என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தற்போது ஓட்டு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருவதால் மழை காலங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் அடுத்த பொம்மசமுத்திரம் ஊராட்சி பெருமாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 52 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இன்றி ஒரு ஆசிரியர் மட்டுமே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அந்த ஆசிரியரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதையடுத்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த பள்ளிக்கு தற்காலிகமாக 2 ஆசிரியர்களை நியமித்து தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். அதிலும் ஒரு ஆசிரியர் கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவிப்பதாக கூறி இன்று பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:- இந்த பள்ளிக்கு என்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தது ஒரு ஆண்டுக்காவது மாற்றப்படாமல் இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களின் கல்வி பாதுகாக்கப்படும். அடிக்கடி ஆசிரியர்கள் மாற்றப்படுவதாலும் நிரந்தரமாக ஆசிரியர் இல்லாததாலும் மாணவர்களின் மனநிலை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாக உள்ளது. அதேபோல் பள்ளிக்கென புதிதாக கான்கிரீட் கட்டிடம் கட்டிதர வேண்டும். தற்போது ஓட்டு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருவதால் மழை காலங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

    மேலும் பள்ளிவளாகத்தை சுற்றிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக தேவையான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது பற்றி தெரியவந்ததும் நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • பூவேஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். ஆட்டோ டிரைவர்.

    இவர் ஈரோட்டில் ஒரு திருமண மண்டபத்திற்கு அலங்காரம் செய்வதற்காக அலங்காரப் பொருட்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கபிலர்மலை அருகே சிறுகிணத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் சிவநாதன் (வயது20.), கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சிவா (வயது19), அதே பகுதியைச் சேர்ந்த பூவேஷ், வெங்கரைப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஈரோடு பகுதிக்கு சென்றார்.

    பின்னர் திருமண மண்டபத்தில் அலங்காரம் செய்துவிட்டு மீண்டும் கபிலர்மலை வருவதற்காக ஜேடர்பாளையம் வந்து ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி செல்லும் சாலையில் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ஜேடர்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்த லாரியும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்தானது.

    இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த சிவநாதன், சிவா ஆகியோருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தனர். அதேபோல் பூவேஷ், ரமேஷ், ஆட்டோ டிரைவர் சாமிநாதன் ஆகிய 3 பேருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிவநாதன் மற்றும் சிவா, பூவேஷ், ரமேஷ், சாமிநாதன் ஆகிய 5 பேரையும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவநாதன் மற்றும் சிவா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதேபோல் பூவேஷ், ரமேஷ், சாமிநாதன் ஆகிய 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பூவேஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ரமேஷ், சாமிநாதன் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவநாதன் மற்றும் சிவா, பூவேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றின் கரைப்பகுதியில் 3 பேரின் உடைகள் மற்றும் செல்போன், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் மட்டும் இருந்தது.
    • ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் நகப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் வினித் (20). இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர்களான தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் நந்தகுமார்(21) மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் பெசருல்லி சாகிப் ஆகிய இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

    நேற்று வினித் வீட்டிற்கு அவரது நண்பர்களான நந்தகுமார், ஷேக் பெருசல்லி சாகிப் ஆகியோர் வந்துள்ளனர். பின்னர் மாலை சுமார் 3 மணியளவில் நகப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு நண்பர்கள் 3 பேரும் குளிக்க சென்றுள்ளனர். இரவு 7 மணி ஆகியும் வீட்டிற்கு வராததால் வினித்தின் பெற்றோர் காவிரி ஆற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றின் கரைப்பகுதியில் 3 பேரின் உடைகள் மற்றும் செல்போன், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் மட்டும் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜவேல், ஜெர்மையா அருள் பிரகாஷ், செல்வம், கார்த்திகேயன், பூபதி, சரவணகுமார், சரவண கணேஷ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன 3 கல்லூரி மாணவர்களையும் காவிரி ஆற்றில் மீன்பிடி படகுமூலம் தேடினர்.

    இரவு 11 மணி வரை தேடி பார்த்தனர். இரவு இருள் சூழ்ந்ததன் காரணமாக தண்ணீரில் மாயமான மாணவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து 11 மணியுடன் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 2-வது நாளாக நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் நகப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்து மீன்பிடி படகு மூலம் காவிரி ஆற்று தண்ணீரில் மூழ்கி காணாமல் போன 3 பொறியியல் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து தேடினர்.

    அப்போது வட்டப்பாறை என்ற பகுதியில் பாறை இடுக்கில் இருந்து மாணவர் வினித் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து மேலும் நந்தகுமார், ஷேக் பெசருல்லி சாகிப் ஆகிய 2 கல்லூரி மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் உடல்களை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
    • போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சவுதாபுரம் ஓலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). வெல்டிங் தொழிலாளி. இவர் காளிப்பட்டி சின்ன பூசாரி காடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டு அவரை வெளியூருக்கு அழைத்து சென்றார்.

    இது குறித்த புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிரகாஷை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • நாமக்கல்லில் ரூ.664 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொம்மைகுட்டை மேட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய பஸ் நிலையம் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.664 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் முதலைப்பட்டியில் ரூ.19.50 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் மொத்தம் ரூ.810 கோடியே 28 லட்சம் மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு வழங்கினார்.

    விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது:

    தமிழ்நாடு வளச்சிக்கு அடித்தளம் இந்த நாமக்கல் மாவட்டம்.

    திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் நம்ம திராவிட மாடல் ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து நடைபோட வைப்போம்.

    அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவோம்.

    அனைத்து வழிகளிலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்று சேர்கிறது. நவம்பர் முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நானே நேரில் சென்று அரசின் திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளேன்.

    மோகனூரில் உள்ள சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படும்.

    திமுகவுக்கு வாக்களிக்காதவர்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு உள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர் எந்த உலகில் இருக்கிறார்? கனவுலகில் இருக்கிறாரா? தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு சரிந்து விட்டதாக இபிஎஸ் கூறுகிறார்.

    மாதந்தோறும் ஊக்கத்தொகை பெறும் மக்களிடம் கேளுங்கள், தி.மு.க.வின் மதிப்பு தெரியும்.

    நடந்துமுடிந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. செல்வாக்கு பெற்றுள்ள பகுதிகளிலும் தி.மு.க. வெற்றி வாகை சூடியுள்ளது என தெரிவித்தார்.

    • நாமக்கல்ல் செலம்பகவுண்டர் பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்தச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    நாமக்கல்:

    அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய பஸ் நிலையம் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்றார். இதையடுத்து அங்கிருந்து காரில் நாமக்கல்லுக்கு சென்றார்.

    நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட செலம்பகவுண்டர் பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள அந்தச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே எங்கள் கனவு என்றார் வன்னி அரசு.
    • திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது என்கிறார் மத்திய மந்திரி எல்.முருகன்.

    நாமக்கல்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே தங்களின் கனவு என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில், விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது. சமூகநீதி குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி பட்டியலின மக்களின் தலைவராவார்? என கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். அவருக்கு அதற்கான தகுதி உள்ளது.

    இதற்காக தமிழனாக, என்னை விட பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது.

    எல்.முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகும் போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா?

    உள் ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் அவரை முதல்வராக விடமாட்டீர்கள்?

    இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்.

    நாங்கள் எப்பாடுபட்டாவது அவரை முதல்வர் ஆக்குவோம் என தெரிவித்தார்.

    • புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விழும்.
    • சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள மூலவர் மீது புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மூலவர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

    அதேபோல் இன்று காலை 6.30 மணி அளவில் சூரிய ஒளிக்கதிர் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கரஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்திநாயக்கன் பாளையம் பால் சொசைட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு என்பவரது 10 வயது கஷ்மிதா என்ற பெண் குழந்தையை கத்தியால் வெட்டியுள்ளார்.

    குழந்தையின் சத்தம் கேட்டு செந்தில் குமாரின் தாய் சம்பூர்ணம் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசு, முத்துவேலு ஆகியோர் செந்தில் குமாரை பிடிக்க ஓடி வந்தனர். அவர்கள் இருவரையும் செந்தில் குமார் கத்தியால் தாக்கினார்

    இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    படுகாயம் அடைந்த தங்கராசு, முத்துவேல் இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் செந்தில் குமார் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் உடல் நிலை தேரிவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பைக் சம்பந்தமாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 பெண் குழந்தைகளில் ஷோபாவில் அமர்ந்திருந்த கஷ்மிதாவை லேப்டாப் வைத்திருந்த மேஜைக்கு அடியில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தி வெட்டியுள்ளார் என்று விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை.
    • தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது.

    கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 57 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இதனால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நாமக்கல் பள்ளிப்பாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால், கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
    • கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு அரசு டாக்டராக பணியாற்றி வந்தவர் அனுராதா.

    இந்த நிலையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக அனுராதா மற்றும் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

    இதையடுத்து நாலு கால் மண்டபம் அருகே இருந்த தமிழரசு மருத்துவமனையில் டாக்டர் அனுராதா பயன்படுத்தி வந்த அறைகள் மற்றும் நாமக்கல் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் கிளினீக் ஆகியவை அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

    குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட துணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் அனுராதா பணியாற்றி வந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் அனுராதாவுக்கு சொந்தமான நாமக்கல் ரோட்டில் உள்ள கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சோதனை நிறைவடைந்த பிறகு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

    இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? குழந்தை விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? மேலும் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    தற்போது குழந்தை விற்பனை விவகார வழக்கை மீண்டும் அதிகாரிகள் கையில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×