search icon
என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியம் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார்.
    • காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார்.

    ராஜாஸ்தானில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய கவுன்சிலர்களுக்கு பாஜக எம்எல்ஏ கோமியம் [மாட்டின் சிறுநீர்] தெளித்து அதை குடிக்க வைத்து நடத்திய [சுத்தப்படுத்தும்] சடங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஊழல் குற்றச்சாட்டால் காங்கிரசை சேர்ந்த ஜெய்ப்பூர் முனிசிபல் கவுன்சிலர் பதவி விலகிய நிலையில் அந்த பதவிக்கு பாஜகவை சேர்ந்த குசும் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மேயராக பதவியேற்றுக்கொள்ளும் விழா சமீபத்தில் நடந்துள்ளது.

    இந்த அரசு விழாவுக்கு தலைமை தாங்கிய பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியத்தையும் கங்கை நீரையும் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார். அந்த சடங்கில், சமீபத்தில் பாஜக பக்கம் வந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தையும், கங்கை நீரையும் தெளித்து அதை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார். இந்த நிகழ்வு சர்ச்சையான நிலையில் அங்கு நடந்த ஊழலை சுத்தப்படுத்தவே இந்த சடங்கை மேற்கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    • இறுதிப்போட்டியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ், நடிகையுமான ஊர்வசி ரவுத்தாலா நடுவராக பங்கேற்றார்.
    • முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்று ரியா கூறினார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் இறுதிப்போட்டி நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

    இந்த இறுதிப்போட்டியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸும், நடிகையுமான ஊர்வசி ரவுத்தாலா நடுவராக பங்கேற்றார்.

    இப்போட்டியில் 19 வயதே ஆன ரியா சிங்கா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு ஊர்வசி கிரீடத்தை சூட்டினார். இதனையடுத்து ரியா சிங்காவுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

    இந்த பெரிய வெற்றிக்கு பிறகு, ரியாவால் தன் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. பிரகாசமான புன்னகையுடன் பேசிய ரியா, இன்று நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றேன். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    இந்த கிரீடத்திற்கு நான் தகுதியானவள் என்று கருதும் அளவுக்கு இந்த நிலைக்கு வருவதற்கு நான் நிறைய வேலை செய்துள்ளேன். முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து நடிகையும், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஊர்வசி ரவுத்தாலா கூறுகையில், இந்த ஆண்டு மீண்டும் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை இந்தியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • ராஜஸ்தானில் அமைக்கபட்டுள்ள சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது.
    • எலிகள் ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது என்று ஊழியர் ஒருவர் தெரிவித்தார்

    டெல்லி-மும்பைக்கு இடையே 1,386 கிலோமீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை போடப்பட்டால் டெல்லி-மும்பைக்கு இடையேயான பயண நேரம் 24 மணி நேரத்திலிருந்து 12-13 மணிநேரமாக குறையும் என்று சொல்லப்படுகிறது.

    ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இந்த விரைவுச் சாலை பயணிக்கிறது. இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்கான 80% பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் 1 வருடத்தில் அனைத்து பணிகளும் முடிந்து சாலை பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் அமைக்கபட்டுள்ள சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது.

    இந்த பள்ளங்கள் குறித்து பேசிய ஊழியர் ஒருவர், எலிகள் ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது என்று தெரிவித்தார். ஊழியரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    இதனையடுத்து, தண்ணீர் கசிவு காரணமாக தான் சாலையில் பள்ளம் ஏற்பட்டது என்றும் பள்ளம் விரைவில் சரிசெய்யபட்டது என்று தௌசாவில் உள்ள விரைவுச் சாலையின் திட்ட இயக்குநர் பல்வீர் யாதவ் தெரிவித்தார்.

    • குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
    • குழந்தையை மீட்டதும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி என்ற இடத்தில், நேற்று மாலை 6 மணியளவில் 2 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அருகில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது நேரம் போராடியும் எடுக்க முடியாமல் போன நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் நவீன கருவிகள் உதவியுடன் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.


    தொடர்ந்து 18 மணி நேரமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்று காலை குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை மீட்டதும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். மீட்பு படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்ததும், கிராமத்தினர் மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
    • இதையடுத்து, அந்தக் குழந்தையை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    ஜெயப்பூர்:

    ராஜஸ்தானின் டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற இடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், சுமார் 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளது. குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் ஜே.பி.சி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

    • வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது.
    • வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள்.

    நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து டிராக்டரை காப்பாற்ற போலியாக சாமியாடும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர், கடனாக டிராக்டர் வாங்கியதாக தெரிகிறது. கடன் தொகையை சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் டிராக்டரை எடுத்துச் செல்ல வந்துள்ளனர். இதை அறிந்த விவசாயி குடும்பத்து இளம்பெண் திடீரென சாமி வந்ததுபோல ஆடத் தொடங்கினார். அவர் கைகளில் குங்குமத்தை பூசிக் கொண்டு, நிதி நிறுவன ஊழியர்களை நோக்கி, வண்டியை எடுக்காதே, எடுத்தால் மோசமான விளைவுகளை சந்திப்பாய் என்று சாபமிட்டாள்.

    வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது. வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள். இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதை ரசித்துள்ளனர்.

    • சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கைது.
    • கைது செய்யப்பட்ட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியில் வயர்களை திருடியதாக குற்றம்சாட்டி 12 வயது பட்டியலின சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாடச் சொல்லி காலணிகளால் தாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோ வைரலானது அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை சந்தித்து இது தொடர்பாக புகார் கொடுக்கும்படி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷிட்டிஜ் குஜ்ஜர், யதாதி உபாத்யாய், ஆஷிஷ் உபாத்யாய், கௌரவ் சைனி, சந்தீப் சிங், அமர் சிங் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்

    கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தண்டவாளத்தில் மிகப்பெரிய 2 சிமெண்டு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
    • ரெயில்கள் கவிழ்ப்பு முயற்சி சம்பவம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    கான்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பிவானி-பிரயாக்ராஜ் இடையே காளிந்தி விரைவு ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்ததை கவனித்த அந்த ரெயிலின் ஓட்டுநர் அவசரமாக பிரேக்கை இயக்கி ரெயிலை நிறுத்த முயன்றார்.

    எனினும் ரெயில் நிற்பதற்கு முன்பு அந்த சிலிண்டரின் மீது மோதியது. இதில் தண்டவாளத்தைவிட்டு அந்த சிலிண்டர் தூக்கியெறியப்பட்டது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக இரவு 8.20 மணிக்கு தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்றனர். ரெயில்வே பாதுகாப்புப் படை இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் நிரம்பிய பாட்டில், 4 முதல் 5 கிராம் அளவிலான வெடி மருந்து, திரி, தீப்பெட்டிகள் ஆகியவை இருந்தன. அந்த விரைவு ரெயிலைக் கவிழ்ப்பதற்கான சதித் திட்டம் என்று சந்தேகிக்கிறார்கள்.

    சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் உள்பட 6 பேரை கான்பூர் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரெயில் கவிழ்ப்பு சதி தொடர்பாக விசாரிக்க காவல் துறை உயர் அதிகாரிகளைக் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), உத்தரபிரதேச பயங்கரவாதத் தடுப்பு பிரிவும் விசாரணையைத் தொடங்கி உள்ளது. அதுபோல, மூத்த அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்து விசாரணை மேற்கொள்ள கான்பூர் காவல்துறையும் தீர்மானித்துஉள்ளது.

    இந்த நிலையில் ராஜஸ்தானிலும் ரெயில் ஒன்றை கவிழ்க்க முயற்சி நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்துக்கு என தனி பாதை உள்ளது. அந்த வழித்தடத்தில் சர்தானா-பங்கர் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது தண்டவாளத்தில் மிகப்பெரிய 2 சிமெண்டு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதை கண்டதும் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார். என்றாலும் ரெயில் அந்த சிமெண்டு பலகை மீது மோதி நின்றது. அந்த 2 சிமெண்டு பலகைகளும் தலா 70 கிலோ எடை கொண்டதாக இருந்தது. ரெயிலை கவிழ்க்கும் சதி திட்டத்துடன் அந்த சிமெண்டு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வட மாநிலங்களில் உள்ள ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    ரெயில்கள் கவிழ்ப்பு முயற்சி சம்பவம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹதுல்லா கோரி அண்மையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்தியாவில் ரெயில் விபத்துகளை ஏற்படுத்தும் சதித் திட்டம் குறித்து அவர் பேசியிருந்தார். எனவே, சமீபத்திய ரெயில் விபத்துகள் பற்றி இந்தக் கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 14 ஐ.எஸ். பயங்கரவாதிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே மோதல் ஏற்பட்டது
    • இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறி சண்டையில் முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்கு செல்லும் புதிய வந்தே பாரத் ரெயில் இந்த வார ஆரம்பத்தில் செப்டம்பர் 2[திங்கள் கிழமை] தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த ரெயிலை மேற்கு மத்திய ரெயில்வே, வட மேற்கு ரெயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று டிவிஷன் லோகோ பைலட்களும் ரெயிலை இயக்க உத்தரவு வந்த நிலையில் தினமும் யார் ரெயிலை இயக்குவது என்பதில் இந்த மூன்று டிவிஷன் ரெயில் லோகோ பைலட்கள் இடையே தினமும் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று ஆக்ரா மற்றும் கோட்டா ரெயில்வே டிவிஷன் லோகோ லோகோ பைலட்கள் மற்றும் ஊழியர்கள் இடையே கடுமையான சண்டை மூண்டுள்ளது.

    இதில் ஒரு லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் தாக்கப்பட்டு அவர்களது சட்டைகள் கிழிக்கப்பட்டது. மேலும் கார்டு ரூமின் போட்டு உடைக்கப்பட்டு கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த கோஷ்டி மோதல் பிரச்சனைக்கு இன்னும் ரெயில்வே தீர்வு காணவில்லை என்று தெரிகிறது. 

    • கடையின் உரிமையாளர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டார்.
    • கோபமடைந்த அந்த மாணவிகள் கடை உரிமையாளரை ரோட்டிற்கு இழுத்து வந்து அடிக்கிறார்கள்.

    ராஜஸ்தான் மாநிலம் திட்வானா பகுதியில் உள்ள குச்சுமான் நகரில் மொபைல் கடை உள்ளது. சில பள்ளி மாணவிகள் ரீசார்ஜ் செய்ய அங்கு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த கடையின் உரிமையாளர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டார். போனை ரீசார்ஜ் செய்ய வந்த மாணவிகளிடம் "ஐ லவ் யூ" என்று கூறி அவர்களை தொந்தரவு செய்தார். அதுமட்டுமின்றி சிறுமிகளிடம் மோசமாக நடந்து கொண்டார்.

    இதனால் கோபமடைந்த அந்த மாணவிகள் கடை உரிமையாளரை ரோட்டிற்கு இழுத்து வந்து அடிக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 'அரசர் மஹாராணா பிரதாப் உடன் ஒப்பிட்டுப் பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும், ராஜஸ்தானின் பெருமைக்கும் இழைக்கும் அவமானம்'
    • '1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி Haldighati போரில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு எதிராக போரிட்டவர் மஹாராணா பிரதாப்.'

    முகலாய மன்னர் அக்பரைக் குறித்து பெருமையாக விவரிக்கும் பாடபுத்தகங்கள் தீயிலிட்டு எரிக்கப்படும் என்று பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தடாலடியாக தெரிவித்துள்ளார். உதய்பூரில் மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அக்பரை அரசர் மஹாராணா பிரதாப் உடன் ஒப்பிட்டுப் பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும், ராஜஸ்தானின் பெருமைக்கும் இழைக்கும் அவமானம்.

     

    மஹாராணா பிரதாப் மக்களின் பாதுகாவலராக இருந்தவர். ஆனால் அக்பர் தனது சொந்த நலனுக்காக மக்களை கொலை செய்தவர். அப்படிப்பட்ட அக்பரை சிறந்தவர் என்று பள்ளி பாடப்புத்தகத்தில் பெருமையாக குறிப்பிடுபவர்களை விட பெரிய எதிரி மேவார் ராஜ்யத்திற்கும் ராஜஸ்தானுக்கும் இருக்க முடியாது. [மாநிலத்தின்] எல்லா வகுப்புகளின் பாடப் புத்தகங்களையும் நாங்கள் ஆராய்ந்தோம், இதுவரை எந்த புத்தகத்திலும் அப்படி [அக்பரை சிறந்தவர்] குறிப்பிடவில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் அந்த புத்தகங்கள் தீயிலிட்டு எரியூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மஹாராணா பிரதாப் சிங் மேவார் ராஜ்யத்தின் போற்றப்படும் அரசர்களுள் ஒருவர் ஆவார். 1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி Haldighati போரில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு எதிராக போரிட்டவர் அவர். இதற்கிடையே, இந்து முஸ்லீம் ஒற்றுமையை அதிகம் வலியுறுத்தி புனித பயண வரி நீக்கம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்பரை குறித்து ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கூறியுள்ள கருத்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

    • ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
    • விமானத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தெலங்கானா தலைநகர் ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த 6E-7308 இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலம் நாக்பூருக்கு திருப்பி விடப்பட்ட்டு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

    விமானத்திலும், பயணிகளிடத்திலும் முழுமையான சோதனை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை என்று தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விமானம் தனது பயணத்தைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×