search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம்:-

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது அகமலை ஊராட்சி.

    இப்பகுதி போடி தாலுகாவிற்கு உட்பட்டது என்றாலும் சாலை வசதி என்பது பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாகவே உள்ளது.

    இந்த ஊராட்சியில் கண்ணகரை, அலங்காரம், பட்டூர், பரப்பம்பூர், அண்ணா நகர், கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.

    இந்த மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சாலை 2 கி.மீ.தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு செல்லும் மலை கிராம பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் சகதிகளை கடந்தும், சாலையில் சரிந்துள்ள புதர்கள் மற்றும் மரங்களைக் கடந்து 10 கி.மீ. தூரத்திற்கு உள்ள பாதையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் மலை கிராம மக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவதற்கும், விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக பெரியகுளத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, நடந்து செல்லவும் வழியில்லாத நிலை உள்ளதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மலைகிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கடந்த மாதம் அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    அதிகாரிகள் சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் அதன்பிறகும் சாலை ஏற்படுத்தி தராததால் தற்போது பெய்த கனமழைக்கு மலைகிராம மக்கள் பாதிக்கப்பட்டு ள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    எனவே விரைந்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கனமழை காரணமாக அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
    • நீரை சுத்திகரித்தாலும் அணை நீர் செந்நிறமாகவே இருப்பதால் மக்கள் அதிர்ச்சி.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    இந்நிலையில், சோத்துப்பாறை அணைக்கு மேல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக, அணை நீர் செந்திறமாக மாறியுள்ளது. பெரியகுளம் நகராட்சியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நீரை சுத்திகரித்தாலும் அணை நீர் செந்நிறமாகவே இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொது மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    • முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 3402 கன அடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி 62.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 2745 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே இன்று மாலைக்குள் 63 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாய பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 124.30 அடியாக உள்ளது. அணைக்கு 3402 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3479 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 534.70 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 20, அரண்மனைப்புதூர் 0.4, பெரியகுளம் 52, மஞ்சளாறு 10, சோத்துப்பாறை 123.2, வைகை அணை 2.2, போடி 33.4, உத்தமபாளையம் 5.6, பெரியாறு அணை 72.8, தேக்கடி 60.4, சண்முகாநதி 10.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றுள்ளனர்.
    • மற்ற 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் ஆசாரி மார் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் லிங்கேஷ் (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்த விஜயகணேசன் மகன் சேவக் (23). மணிகண்டன் மகன் சஞ்சய் (22). அச்சுதன் மகன் மோனிஷ் (22), சுந்தரம் மகன் கேசவன் (22) நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று மாலை வீட்டில் இருந்து கம்பத்துக்கு மது குடிக்க சென்றனர்.

    இதில் 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் மற்ற 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றுள்ளனர். மது குடித்து விட்டு மீண்டும் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வீலிங் செய்தபடி வந்துள்ளனர்.

    கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆதி சுஞ்சனகிரி மடம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் லிங்கேஷ் மற்றும் சேவக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மற்ற 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தீபாவளி நாளில் ஒரே தெருவைச் சேர்ந்த திருமணமாகாத 3 இணை பிரியாத நண்பர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எங்கள் கட்சியில் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள்.
    • விஜயுடன் இருக்கும் ரசிகர்கள் பாதிக்கு மேல் எனக்குதான் வாக்களிப்பார்கள்.

    தேனி:

    தேனி அருகே மதுராபுரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 4 முக்கிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்தே சந்தித்துள்ளது. இந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும் வாக்கு சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    எனவே வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம். அடுத்து வரும் தேர்தல்களிலும் எங்கள் நிலைப்பாடு மாறாது. தி.மு.க. இதுவரை கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டதே கிடையாது.

    கல்வியை மாநில உரிமையில் இருந்து எடுத்தது காங்கிரஸ் கட்சி, ஜி.எஸ்.டி. வரி, நீட், என்.ஐ.ஏ. ஆகியவற்றைக் கொண்டு வந்தது காங்கிரஸ். அதனை ஊட்டமாக வளர்த்தது மோடி. எனவே எங்கள் பார்வையில் காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி. பாரதிய ஜனதா கட்சி மானுட குலத்தின் எதிரி.

    ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க முயன்ற போதும் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கட்சி ஆரம்பித்தபோதும் ரசிகர்கள் கூட்டம் கூடினார்கள். அதே போல்தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்தபோதும் கூட்டம் கூடியுள்ளது.

    நடிகர்கள் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றினார். நான் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றவில்லை. விஜய்யை ரசிக்கும் வாக்காளர்கள் என்னுடைய வாக்காளர்கள் இல்லை. விஜயின் கட்சிக்கு தலைவர் அவர்தான். ஆனால் என்னுடைய கட்சிக்கு தலைவர் பிரபாகரன்.

    எனவே எங்கள் கட்சியில் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள். விஜயுடன் இருக்கும் ரசிகர்கள் பாதிக்கு மேல் எனக்குதான் வாக்களிப்பார்கள்.

    கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பதாக விஜய் குண்டு போட்டுள்ளார். இதனை நான் வரவேற்கிறேன. அந்த அறிவிப்பை ஏற்று அவரோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது கொள்கை எந்த காலத்திலும் மாறாது.

    ஜனாதிபதியை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். வறட்சி வரும் போது புரட்சி வெடிக்கும். இனி வாழவே முடியாது என்ற நிலை வரும் போது மக்கள் புரட்சி செய்வார்கள். இலங்கையிலும், பங்களாதேசத்திலும் அதுதான் நடந்தது. அது போன்ற ஒரு நிலை இந்தியாவிலும் ஒரு நாள் நடக்கும்.

    சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்க கடைசி கருவி சாதிவாரி கணக்கெடுப்புதான். வகுப்பு வாத பிரதிநிதிதுவம் கொடுத்து விட்டால் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடும். ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பை தி.மு.க. எடுக்கவே எடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைகை அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீர் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1180 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து 122.95 அடியாக உள்ளது.

    அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 456 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. வருசநாடு, அரசரடி, கண்டமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1191 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 59.68 அடியாக உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் பகுதியில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கடும் அவதியடைந்தனர். இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதன் காரணமாக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீர் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    குடிநீருக்காக 69 கனஅடியுடன் சேர்த்து 569 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3542 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 224 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 64.34 கனஅடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 30 கனஅடியும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7.2, தேக்கடி 20.4, கூடலூர் 8.2, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 4.6, வீரபாண்டி 4.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதேனி மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக உள்ளது. அணைக்கு 326 கனஅடி நீர் வருகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 55 அடியில் நீடித்து வருகிறது.

    கூடலூர்:

    புதிய 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    நேற்று இரவு பெரியகுளம், வடுகபட்டி, டி.கல்லுப்பட்டி, கைலாசபட்டி, தேவதானப்பட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அதனை தொடர்ந்து இரவு முழுவதும் மிதமான சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதன் மூலம் ஆறு, குளம், கண்மாய், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக உள்ளது. அணைக்கு 326 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 833 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2556 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 5692 அடியாக உள்ளது. 1098 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3040 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 55 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.24 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 30 கனஅடி.

    ஆண்டிபட்டி 29.2, அரண்மனைபுதூர் 2.2, பெரியகுளம் 10.4, மஞ்சளாறு 9, சோத்துப்பாறை 3.8, வைகை அணை 36.8, போடி 6.6, உத்தமபாளையம் 2.2, கூடலூர் 1.2, பெரியாறு அணை 11.4, சண்முகாநதி அணை 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. 332 கனஅடி நீர் வருகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் பருவமழை கை கொடுத்ததால் நீர்மட்டம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து பெரியாறு பாசன பகுதி மற்றும் திருமங்கலம் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களான 1 லட்சத்தி 5 ஆயிரத்தி 2 ஏக்கருக்கு கடந்த செப்.15ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    மேலும் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள 45,041 ஏக்கர் இருபோக பாசன நிலங்களின் முதல்போக பாசனத்திற்காக ஜூலை 3ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் கடந்த 14ம் தேதி வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை பொழிவு இல்லை. இதனால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே அணையிலிருந்து பாசனத்திற்கு மீண்டும் 800 கனஅடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி என மொத்தம் 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 56.79 அடியாக உள்ளது. அணைக்கு 971 கனஅடி நீர் வருகிறது. 3018 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. 332 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2648 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.24 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் 7வது நாளாக நீர்வரத்து சீராகாததால் தடை தொடர்வதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கோபுர தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மோகித்குமார் (வயது 10). ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த வாரம் மோகித்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    சிகிச்சையில் இருந்த மோகித்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சங்கமூர்த்திபட்டியில் சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். தற்போது தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி சுகாதார சீர்கேட்டை களைய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல ஆம்னி பஸ்கள் சென்னைக்கு செல்லவில்லை.
    • கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் இருந்து தேனி, மதுரை, கரூர் வழியாக சென்னைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்கள் அதி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டும் உள்ளது.

    குறிப்பாக தென் மாவட்ட ரெயில்களின் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு போடியில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய அதி விரைவு ரெயில் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் டிக்கெட்டை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற்றுச் சென்றனர்.

    இதே போல் பல ஆம்னி பஸ்கள் சென்னைக்கு செல்லவில்லை. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் அவசர தேவைக்காக சென்னை செல்ல கைக்குழந்தை, முதியவர்களுடன் வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    அரசு பஸ்கள் மற்றும் மாற்று வாகனங்களில் சென்னை சென்றனர். அடுத்ததாக வியாழக்கிழமை ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது.
    • விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் நீர்நிலைகளில் தண்ணீரின்றி வறண்டது.

    மேலும் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை பெய்வதாலும், அறுவடை தொடங்கி உள்ளதாலும் தண்ணீரின் தேவை குறைந்துள்ளது.

    இதனால் நேற்று 1333 கன அடியாக இருந்த நீர் திறப்பு 1300 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு தமிழக பகுதிக்கு 1267 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 260 கன அடிநீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 123.35 அடியாக உள்ளது. 3291 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    தமிழக பகுதிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி 117 மெகாவட்டாக குறைந்தது.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.68 அடியாக உள்ளது. 1181 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1199 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2828 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 112.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை வருகிற 15ந் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழைப்பொழிவு அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    ×