம் குறித்த கருத்து விவகாரம் தற்போது சற்று ஓய்ந்த நிலையில், பா.ஜ.க.வின் கேபினெட் அந்தஸ்திலுள்ள அமைச்சர் இவ்வாறு கடுமையாக கருத்தை தெரிவித்துள்ளார்.
- தேர்தல் வாக்குகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
- அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் மோடி ஆட்சி செய்வார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரிவர்தன் யாத்திரையில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, மீண்டும் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் துங்கர்பூரில் நடைபெற்ற யாத்திரை துவக்க விழாவில் பேசிய மத்திய மந்திரி அமித் ஷா, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
"தி.முக. தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் மகன் உள்ளிட்டோர் சனாதன தர்மம் அகற்றப்பட வேண்டும் என்று கூறி வருகின்றார்கள். அவர்கள் வாக்கிற்காக சனாதன தர்மம் குறித்து பேசி வருகிறார்கள். அவர்கள் சனாதன தர்மத்தை கலங்கப்படுத்தி உள்ளனர்."
"இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் கெட்டவர்கள் இணைந்துள்ளனர். அவர்கள் தேர்தல் வாக்குகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்கள் சனாதன தர்மம் குறித்து எவ்வளவு அதிகமாக பேசினாலும், அவை குறைந்த அளவு தாக்கத்தைக் கூட ஏற்படுத்தாது."
"மோடி மீண்டும் வெற்றி பெற்றால் சனாதனம் ஆட்சிக்கு வந்துவிடும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். சனாதனம் மக்களின் மனங்களில் ஆட்சி செய்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் மோடி ஆட்சி செய்வார்," என்று அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
முன்னதாக பேசிய அமைச்சர் உதியநிதி ஸ்டாலின், " சனாதன தர்மம் ஒற்றுமை மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்," என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
- நிர்வாண ஊர்வலத்தை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
- வீடியோக்களை யாரும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதாப்கர்:
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கானா மீனா. இவருக்கும் பழங்குடியின பெண்ணுக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த கணவர் மனைவியை கண்டித்தார். ஆனால் அதை அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அந்த வாலிபருடன் பழகி வந்தார். இதனால் கானா மீனா ஆத்திரம் அடைந்தார்.
சம்பவத்தன்று அவர் மனைவியை அடித்து உதைத்தார். பின்னர் வீட்டுக்கு வெளியே மனைவியை இழுத்து வந்து அவரது ஆடையை களைந்தார். அந்த பெண் எவ்வளவோ கெஞ்சியும் அவர் விடவில்லை. வலுக்கட்டாயமாக மனைவியை நிர்வாணமாக்கினார். உறவினர்களும் இதற்கு உடந்தையாக இருந்தனர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை அவர்கள் கிராமத்துக்குள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
அந்த பெண் யாராவது காப்பாற்றுங்கள் என கதறினார். ஆனாலும் இதனை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
இந்த நிர்வாண ஊர்வலத்தை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது பற்றி அறிந்ததும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் 7 பேரை தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களை யாரும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒரு நாகரீக சமூகத்தில் இது போன்ற குற்றங்களுக்கு இடம் கிடையாது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- மாலை 3.15 மணிக்கு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பிறகு அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
- 2 மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.
கோட்டா:
மகாராஷ்டிர மாநிலம் லட்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அவீஷ்கர் சாம்பாஜி கஸ்லே. இவர் கடந்த 3 ஆண்டுகளாக நீட் இளநிலை மருத்துவ நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்தார். தனது தாய்வழி தாத்தா, பாட்டியுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் அவீஷ்கர் பயிற்சி மையத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாலை 3.15 மணிக்கு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பிறகு அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவரின் உயிர் பிரிந்தது.
அவீஷ்கர் தற்கொலை செய்து கொண்ட 4 மணி நேரத்தில் மற்றொரு நீட் பயிற்சி மாணவரான ஆதர்ஷ் ராஜ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார்.
பீகாரை சேர்ந்த அவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் பயிற்சி மையத்தில் நேற்று மதியம் தேர்வு எழுதிவிட்டு திரும்பினார். இரவு 7 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். இவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே இறந்தார்.
2 மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.
கோட்டாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களும் 3 லட்சம் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி. மற்றும் ஜே.இ.இ. உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.
- விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- பயிற்சி மையங்கள் காசு பார்க்கும் இயந்திரமாக இருக்கக்கூடாது என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சஹிதா கான் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு, தேசிய அளவிலான தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதிகள், பேயிங் கெஸ்டுகளில் தங்கி ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அதேசமயம், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் 15 மாணவர்கள் தூக்குப்போட்டு உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சம்பவம் மேலும் பரபரபப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கோட்டாவில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலை சம்பவம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். மேலும், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்களையும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், " மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழு 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் கூறப்பட்டுள்ளது. ஐஐடி, நீட் தேர்வுகளுக்கு தயாராவதற்காக ஏற்கனவே பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் 9ம் மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பயிற்சி மையங்களை சேர்த்துவிட்டு மிகுந்த சுமையை ஏற்படுத்துகின்றனர். இது முழுக்க முழுக்க பெற்றோர் செய்யும் தவறு.
இளம் பருவத்தினர் தற்கொலை செய்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு உயிரிழப்பும் பெற்றோர்களுக்கு பெரிய இழப்புதான்" என்றார்.
மேலும், பயிற்சி மையங்கள் காசு பார்க்கும் இயந்திரமாக இருக்கக்கூடாது என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சஹிதா கான் தெரிவித்துள்ளார்.
- போலீசார் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
- போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆல்வார்:
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராம்புரா கிராமத்தில் 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்கள் சென்ற காரை வழிமறித்தது.
பின்னர் அந்த கும்பல் காரில் பயணம் செய்த 3 பேரையும் உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். இருந்த போதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர்.சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் வனத்துறை அதிகாரிகளும் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
உடனே போலீசார் காருக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு வாசிம் என்பவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதற்காக அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கோட்டாவில் இந்த ஆண்டு இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
- மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில் ஏராளமான நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் விடுதிகள், பேயிங் கெஸ்டுகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டா நகரில் உள்ள விடுதிகளில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கோட்டாவில் இந்த ஆண்டு இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, 18 வயது நிரம்பிய மாணவர் ஒருவர் நகரில் உள்ள வாடகை விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த மாதத்தில் கோட்டாவில் பதிவான நான்காவது மாணவர் தற்கொலை இதுவாகும்.
இரண்டு ஐஐடி- ஜேஇஇ மாணவர் மற்றும் ஒரு நீட்-யுஜி ஆர்வலர் உள்பட மூன்று பயிற்சி மாணவர்கள் இந்த மாத தொடக்கத்தில் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.
கடந்த ஆண்டு, பயிற்சி மையத்தில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பதிவாகின.
இந்நிலையில், மாணவர்களிடையே தற்கொலை சம்பவங்களை குறைக்க கோட்டாவில் உள்ள அனைத்து விடுதிகளிலும், பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதிகளிலும் ஸ்பிரிங்-லோடட் ஃபேன்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதுதொடர்பான செய்தி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து, இணைய வாசிகள் ஸ்பிரிங்- லோடட் பேன் ஐடியாவை கிண்டலடித்து வருகின்றனர். தற்கொலை எண்ணத்தில் இருந்து மாணவர்களை வெளியில் கொண்டு வர மாற்ற வேண்டியது பேன்களை (மின்விசிறி) அல்ல மாணவர்களுக்குள் ஏற்படும் மனகுழப்பத்தை என்று விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அதிகரித்து வரும் இறப்புகள் குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேவையான உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
- போலீசார் கூடுதல் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காரை இயக்கி வந்த ஓட்டுனர் பெண் மீது மோதி காரின் பெனட்டில் வெகு தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பான அதிர்ச்சியான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் காரின் பெனட்டில் தொங்கியபடி 500 மீட்டருக்கு இழுத்துச் செல்வது காணமுடிகிறது.
மேலும், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பலர் காரின் பின்னால் ஓடுவதைக் காண முடிந்தது. ஆனாலும் ஓட்டுனர் காரை நிறுத்தவில்லை.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட காரின் உரிமம் தகடு உள்ளிட்ட தகவல்களை கூடுதல் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அடையாளம் தெரியாத கார் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது தார் பாலைவனம்
- சஹாரா பாலைவனம் தனது பரப்பளவை வேகமாக அதிகரிக்கும் என ஆய்வில் தகவல்
புவி வெப்பமயமாதல். இதுதான் உலகத்தையே தற்போது அச்சுறுத்தி கொண்டிருக்கும் வார்த்தை என்றால் மிகையாகாது. பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் அடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேரிட்டு வருகிறது. குறித்த காலத்தில் மழை பெய்யாமை, திடீரென அதிக மழைப்பொழிவு, அதிக வெப்பம் போன்றவை உலகை அச்சுறுத்தி வருகின்றன.
இதனால் உலக நாடுகள் புவி வெப்பமயமாதல் தடுக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த நூற்றாண்டிற்குள் உலகில் உள்ள பல பாலைவனங்கள் இன்னும் தங்களது பரப்பளவை அதிகரித்துக் கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனமான தார் பாலைவனம், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பசுமையாக மாற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தார் பாலைவனம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. மேலும், பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து மாகாணத்தில் பரந்து விரிந்து 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவை கொண்டதாகும். உலகின் 20-வது மிகப்பெரிய பாலைவனமான தார், வெப்பம் அதிகம் கொண்ட 9-வது மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.
பல்வேறு ஆராய்ச்சிகள் உலக வெப்பமயமாதல் காரணமாக உலக பாலைவனங்களின் பரப்பு அதிகமாகும் என யூகித்துள்ளனர். சகாரா பாலைவனம் ஆண்டுக்கு ஆயிரம் சதுர கி.மீட்டர் என்ற வகையில் 2050-க்குள் அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஆராய்ச்சி தொடர்பான பத்திரிகை ஒன்றில் புதிதாக வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், எதிர்பாராத வகையில் தார் பாலைவனம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய-பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியங்களில் 50 சதவிகித அளவு வறண்டுள்ள பகுதிகளில், 1901 முதல் 2015 வரை, 10 முதல் 50 சதவீதம் வரை மழைபொழிவு அதிகரித்துள்ளதாக இந்த ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது.
உலகம் தற்போது பசுமை எரிவாயுவிற்கு மாறி வரும் நிலையில், இந்த மழைபொழிவின் அளவு 50 முதல் 200 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபகாலங்களாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள பருவமழை பொழிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறித்தும் தெரிவித்துள்ள இந்த ஆய்வு, இந்திய பருவமழை பொழிவு கிழக்கு நோக்கி மெல்ல நகர்ந்துள்ளதனால் மேற்கு மற்றம் வடமேற்கு பிராந்தியங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கிறது.
சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களுக்கு, இந்த பருவமழை பொழிவு மிகவும் உதவியாக இருந்து அப்பகுதிகளை செழுமையாக வைத்திருந்ததாக வரலாற்று தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய இந்தியப் பருவமழை பொழிவில் ஏற்பட்டு வரும் மேற்கு நோக்கிய விரிவாக்கம், இந்தியாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு பயன்படும். இது இப்பகுதிகளை ஈரநிலை பகுதிகளாக மாற்றலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவைப்படும் உணவு பாதுகாப்பை இது உறுதி செய்யும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- சச்சின் பைலட்டின் தந்தை குறித்து பா.ஜனதாவின் மால்வியா விமர்சனம்
- ஒட்டு மொத்த நாடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கெலாட் வலியுறுத்தல்
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர். இளம் வயதுடைய சச்சின் பைலட் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மேலிடம் அசோக் கெலாட்டை முதல்வராக தேர்வு செய்தது.
இதனால் இருவருக்கும் இடையில் ஒரு மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த மோதல் போக்கு சில வருடங்களுக்கு முன் வெளிப்படையாக வெடிக்க, சச்சின் பைலட் காங்கிரசில் தனதுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.-க்களை திரட்டி கெலாட்டிற்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால், கெலாட் திறம்பட செயல்பட்டு தனது ஆதரவை நிலைநிறுத்திக்கொண்டார்.
பின்னர், மேலிடம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. அதன்பின் அடிக்கடி மோதல் ஏற்பட்ட போதிலும், இந்த வருட இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டபை தேர்தலும், அடுத்த ஆண்டு மத்தியில மக்களவை தேர்தல் வருவதாலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
சமீப காலமாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வன்முறை குறித்து அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். பா.ஜனதவினர் அதற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியையும், சச்சின் பைலட் தந்தையையும் பற்றி பா.ஜனதா சமூக வலைத்தள பிரிவு தலைவர் அமித் மால்வியா ஒரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில் மால்வியா, ''ராஜேஷ் பைலட் (சச்சின் பைலட் தந்தை), சுரேஷ் கல்மாடி ஆகியோர் இந்திய போர் விமானம் மூலம் கடந்த 1966-ல் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் வெடிகுண்டுகளை வீசினர். பின்னர், இருவரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகி, மந்திரி சபையில் இடம் பிடித்தனர். வடகிழக்கு மாநிலத்தின் சொந்த மக்கள் மீது குண்டுகள் வீசியதற்கு பரிசாக இந்திரா காந்தி அரசியலில் இடம் வழங்கினார் என்பது தெளிவாக தெரிகிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சச்சின் பைலட் ''நீங்கள் தவறான தேதி மற்றும் தவறான சம்பவத்தை சொல்கிறீர்கள். ஆமாம். இந்திய விமானப்படை விமானியான எனது தந்தை குண்டுகளை வீசினார். ஆனால், இந்தியா- பாகிஸ்தான் போரின்போது, கிழக்கு பாகிஸ்தானில் வீசினார். நீங்கள் சொல்வதுபோல் 1966-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி மிசோரமில் அல்ல. எனது தந்தை 1966-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதிதான் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். ஜெய் ஹிந்த்'' என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் அசோக் கெலாட், ''இந்திய விமானப்படையில் காங்கிரஸ் தலைவரான ராஜேஷ் பைலட் தைரியமான விமானியாக திகழ்ந்தார். அவர்களை இழிவுப்படுத்துவது, பா.ஜனதா இந்திய விமானப்படையில் தியாகம் செய்தவர்களை இழிவுப்படுத்துவதாகும். ஒட்டுமொத்த நாடும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மோகன் தாஸ் அக்கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்
- கொலை குற்றமாக வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணையை துவங்கியது
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் மத்திய-மேற்கு பகுதியை சேர்ந்தது குச்சமான் நகரம்.
இங்குள்ள ரஸல் கிராமத்தில் 15 வருடங்களாக வசித்து வந்தவர் 72 வயதான மோகன் தாஸ் எனும் ஆன்மிக குரு. இவர் அக்கிராமத்தில் உறவினர்கள் இருந்தாலும் தனியாக வசித்து வந்தார்.
நேற்று மாலை கிராமவாசிகளிடம் பேசி கொண்டிருந்தார். அதற்கு பிறகு உறங்க சென்றார்.
இன்று காலை அவரை காண கிராமவாசிகள் சென்ற போது அவர் தரையில் கிடந்தார். அவர் கைகள், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார்.
அவர் உயிரிழந்து கிடந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் ஆசிரமத்திற்கு விரைந்த காவல் துறையினர், உயிரிழந்த ஆன்மிக குருவின் சடலத்தை மீட்டனர்.
"இச்சம்பவம் கொலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறோம். கொலை குற்றமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறோம். உடற்கூராய்வு நடந்து முடிந்ததும் அவர் உடல், ரஸல் கிராமத்திலேயே வசிக்கும் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என குச்சமான் நகர காவல்துறை அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்தார்.
- வழக்கின் சாட்சி வாக்குமூலத்திற்காக எருமை மாட்டை ஆஜர்படுத்துமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
- வழக்கில் இன்னும் 16 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிஷன்புரா-சரண்வாஸ் ஹால், ஹர்மதா பகுதியை சேர்ந்தவர் சரண்சிங் செராவத் (வயது 48). விவசாயியான இவர் எருமை மாடுகள் வளர்த்து வருகிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு சொந்தமான 3 எருமை மாடுகள் திருட்டு போயின. இதுகுறித்து சரண்சிங் செராவத் ஹர்மதா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் பரத்பூர் பகுதியில் இருந்து 2 எருமை மாடுகளை மீட்டு ஒப்படைத்தனர். அதில் ஒரு எருமை மாடு சில நாட்களில் இறந்து விட்டது. மேலும் இந்த எருமை மாடுகள் திருட்டு தொடர்பாக அர்ஷத் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இதுதொடர்பான வழக்கு சவுமு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் எருமை மாட்டின் உரிமையாளரான சரண்சிங் செராவத் உள்பட மொத்தம் 21 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 5 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் சாட்சி வாக்குமூலத்திற்காக எருமை மாட்டை ஆஜர்படுத்துமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சரண்சிங் செராவத் எருமை மாட்டை ஒரு வாகனத்தில் ஏற்றி கோர்ட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.
இந்த சம்பவம் கோர்ட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியால் எருமை மாடு அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்னும் 16 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யபட உள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 13-ந்தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.