search icon
என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வருவதை அறிந்ததும் சத்யாவுடன் இருந்த கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

    திருப்போரூர்:

    சீர்காழியை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரவுடி சத்யாவை கிரேன் மூலம் மலர் தூவி வரவேற்று உள்ளனர்.

    இதுபற்றி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று காலை ரிசார்ட்டுக்கு விரைந்து வந்தனர். இதற்குள் சத்யாவும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து காரில் தப்பிசென்றனர். இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் தப்பி செல்ல முயன்ற ரவுடி சத்யாவை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    ஆனால் அவர் போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் சத்யாவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதல் பலத்த காயம் அடைந்த சத்யாவை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் வருவதை அறிந்ததும் சத்யாவுடன் இருந்த கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தாம்பரத்திலிருந்து புறப்படும் ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும்.
    • ரெயில் நாளை காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் வந்தடையும்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு MEMU ரெயில் மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.

    தாம்பரத்திலிருந்து புறப்படும் ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும்.

    அதே ரெயில் நாளை காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் வந்தடையும்.

    • அ.தி.மு.க. போட்டியிடாமல் பின் வாங்கியிருப்பது என்ன ராஜதந்திரம் என்று தெரியவில்லை.
    • எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அமரப்போகிறது.

    மாமல்லபுரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை வழங்கி உள்ளனர். நீட் தேர்வின் எதிர்ப்பு நாடு முழுவதும் வலுப் பெற்று வருகிறது. எங்களது எதிர்ப்பு குரலும் இனி தேசிய அளவில் இருக்கும்.

    பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளை போன்று, தற்போது முடிவு எடுக்க முடியாது. நீட் தேர்வில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை கண்டித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி வலியுறுத்தும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாமல் பின் வாங்கியிருப்பது என்ன ராஜதந்திரம் என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    தமிழக மக்களின் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். நீட் தேர்வை எதிர்த்து தமிழக மக்களின் குரலாக இதை முன்னெடுப்போம். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

    வலுவான ஒரு எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அமரப்போகிறது. மக்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். மத்தியில் கூட்டணி ஆட்சியாக அமைந்துள்ள பா.ஜ.க.வின் ஆட்சி 5 ஆண்டுகள் வரையில் நீடிக்குமா? என்பது சந்தேகம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடையார் 4-வது மெயின் ரோடு, கைலாஷ், கஸ்தூரிபாய் நகர் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணிக்கு மேற்கு தாம்பரம் முல்லைநகரில் நடக்கிறது.

    மின் பராமரிப்பு காரணமாக நாளை (13-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பல்லாவரம் தர்காரோடு, அனகாபுத்தூர், கட்டபொம்மன் நகர், ஜமீன் ராய்பேட்டை, பாரதி நகர் பகுதி. அடையார் 4-வது மெயின் ரோடு, கைலாஷ், கஸ்தூரிபாய் நகர் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    ஆவடி, திருமுல்லைவாயல், சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், சித்தாலபாக்கம் மற்றும் போரூர் திருமுடிவாக்கம், மாங்காடு, குன்றத்தூர், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    தாம்பரம் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணிக்கு மேற்கு தாம்பரம் முல்லைநகரில் நடக்கிறது. இதில் பொது மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

    • சுங்க கட்டண உயர்வு தேர்தல் காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.
    • கட்டண உயர்வு அடுத்தாண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.

    நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டண உயர்வு தேர்தல் காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டண உயர்வானது அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், அக்கரை மற்றும் மாமல்லபுரம் இடையே உள்ள சுங்கசாவடியில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வானது அடுத்தாண்டு மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

    கார், ஜீப், உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.1 முதல் ரூ. 68 வரையும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ. 2 முதல் ரூ. 110 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை-மாமல்லபுரம் இடையே போக்குவரத்து அதிகரித்ததால் 2018-ம் ஆண்டு அக்கரை-மாமல்லபுரம் இடையேயான சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

    • சங்குகள் ஆழ்கடல் பாறை இடுக்குகளில் பல ஆண்டுகளாக வாழும்.
    • மீனவர்கள் இவ்வகை சங்கு வருவதை அறிந்து படகில் சென்று பிடிக்கிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடலில் பாசி படர்ந்த பாறைகளுக்கு இடையிலும், மணல் மேடு பகுதியிலும் தற்போது "முள்சங்கு" எனப்படும், மருத்துவ குணமுடைய விலை உயர்ந்த சங்கு வகைகள் மீனவர்களின் தூண்டில் மற்றும் சிறிய வலைகளில் சிக்கி வருகிறது.

    இவ்வகை சங்குகளின் சதைகள் மருத்துவ குணமுடையது என்பதால் ஒரு சங்கு ரூ.20ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், 'இந்த வகை சங்குகள் ஆழ்கடல் பாறை இடுக்குகளில் பல ஆண்டுகளாக வாழும்.

    தற்போது கடல் வெப்பம், கடலின் சீற்றம், அலையின் திசை மாற்றம் உள்ளிட்ட இயற்கை காலநிலை மாற்றத்தால் கடற்கரை ஓரம் இழுத்து வரப்பட்டு, இப்பகுதியில் கரையோரம் உள்ள பாறை இடுக்குகளில் வாழ்கிறது.

    மீனவர்கள் இவ்வகை சங்கு வருவதை அறிந்து படகில் சென்று பிடிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல வருவாயும் கிடைக்கிறது' என்றனர்.

    • குடியிருப்பவர்களை இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வந்தனர்.
    • 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு குப்பம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள துலுகானத்தம்மன் கோவில் அருகே உள்ள 40 வீடுகள் மற்றும் இறால் பண்ணை ஆகியவை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நெம்மேலி ஆள வந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அங்கு குடியிருப்பவர்களை இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் மீனவ கிராமமக்கள் இடத்தை காலி செய்ய வில்லை. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சீபுரம் உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சூலேரிக்காடு குப்பம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அவர்களை அப்பகுதி பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

    மேலும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தும் அதன் முன்பு அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மீனவ கிராம மக்களின் போராட்டத்தால் வீடுகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்குள்ள இறால் பண்ணைக்கு சென்று இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று மட்டும் போர்டு வைத்து சீல் வைத்தனர்.

    மேலும் அங்கு பூட்டி இருந்த வீடு ஒன்றுக்கும் சீல்வைத்து நோட்டீஸ் ஒட்டினர். அப்பகுதி மக்கள் அங்குள்ள துலுக்கானத்தம் கோவில் வளாகத்தில் திரண்டு உள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ரவி அபிராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.
    • ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கேளம்பாக்கம்:

    தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜேஷ் தாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.

    பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா பிரிந்தார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார். ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா வீடு வாங்கினார்கள். தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பங்களா வீடு பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய ராஜேஷ் தாஸ் கடந்த 18-ந்தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.

    அதில் ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஸ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20 ஆண்டுகளாக மூடியுள்ள குடியிருப்பில் சுத்தம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
    • குடியிருப்பில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில், 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பழைய காவலர் குடியிருப்பில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்து காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    20 ஆண்டுகளாக மூடியுள்ள குடியிருப்பில் பூட்டை உடைத்து சுத்தம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

    குடியிருப்பில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில், 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    படுகாயம் அடைந்த போக்குவரத்து காவலர் சரவணன் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    திருப்போரூர்:

    சென்னையில் மெரினா மற்றும் கிழக்குகடற்கரை சாலைகளில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பைக்ரேஸ் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்தநிலையில் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் விடுமுறை தினமான இன்று அதிகாலை முதல் பைக் ரேஸ் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 50-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

    பாதுகாப்பு உடை அணிந்து இருந்த அவர்களை உதவி கமிஷனர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.

    பின்னர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பினர். இதனால் கோவளம் அடுத்த குன்னுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    • உயர் அதிகாரிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் மத்திய தொழல் பாதுகாப்பு படையினர் ஷிப்டு முறையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாதுகாப்பு படைவீரர் ரவி கிரண் (வயது37) பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ரவிகிரண் அணுமின்நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பணி முடிந்து அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரியத்திற்கு செல்ல உடன் பணியாற்றும் மற்ற வீரர்களுடன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அனைவரும் தங்களது துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சதுரங்கபட்டினம் "டச்சு கோட்டை" அருகில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பஸ் குலுங்கியது.

    அந்த நேரத்தில் ரவிகிரண் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கி குண்டுகள் ரவிகிரணின் கழுத்தில் பாய்ந்து தலைவழியாக வெளியே வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரவி கிரண் உயிரிழந்தார். இதனை கண்டு உடன் பயணம் செய்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரவிகிரணின் உடலை கைப்பற்றி கல்பாக்கம் அணுசக்தி துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ரவிகிரண் வைத்து இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த குண்டுகள் அகற்றப்படாமல் இருந்தது தெரிந்தது.

    வழக்கமாக பாதுகாப்பு பணியின் போது மட்டுமே துப்பாக்கியில் குண்டுகள் லோடு செய்து தயார் நிலையில் வைக்கப்படும். பணி முடிந்ததும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை அகற்றி அதனை தங்களது பாதுகாப்பு இடுப்பு பெல்ட்டில் உள்ள சிறிய பையில் வைத்து விடுவார்கள்.

    ஆனால் ரவி கிரணிடம் இருந்த துப்பாக்கியில் குண்டுகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து உள்ளது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எதற்காக எடுக்காமல் இருந்தார்? மறந்து விட்டாரா? என்று தெரியவில்லை.

    எனவே வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது ரவிகிரணிடம் இருந்து துப்பாக்கி தவறுதலாக வெடித்து குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்கு திட்டமிட்டு துப்பாக்கியில் இருந்த குண்டை அகற்றாமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இது தொடர்பாக அவருடன் பணியில் இருந்த மற்றும் பஸ்சில் பயணம் செய்த வீரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரவிகிரணின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இறந்து போன ரவிகிரண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் கர்நாடகாவில் இருந்து கல்பாக்கத்திற்கு பணிமாறுதல் ஆகி வந்து உள்ளார். அவருக்கு அனுசா என்ற மனைவியும், ஷாஸ்வினி, ரித்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    அணுமின் நிலைய மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    சென்னை:

    செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.

    விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது.

    அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பழுதாகி நின்ற லாரி மீது மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது.

    இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் மீது முசிறியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்துக்களில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

    தகவலறிந்த போலீசார் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×