என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்டாா்.
    • பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூருக்கு தமிழக கவர்னர் ஆா்.என். ரவி, தனது மகன் ராகுல்ரவியுடன் நேற்று வந்தாா்.

    சுற்றுலா மாளிகையில் தங்கிய இருவரும் தஞ்சாவூா் அரண்மனைக்குச் சென்றனா். அங்கு கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றார்.

    பின்னா் அரண்மனை வளாகத்திலுள்ள சந்திரமௌலீசுவரா் கோயிலுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டாா். இதையடுத்து, அருகிலுள்ள சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்டாா்.

    மாலையில் தஞ்சாவூா் பெரிய கோயிலுக்குச் சென்றாா். அங்கு அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கவிதா உள்ளிட்டோா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.

    வராஹி அம்மன், மராட்டா விநாயகா், பெருவுடையாா், பெரியநாயகி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டாா்.

    பின்னா், தாண்டவ மாடியின் மீது ஏறி பாா்வையிட்ட அவா், மகா நந்திகேசுவரரை வழிபட்டு, சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டாா்.

    இதையடுத்து, காா் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார்.

    இதற்கிடையே தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவியை ஒரு வாலிபர் பின்தொடர்ந்து சென்றார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்த ஜாபர்தீன் (வயது 35) என்பதும் ஆர்வமிகுமியால் கவர்னரை பின்தொடர்ந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர்தீனை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

    • புதியதும் சக்தி வாய்ந்ததுமான நவீன இந்தியாவைக் கட்டமைத்த மாபெரும் தலைவர்.
    • அணிசேராக் கொள்கை உள்ளிட்ட அவரது தொலைநோக்குப் பார்வைதான் நவ இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை ஒட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    புதியதும் சக்தி வாய்ந்ததுமான நவீன இந்தியாவைக் கட்டமைத்த மாபெரும் தலைவர்; காந்தியாரின் பேரன்பிற்குப் பாத்திரமானவர்; அறிவியல் சிந்தனையின் முன்னோடி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளில் வணக்கம் செலுத்துகிறேன்.

    தொழில் மயமாக்கல், விவசாய உற்பத்தி பெருக்கம், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குதல், அணிசேராக் கொள்கை உள்ளிட்ட அவரது தொலைநோக்குப் பார்வைதான் நவ இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.

    ஆசியாவின் விடியலுக்கு விதையிட்ட பெருமகனாரின் கொள்கைகளை நினைவில் நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

    • ‘நேரு மாமா’ என்று அன்புடன் நினைவுகூரப்படும் ஜவஹர்லால் நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தார்.
    • நமது உலகையும் - வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்!

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

    'நேரு மாமா' என்று அன்புடன் நினைவுகூரப்படும் ஜவஹர்லால் நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தார். மேலும் தனது நாட்களை அவர்களுடன் கழிக்க விரும்பினார்.

    குழந்தைகள் தினமான இன்று பள்ளிகளில் அவர்களை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்,

    மழலை மாறாத சிரிப்புடன் - கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் - சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை!

    நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்! வளமான - நலமான - பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம்!

    நமது உலகையும் - வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்! என்று தெரிவித்துள்ளார்.

    • மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • லாட்டரி மார்ட்டினின் இல்லம், அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். மருத்துவ கல்லூரியும் நடத்தி வருகிறார். துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பிரிவில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.

    அவர்கள் வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாத படி பூட்டினர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ளவர்களையும் வெளியில் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர்.

    தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தெரிகிறது. மார்ட்டின் வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் உள்ள அறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது.

    சோதனையின் போது அலுவலகத்தின் நுழைவு வாயில், மற்றும் அலுவலக அறைகளின் கதவுகளையும் அடைத்திருந்தனர்.

    இதேபோல் மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி மருத்துவ கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

    சோதனையொட்டி கல்லூரிக்கு வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்த பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கின்றனர்.

    கோவையில் மார்ட்டின் வீடு, அலுவலகம், மருத்துவக்கல்லூரி என மொத்தம் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடந்தது.

    அமலாக்கத்துறை சோதனையையொட்டி சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. சோதனை முடிவுக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

    கோவையில் நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.

    சென்னை கிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அரசு டாக்டர் மீது வாலிபர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினார். 7 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அரசு மருத்துவ சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் மருத்துவர் மீதான கத்திக்குத்து தாக்குதலை கண்டித்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காலை 10 மணி வரை பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.

    சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து எதிரொலியாக புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    பொது சிகிச்சைக்காக புறநோயாளிகள் அனுமதிச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.

    அனுமதிச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் நிலையில் மருத்துவர்கள் வராததால் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதில் தாமதம் ஏற்பட்டது.

    புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்.
    • "பிள்ளை சிரிக்கையில் சிரித்தது வையம்! சிரித்தது வானமே!" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

    சென்னை:

    இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் நவம்பர் 14ம் தேதி அன்று வருடந்தோறும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்.

    "பிள்ளை சிரிக்கையில் சிரித்தது வையம்! சிரித்தது வானமே!" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

    நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம்மை இயக்குகிறது. அத்தகைய குழந்தைகளின் கல்வியோடு சேர்த்து அவர்களின் தனித்திறமைகளையும் போற்றி வளர்ப்போம். குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார். 



    • தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
    • கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமமூர்த்தி என்பவர் 2021-ம் அண்டு இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 28 பேர் காய்ச்சலாலும், ஒருவர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • அதிகரித்து வரும் காய்ச்சல்களை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பருவகால மாற்றத்தால் தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் ஆஸ்பத்திரிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்று அதிகரித்து வரும் காய்ச்சல்களை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக டெங்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் தேவையில்லா இடங்களில் தண்ணீர் தேங்குதல், கண்ட இடங்களில் குப்பை கொட்டுதல் போன்றவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், சென்னையிலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு புற நோயாளிகளிகள் சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் உள்நோயாளியாக இருந்து வருகின்றனர். அந்தவகையில், உள்நோயாளிகளாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 28 பேர் காய்ச்சலாலும், ஒருவர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 56 பேர் காய்ச்சலாலும், 5 பேர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 14 பேர் காய்ச்சலுக்கும், 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்பால் உள்நோயாளியாக யாரும் சிகிச்சை பெறவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் அனைவரும் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், 'இன்புளூயன்ஸா' வைரஸ் காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் டாக்டா்கள் தொிவித்தனர்.

    • ஆசிரியராக பணிபுரிந்த பாலாஜி, தனக்கு பதிலாக வேறொரு நபரை கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணி நீக்கம்.
    • தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகிறார்களா? என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கேட்கப்பட்டது.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் போலி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகளில் பாடம் நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் பரவின. இதனை பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த கே.பாலாஜி, தனக்கு பதிலாக வேறொரு நபரை கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளாமல் வெளிநபரை கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடத்துவது குறித்து பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வையின் போது கண்டறியப்பட்டாலோ அல்லது இதுகுறித்து புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ கண்டிப்பாக அந்த புகார் மீது தனிக்கவனம் செலுத்தி மாவட்ட கல்வி அலுவலரே விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியாணை பிறப்பிக்க வேண்டும்.

    தொடக்கக்கல்வியில் தகுதியுள்ள காலிப்பணியிடத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் பெற்ற 6 ஆயிரத்து 53 எண்ணிக்கையில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகிறார்களா? என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கேட்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து வேறு நபர்களை கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த விவர அறிக்கை எதுவும் பெறப்படவில்லை.ஆகையால் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து எந்த வித அறிக்கையும் பெறப்படாத நிலையில், 10 ஆயிரம் போலி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும்.
    • ‘ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் 2-ம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன், முன்னோடி திட்டமான 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தினை முதல்கட்டமாக 2022-ம் ஆண்டு தொடங்கி வைத்தேன்.

    அதன்படி, தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3 சதவீதத்தினர் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும்.

    எனவே தான், தற்போது 76 ஆயிரத்து 705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் 2-ம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதனை அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறேன்.

    அன்றைய தினம், ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டருடன் இணைந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிடுமாறு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
    • தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வங்கக்கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தமிழகப் பகுதிகளை நோக்கி நகர்ந்தது. இதனால் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று வலுவிழந்து, வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.

    இதேபோல் கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • சென்னை அரசினர் விடுதி அருகே வலம் வந்த அவரது ஆட்டோவை பார்க்கும்போது வித்தியாசமாக இருந்தது.
    • ஆட்டோவில் பயணிப்பவர்கள் படிப்பதற்காக திருக்குறள் புத்தகமும் வைத்து இருக்கிறேன் என்றார்.

    சென்னை:

    உலக வெப்பமயமாதல் காரணமாக இயற்கை சூழ்நிலையும் மாறிவருகிறது. இதனால் ஏற்படும் ஆபத்தை குறைக்க ஆங்காங்கே மரங்களை நடவேண்டும் என்ற குரல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இயற்கை ஆர்வலர்கள் பலரும் இதையே சொல்கிறார்கள்.

    நம்மில் பலருக்கு மரம் நட விருப்பம் இருந்தாலும் அதை எப்படி செயல்படுத்துவது என்ற யோசனை இருக்கும். ஆனால் சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், இயற்கை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது ஆட்டோவையே பசும் தோட்டமாக மாற்றி இருக்கிறார்.

    சென்னை அரசினர் விடுதி அருகே வலம் வந்த அவரது ஆட்டோவை பார்க்கும்போது வித்தியாசமாக இருந்தது. பச்சை பசேல் என்று நடமாடும் நந்தவனம் போன்று இருந்த அந்த ஆட்டோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    மேலும் அந்த ஆட்டோவில் செடி வளர்ப்போம், மழை பெறுவோம். இயற்கையுடன் வாழ்வோம், விழாக்களில் பேனர் வைத்து ரசிக்கும் இளைஞர்களே, மரக்கன்றுகள் நடுங்கள், நாடே பசுமையாகும், தண்ணீர் இல்லையேல் எவ்வுயூரும் இல்லை என்று பல்வேறு வாசகங்களை எழுதி வைத்து இருந்தார்.

    அந்த ஆட்டோவை நிறுத்தி, எதற்காக இப்படி செய்து இருக்கிறீர்கள். வாடிக்கையாளர்களை கவருவதற்காகவா? அல்லது இயற்கை மீதான ஆர்வமா? என்று கேட்டோம்.

    இதையடுத்து அவர் தனது பெயர் குபேந்திரன் என்றும், கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பேசத்தொடங்கினார். அவர் கூறியதாவது:-

    சிறிய வயதில் இருந்தே பசுமை மீது தீராத காதல் இருந்தது. இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியபோது, ஏன் நம்முடைய ஆட்டோவிலேயே அதை செய்தால் என்ன என்று யோசித்தேன். அப்புறம்தான் என் ஆட்டோவை தோட்டம்போல் மாற்றினேன். இதற்காக ஆட்டோவின் முன்னும் பின்னும் தொட்டிகளை வைத்து செடிகளை வளர்த்து வருகிறேன். தோட்டம்போல் இருக்க வேண்டும் என்பதற்காக கூரைப்பகுதியில் செயற்கை புற்களையும், இருக்கையை பசுமை நிறமாகவும் மாற்றினேன்.

    என் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள், தோட்டத்தில் இருப்பது போன்ற உணர்வு இருப்பதாக என்னிடம் கூறுவார்கள். அவர்கள் ஆட்டோவை விட்டு இறங்கும்போது, பசுமை மீதான ஆர்வம் அவர்களின் மனதை தொட்டு சென்றிருக்கும். இதன் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லதுதானே என்றார்.

    இவ்வாறு செடி கொடிகள் இருப்பது பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துமா? என்று கேட்டபோது குபேந்திரன், 'இல்லை, எல்லோருமே ரசிக்கிறார்கள். பயணிகளும் தங்களுக்கு மன அழுத்தம் குறைந்து விட்டதாகவே சொல்வார்கள். இது எனக்கு மகிழ்ச்சி, ஒரு மன நிறைவு'. மேலும் எனது ஆட்டோவில் பயணிப்பவர்கள் படிப்பதற்காக திருக்குறள் புத்தகமும் வைத்து இருக்கிறேன் என்றார்.

    எல்லோரும் மரம் வளர்ப்போம் என்று வாய்வார்த்தையால் சொல்லிவருவதை, ஆட்டோ டிரைவர் குபேந்திரன் செயல் மூலம் செய்து காட்டி இருப்பது அவருக்கு பாராட்டுகளை அள்ளித்தருகிறது.

    ×