search icon
என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • பூனை வீட்டில் உள்ள அனைவரிடமும் மிகவும் பாசமாக இருந்து வந்தது.
    • வளர்ப்பு பூனை லியோவின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தாம்பரம்:

    பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் தனது எஜமானரை பாதுகாக்க பூனை ஒன்று சீறிய நல்ல பாம்பை தடுத்து நிறுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

    தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம், என்.ஜி.ஓ. நகர் பகுதியை சேர்ந்தவர் பெல்வில். இவர் தனது வீட்டில்செல்லப் பிராணியாக லியோ என்று பெயரிட்ட பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பூனை வீட்டில் உள்ள அனைவரிடமும் மிகவும் பாசமாக இருந்து வந்தது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தபோது எங்கிருந்தோ வந்த சுமார் 5 அடிநீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று பெல்வில்லின் வீட்டு வளாகத்தில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது. மேலும் அந்த பாம்பு வீட்டிற்குள் செல்ல முயன்றது.

    இதனை கவனித்த லியோ பூனை, பாம்பை தடுத்தது. இதனால் நல்லபாம்பு படமெடுத்து ஆடியபடி சீறியது.


    ஆனாலும் லியோ பூனை, பாம்பை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்காமல் தனது பார்வையாயே மிரட்டி அங்கேயே நிற்கச் செய்தது. சிறிது நேரத்தில் பெல்வில் அங்கு வந்த போது நல்ல பாம்பை வீரத்துடன் பூனை எதிர்த்து நின்றதை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

    இதையடுத்து நல்லபாம்பு குறித்து பாம்புபிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து சீற்றத்துடன் இருந்த நல்லபாம்பை லாவகமாக பிடித்து தாம்பரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். நல்ல பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி தனது உரிமையாளரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாத்து கெத்து காட்டிய பூனையை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

    வளர்ப்பு பூனை லியோவின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • பல்வேறு கோணங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மர்ம பொருள் வெடித்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள பழைய குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று இரவு மர்ம பொருள் வெடித்து அப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. சத்தத்தின் அதிர்வால் அங்குள்ள காவலர் குடியிருப்பு பகுதி வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

    மர்ம பொருள் வெடித்த இடத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டடு இருந்தது., இதனால் இதிலிருந்து பெட்ரோல் லீக்காகி தீப்பற்றி எரிந்து பேட்டரிகள் வெடித்ததா? சமூக விரோதிகள் தீவைத்து சென்றனரா? அல்லது ஏதேனும் வெடி பொருள் பதுக்கி வைக்கப்பட்டு வெடித்ததா? என செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்பிரனீத் உத்தரவின் பெயரில் பல்வேறு கோணங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.


    இவர்களது தடயவியல் ஆய்வின் போது ஏதேனும் வெடிகுண்டு தொடர்புடைய பகுதிகளோ, அதற்கான ரசாயனங்களோ இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால், சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து புலன் விசாரணை மேற்கொள்வார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    காவல் நிலையத்தின் அருகிலேயே இந்த மர்ம பொருள் வெடித்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு ஆதரவு அளித்தது.
    • நூற்றுக்கும் மேலான மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சென்னை, அக். 15-

    கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இளம் மருத்துவர் சங்கம் நாடு முழுவதும் இன்று உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தியது. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கங்களில் இந்த போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு ஆதரவு அளித்தது. தாம்பரத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் முதுகலை மருத்துவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    இதற்கு ஐ.எம்.ஏ. தமிழ் நாடு மாநில தலைவர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார். நூற்றுக்கும் மேலான மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத் தில் கலந்து கொண்டனர்.

    • மின்கம்பம் போன்றவற்றில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
    • அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பொதுமக்கள் கனமழையின்போது ஏரி, குளங்களுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

    பொதுமக்கள் யாரும் கனமழையின்போது ஆறு, குளங்கள், ஏரி போன்ற ஆழமான நீர் நிலைகள் உள்ள பகுதிக்கு செல்லவேண்டாம். மின்கம்பம் போன்றவற்றில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம். மழைவெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 044-27427412,044-27427414, வாட்ஸ்அப்-9444272345 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார்.

    • கடும் வெயிலின் தாக்கம் காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார்.
    • மயங்கியவரின் இடத்தில் உடனடியாக வந்து நின்ற மற்றொரு வீரர்.

    இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

    இந்நிலையில், இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    அப்போது கடும் வெயிலின் தாக்கம் காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்த சக வீரர்கள் மயங்கி விழுந்த விமானப்படை வீரரை தூக்கி சென்ற முதலுதவி அளித்தனர்.

    மயங்கி விழுந்தவரின் இடத்தில உடனடியாக மற்றொரு வீரர் வந்து நின்றதால் அணிவகுப்பு தடைபடாமல் நடைபெற்றது. 

    • நோவா உலக சாதனைக்காக 1,000 மண் ஓடுகளை தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கினார்.
    • கல்லூரி நுழைவிடத்தில் 10 வரிசைகளில் 10 ஓடுகள் வீதம், வரிசைக்கு 100 ஓடுகள் என 1,000 ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 47) குங்பூ தற்காப்புக்கலை வீரரான இவர், செவன்த் டான் பிளாக் பெல்ட் உள்ளிட்டவை பெற்றுள்ளார்.

    நீண்டகாலமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தனியாகவும், பள்ளிகளுக்கும் குங்பூ பயிற்சியாளராக இருந்து வருகிறார். பெண்கள், வாலிபர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு குங்பூ பயிற்சி அளித்து வருகிறார்.


    இவர் நோவா உலக சாதனைக்காக 1,000 மண் ஓடுகளை தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கினார். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நுழைவிடத்தில் 10 வரிசைகளில் 10 ஓடுகள் வீதம், வரிசைக்கு 100 ஓடுகள் என 1,000 ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது. அவைகளை உடைத்து சாதனை செய்தார்.


    முன்னதாக நோவா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் குழுவினர் அவருக்கு மருத்துவ பரிசோதனை, ஓடுகளில் சோதனை உள்ளிட்ட உலக சாதனை நடைமுறைகளை செய்தனர். பின்னர் அவரை ஓடுகளை உடைக்க அனுமதித்தனர். 10 நிமிடங்களில் அனைத்து ஓடுகளையும் உடைத்து நோவா உலக சாதனை வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

    • விபத்து நடந்த அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.  தனது மருமகள் மோனிசா, 2 வயதான பேத்தி மோனிகா ஆகியோருடன் கல்பாக்கம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்., அப்போது வாயலூர் கிழக்கு கடற்கரை சாலை வலைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஒடியது, அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தார். மருமகளும், பேத்தியும் படுகாயம் அடைந்தனர். தகவலரிந்த சதுரங்கபட்டினம் போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயமடைந்து உயிர் தப்பிய பெண், குழந்தை இருவரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதிரே வந்த காரில் வந்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் உள்ளது.
    • மாசிமாதத்தில் இந்த கோவில் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களில் கடற்கரை கோவில் முக்கியத்துவம் வாய்ந்த உலக பாரம்பரிய நினைவு சின்னமாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீர் கோவில் வரை உட்புகுந்து அரிக்க தொடங்கியதால், கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட தொல்பொருள்துறை இந்த கோவிலின் தென்புறம் முதல் வடபுறம் வரை கடந்த 1984-ம் ஆண்டு கடற்கரையில் பாறைகளை குவித்து பாதுகாப்பு அரண் அமைத்து கடல் நீர் உட்புகாமல் இருக்க பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் கடற்கரை கோவிலின் வடக்கு புறப்பகுதியில் பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் உள்ளது.

    மாசிமகத்தன்று கடற்கரையில் குவியும் பழங்குடி இருளர் இனமக்கள் அப்போது காலநிலை மாறி, கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலில் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர். குறிப்பாக மாசிமாதத்தில் இந்த கோவில் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடற்கரை கோவிலுக்கு கற்கள் குவித்து பாதுகாப்பு தடுப்பு அரண் அமைக்கப்பட்டபோது, இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை சிற்பத்தை சேர்த்து பாதுகாப்பு கற்கள் அமைக்காமல் வெளியே அப்படியே விட்டுவிட்டனர். தற்போது இந்த கோவிலை குறிப்பிட்ட சில மாதங்கள் கடல்நீர் சூழ்வதும், குறிப்பிட்ட சில மாதங்கள் கடல் உள்வாங்குவதும் நடைபெறும். தற்போது கடல் உள்வாங்கியதன் மூலம் மகிஷாசுரமர்த்தினி கோவில் முழுமையாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

    பல்லவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டு, முற்றுபெறாத துர்கா சிற்பத்துடன் உள்ள புராதன சின்னமான மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய கலாசார துறையின் கீழ் உள்ள இந்திய தொல்பொருள் துறை நிர்வாகம் கடற்கரை கோவிலை பாதுகாப்பு அரணாக கற்கள் கொட்டி பாதுகாக்கப்படுவதுபோல் மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலையும் கற்கள் கொட்டி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் தொல்பொருள் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது70). தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வந்தார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் சமீபத்தில் இறந்து விட்டார்.

    இவர்களது 3 மகன்களும், 2 மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். கன்னியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து இட்லி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு நீண்டநேரம் வரை கன்னியம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் கதவும் வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் கன்னியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கன்னியம்மாள் அணிந்து இருந்த நகைகள் கொள்ளைபோய் இருந்தது. மேலும் வீட்டில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தன. மர்ம கும்பல் கன்னியம்மாளை கொடூரமாக கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. கொலை நடந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத், மாமல்லபுரம் டி.எஸ்.பி ரவி அபிராம் ஆகியோர் பார்வையிட்டனர்.

    கன்னியம்மாள் உடல் கிடந்த இடம் அருகே சிறிய கத்தி, உடைந்த வலையல்கள் கிடந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர். மோப்பநாய் டைகர் கொலை நடந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று சுடுகாடு அருகே நின்று விட்டது. அங்கிருந்து வாகனத்தில் கொலை கும்பல் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    கன்னியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டு மர்ம கும்பல் கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். எனவே அவரது இட்லி கடைக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    • சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது.
    • மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வார இறுதிவிடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கிழக்கு ராஜவீதி சாலை வழியாக சென்றுதான் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க முடியும். அதேபோல் பேருந்து நிலையம் வரும் அரசு பஸ்களும் அதே வழியாகத்தான் சென்று திரும்ப வேண்டும். ஒருவழி பாதை இல்லாததால் விடுமுறை நாட்களில் இந்த பிரதான சாலைகளில் எப்போதும் நெரிசலுடனே வாகனங்கள் ஊர்ந்து செல்லும். இந்த நிலையில் அப்பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது. இதை விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் பகல் நேரத்தில் சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து போலீசாரும் அங்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நீண்ட நேர வாகன நெரிசலுக்கு பின்னர் அந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர். இதனால் மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. சான்றிதழ் கோப்பைகளை பரிசாக வழங்கினர்.
    • மாநகராட்சி ஆணையர் சிவராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் தொடங்கியது. 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டியை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ் தொடங்கி வைத்தார்.

    இதில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் வே.கருணாநிதி, மாநகராட்சி ஆணையர் சிவராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தாம்பரம்- வேளச்சேரி சாலையில் முடிவுற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. சான்றிதழ் கோப்பைகளை பரிசாக வழங்கினர்.

    • மக்கள் ஏராளமானோர் பங்கேற்று மல்லிகேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
    • கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கபட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் கோபுர விமானம் மற்றும் மூலவருக்கு இன்று காலை 7:50க்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முற்றிலும் கருங்கல்லினால் கட்டப்பட்ட புதிய ராஜகோபுரம் நிர்மானம் செய்யப்பட்டு அதன் விமானத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டது.

    கடந்த வியாழக்கிழமை முதல் கணபதி ஹோமத்துடன் பல்வேறு வேல்விகள் நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தை துறைமுகமாக ஆட்சி செய்தபோது மன்னரின் அரசவையில் அமைச்சராக இருந்த பரஞ்சோதி என்பவரால் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும்.


    13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேகத்தில் மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்று மல்லிகேஸ்வரரை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நந்திகேஸ்வரர் பிரதோஷ கமிட்டியினர் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கபட்டது.

    ×