search icon
என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவில் உள்ள எரிமலை அடிவார குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.
    • எரிமலை வெடிப்பை தொடர்ந்து கண்காணித்து வரும்நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதற தொடங்கியது. பின்னர் அது அமைதியான நிலையில் கடந்த சில நாட்களாக அந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கி உள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தீவில் உள்ள எரிமலை அடிவார குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர். எரிமலை வெடிப்பை தொடர்ந்து கண்காணித்து வரும்நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

    இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையை தவிர்க்கும் வகையில் சர்வதேச விமான நிலையமான சாம் ரதுலங்கி உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

    • நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள நகரங்களிலும் உணரப்பட்டுள்ளன.
    • நிலநடுக்கம் ராட்சத அலைகளைத் தூண்டாது என்பதால் சுனாமி எச்சரிக்கை இல்லை.

    இந்தோனேசியாவின் ஜகார்த்தா அருகே சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகியுள்ளது.

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளதாகவும், இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இல்லை எனவும் அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் மையம் கருட் ரீஜென்சிக்கு தென்மேற்கே 151 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தலைநகர் மற்றும் அருகிலுள்ள பான்டென் மாகாணம் மற்றும் மத்திய ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களிலும் உணரப்பட்டன.

    இந்த நிலநடுக்கம் ராட்சத அலைகளைத் தூண்டாது என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அமைப்பால் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்ட ஹூவாங், பல இடங்களில் நின்று புகைப்படம் பிடித்தார்.
    • வெளிநாட்டிற்கு சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை இழந்த சோகத்தில் செய்வதறியாது துயரத்தில் மூழ்கினார் அவரது கணவர்.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்கா உள்ளது. இங்கு சீனாவை சேர்ந்த ஹூவாங் என்ற பெண், தனது கணவருடன் சுற்றுலா வந்திருந்தார்.

    பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்ட அவர், பல இடங்களில் நின்று புகைப்படம் பிடித்தார். 'புளூ பயர்' என்று அழைக்கப்படும் ஒரு எரிமலை சீற்ற நிகழ்வை படம் பிடிப்பதற்காக அவர் ஒரு குன்றின் உயரமான இடத்திற்கு சென்றார். அங்கிருந்து எரிமலை பின்னணியில் தன்னை மறந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். 75 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

    வெளிநாட்டிற்கு சுற்றுலா வந்த இடத்தில் மனைவியை இழந்த சோகத்தில் செய்வதறியாது துயரத்தில் மூழ்கினார் அவரது கணவர். இதுபற்றிய செய்திகள் ஊடகங்களையும், வலைத்தளங்களையும் ஆக்கிரமித்தது. பலரும் விமர்சன கருத்துகளை பதிவு செய்தனர்.

    • எரிமலையை சுற்றியுள்ள 4 கிலோ மீட்டர் தூரம் வரை வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
    • எரிமலை வெடிப்புக்கான அபாயம் குறைந்துள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    ஜகார்த்தா:

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. இதில் ஜாவா தீவு அருகே உள்ள ருவாங் எரிமலை கடந்த வாரம் வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீக்குழம்புகள் வெளியேறின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதனையடுத்து எரிமலையை சுற்றியுள்ள 4 கிலோ மீட்டர் தூரம் வரை வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கையாக அதன் அருகில் உள்ள ரதுலங்கி விமான நிலையமும் மூடப்பட்டது.

    தற்போது எரிமலை வெடிப்புக்கான அபாயம் குறைந்துள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே ஒரு வாரத்துக்கு பிறகு ரதுலங்கி விமான நிலையம் திறக்கப்பட்டு மீண்டும் தனது சேவையை தொடங்கியது.

    • எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
    • சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ருவாங் தீவில் எரிமலை வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலையானது நள்ளிரவில் இருந்து 5 முறை பயங்கரமாக வெடித்தது. அதில் இருந்து எரிமலை குழம்புகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது வெடித்து சிதறியுள்ளது.

    ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. எரிமலை வெடிப்பையடுத்து சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2,378 அடி உயரமுள்ள ருவாங் எரிமலையில் இருந்து குறைந்தது 6 கி.மீ. தொலைவில் இருக்குமாறு சுற்றுலா பயணிகள், பொதுமக்களை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

    மேலும் எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் அனக் க்ரகடாவ் எரிமலையின் வெடிப்பால் சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமியை ஏற்படுத்தியது. அதன்பின் மலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து 430 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அங்கிருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உடனே அணைக்க முடியவில்லை.

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதனால் கரும்புகை பல அடி உயரத்துக்கு எழும்பியது. உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உடனே அணைக்க முடியவில்லை. இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான வெடிமருந்துகளை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட பகுதியில் தீப்பிடித்தது என்றும் காலாவதியான வெடிமருந்துகளில் நிலையற்ற ரசாயனங்கள் உள்ளன. அதில் ஏற்பட்ட உராய்வுகள் மூலம் தீ பிடித்திருக்கலாம் என்றும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தோனேசியாவில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    ஜகார்த்தா:

    பல்வேறு தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது என அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    • 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
    • இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மியுபோபா:

    நமது பக்கத்து நாடான வங்காள தேசத்தில் வசித்து வரும் ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இவர்கள் சட்டவிரோத மாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து வருகின்றனர். இந்நிலையில் வங்காள தேசத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் படகில் இந்தோனேஷியா சென்று கொண்டிருந்தனர். இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.

    இதனால் படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்.

    • மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன
    • 80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

    இந்தோனேசியாவை சேர்ந்த தீவு பிரதேசம், சுமத்ரா (Sumatra island).

    மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வந்த கடும் மழையால், திடீர் வெள்ளமும், அதை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதில் தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேரை காணவில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (National Disaster Management Agency) தெரிவித்துள்ளது.

    இந்த சரிவினால் மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. இவற்றால் நதிக்கரையோர கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கோடோ XI டருசான் (Koto XI Tarusan) பகுதியில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.


    80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 14 வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன.

    20 ஆயிரம் பேர்களின் வீடுகள் மேற்கூரை வரை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    மின்சாரத் தடை, சாலைகளில் ஓடும் வெள்ள நீர், குப்பைகள் போன்றவற்றால் மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கிடையே சிக்கியுள்ள மக்களை மீட்க முயன்று வருகின்றனர்.

    பெருமளவு மலைப்பிரதேசங்களை கொண்ட இந்தோனேசியாவில் வெள்ள அபாய பகுதிகள் ஏராளமாக உள்ளன.

    அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் மழையால் ஏற்படும் வெள்ளம் போன்றவற்றால் லட்சக்கணக்கான மக்கள் துன்பப்படுவது அங்கு தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த 2023 டிசம்பர் மாதம் திடீர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், டோபா எனும் ஏரிக்கருகே ஒரு ஓட்டல் முற்றிலும் சேதமானது.

    • பிரபோவோவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
    • புதிய தலைமையுடன் பணியாற்ற விரும்புகிறேன்.

    இந்தோனேசியாவில் சில நாட்களுக்கு முன்புதான் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற பிரபோவோ சுபியாண்டோ அந்நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.


    இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர், "அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததற்கு இந்தோனேசிய மக்கள் மற்றும் அதிபராக தேர்வாகி இருக்கும் பிரபோவோ சுபியாண்டோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், புதிய தலைமையுடன் பணியாற்ற விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த இந்தோனேசிய அதிபர் தன்னை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


    "எங்களது தேர்தல் குறித்த உங்களின் வாழ்த்து செய்திக்கு நன்றி பிரதமர் மோடி. இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் உங்களின் உணர்வை நான் புரிந்து கொள்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
    • அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தோனேசியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாதுகாப்பு மந்திரி பிரபோவோ சுபியாண்டோ முன்னாள் மாகாண கவர்னர்கள் அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவியது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

    இந்நிலையில் அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். அதே வேளையில் தேர்தல் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரபோவோ, தனது வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றியாகும் என்றார்.

    • தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    • அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

    ஜகார்த்தா:

    உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு இந்தோனேசியா. 20 கோடி வாக்காளர்களை கொண்ட அங்கு இன்று அதிபர் தேர்தல் நடந்தது. மேலும் பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்தது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் காலையிலேயே வாக்குசாவடி மையங்களில் குவிந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

    தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

    பாதுகாப்புத்துறை மந்திரியாக பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2-வது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

    கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு மந்திரி பிரபோலோ வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 52 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இவர் தற்போதைய அதிபரின் ஆதரவை பெற்றவர் ஆவார். துணை அதிபர் பதவிக்கு அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று மாலை ஓட்டுப் பதிவு முடிந்ததும் அதில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்படுகின்றன.

    ×