என் மலர்
தென்காசி
- சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
- குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி குற்றால நாதர் கோவிலில் வழிபட்டனர்.
மேலும் ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் மிதமாக விழுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.
- சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான்.
- விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதான மூத்த மகனுக்கு திடீரென மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சிறுவனின் தந்தை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இரவில் சிறுவனின் 45 வயதான தாய் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போன அந்த சிறுவன், தனது தந்தைக்கு போன் செய்து அம்மாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டேன். தலையில் இருந்து ரத்தம் கொட்டுகிறது என்று கூறியுள்ளான்.
உடனே பதறிப்போன அவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர்களிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பெண் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். அவனை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தபோது, தனது தாயை நினைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தான்.
மேலும் அங்கிருந்த போலீசாரிடம், எனது தாயை எங்கே, நான் அவரிடம் போக வேண்டும் என்று அழுதபடியே கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
- புத்தாண்டு பிறந்ததையொட்டி அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
- ஐயப்ப பக்தர்கள் குளித்து குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு சென்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்தது.
இதனால் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
மெயின் அருவியில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் இரவு வரை சுற்றுலா பயணிகளுக்கு மெயின் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் குற்றாலம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று 2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
மெயின் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதால் குற்றாலம் வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் குற்றாலநாதர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் குளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதில் ஐயப்ப பக்தர்கள் குளித்து குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சீரானது என அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் நீண்ட வரிசையில் நின்று ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பிறப்பையொட்டி குற்றாலநாதர் கோவில் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், தேவாலயங்கள் என பல்வேறு வழிபாட்டுத் தலங்களிலும் காலை முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு மேல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மிதமான மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் இரவிலும் வனப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் குளிப்பதற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பழைய குற்றால அருவி பகுதியை சுற்றி சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
- இன்று காலை முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளித்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 13-ந்தேதி பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது.
இந்நிலையில் வெள்ள நீர் குறைந்த சில நாட்களிலேயே மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பழைய குற்றால அருவி பகுதியில் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.
விவசாய சங்கங்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் என பலரும் பழைய குற்றால அருவியில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் அருவி கரையை சுற்றி பாதுகாப்பு கம்பிகள் மீண்டும் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளித்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சற்று குறைந்து சீராக விழுந்து வருவதால் அங்கும் காலை முதலே ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
- சொத்து பிரச்சனையில் விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார்குறிச்சி:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி கருத்தப்புலியூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள். இவருக்கு 2 மனைவிகள். இதில் மூத்த மனைவிக்கு இருதயராஜ் (வயது47) என்ற மகன் உள்ளார்.
விவசாயியான இவருக்கும், அவரது தந்தையின் 2-வது மனைவியின் மகன்களான ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருதயராஜ் அப்பகுதியில் உள்ள அச்சங்குளத்தில் மீன் பிடிக்கும் குத்தகை எடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு அவர் குளப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகிய 2 பேரும் இருதயராஜுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருதயராஜை வெட்டிய தோடு அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட இருதயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ் கூறுகையில், சொத்து பிரச்சனை காரணமாக ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகிய 2 பேரும் இருதயராஜை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
சொத்து பிரச்சனையில் விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பழைய குற்றாலம் அருவியில் மட்டும் 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- குற்றாலம் பகுதி வியாபாரிகள் தற்பொழுது அருவியில் குளிக்க அனுமதி வழங்கியதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் கொட்டியது. இதனால் அருவிக்கரைகள் மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்தது.
இந்த சேதங்களானது சீர் செய்யப்பட்டு தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழைய குற்றாலம் அருவியில் இதுவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சீரமைப்பு பணி ஓரளவு நிறைவு பெற்றதால், நேற்று இரவு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் காலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி சபரிமலை நோக்கி சென்று வருகின்றனர்.
மேலும் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை குளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த குற்றாலம் பகுதி வியாபாரிகள் தற்பொழுது அருவியில் குளிக்க அனுமதி வழங்கியதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கடந்த வாரம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
- அருவிக்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர் செய்த பிறகே குளிக்க அனுமதி.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று வரை 5 நாட்கள் இந்த தடையானது நீடித்தது.
இந்த நிலையில் தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகிய 2 அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

ஆனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது இன்று 6-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சேதாரம் அதிக அளவு காணப்பட்டு வரும் நிலையில், அருவிக்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர் செய்த பிறகே குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் சரி செய்யும் பணிகள் தீவிரம்.
- தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு கரை புரண்டு ஓடியது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் பலத்த சேதங்க ளும் ஏற்பட்டது. மெயின் அருவி வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக விழ தொடங்கி உள்ளது. மெயின் அருவி பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல் கற்கள், மரக்கிளைகள் நடைபாதை முழுவதும் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் அதனை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அருவி பகுதிகளை சுற்றி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் அதனையும் சரி செய்யும் பணிகள் முழுமையாக நடைபெற்ற உடன் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் தண்ணீர் சீற்றம் குறைந்து மிதமாக விழத் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து இன்று 5-வது நாளாக குளிப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
- ஜெராக்ஸ் எந்திரம் வைத்து கலர் தாளில் கள்ள நோட்டு அச்சடித்துள்ளார்.
- ஆசைதம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வி.கே.புரம்:
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மருதம்நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகன் முகமது சமீர் (வயது 28).
இவர் அப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று கடையம் அருகே உள்ள ஆழ்வான் துலுக்கப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த களஞ்சியம் என்ப வரது மகன் ஆசைத்தம்பி (55) வந்துள்ளார்.
தொடர்ந்து அவர் 100 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்து ¼ கிலோ கத்தரிக்காய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த நோட்டை வாங்கிய முகமது சமீர், நோட்டில் சந்தேகம் ஏற்படவே அருகே காய்கறி வாங்கி கொண்டிருந்த சுடலையாண்டி என்பவரிடம் காட்டியுள்ளார். அப்போது ஆசைத்தம்பி கொடுத்தது கள்ளநோட்டு என தெரியவந்தது.
உடனே ஆசைத்தம்பி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை முகமது சமீரும், சுடலையாண்டியும் சேர்ந்து சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
அவரிடம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் விசாரணை நடத்தியதில் அவர் தனது வீட்டில் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து கலர் தாளில் கள்ள நோட்டு அச்சடித்து அந்த நோட்டை கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில் ஒரு ஜெராக்ஸ் எந்திரம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 25 எண்ணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக முகமது சமீர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து ஆசைதம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்.
- மெயின் அருவி கரையின் பல பகுதிகள் சேதம் அடைந்தன.
- வெள்ளத்தில் பெரிய அளவிலான கற்களும், மரங்களும் அடித்து வரப்பட்டதால் அருவி கரைகள் பெரும் சேதம் அடைந்து உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இன்று அதிகாலை முதல் மழை முற்றிலும் குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக குற்றால அருவிகளில் இதுவரை இல்லாத அளவு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மெயின் அருவி கரையின் பல பகுதிகள் சேதம் அடைந்தன. அருவிக்கரை அருகில் போலீசார் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தி வந்த இரும்பு கூண்டு அடியோடு காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாலத்தின் சில பகுதிகளும் சேதம் அடைந்தது.
வெள்ளத்தில் பெரிய அளவிலான கற்களும், மரங்களும் அடித்து வரப்பட்டதால் அருவி கரைகள் பெரும் சேதம் அடைந்து உள்ளது.
இன்று காலை முதல் குற்றாலத்தில் மழை இல்லாத நிலையில் ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி , புலி அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. எனினும் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4-வது நாளாக நீடிக்கிறது.
இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் அருவி கரைக்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை முதல் வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் மாலையில் வெள்ளப்பெருக்கு பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதன் பின்னர் மாலை முதல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
- சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான ஆவுடையானூர், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி கல்லூரணி, மேலப்பாவூர், குறுங்காவனம், கீழப்பாவூர், பெத்தநாடார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்வெளிகள் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
சாலைப்புதூர், நவநீதகிருஷ்ணபுரம், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெண்டை செடிகள் பாரவி இருந்த நிலையில் தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதுவும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அரசு உரிய நிவாரணம் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து மேலப்பாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து பெய்த கனமழையினால் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
நாகல்குளம் பகுதி வழியாக குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஒரு சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அதில் அதிகாரிகள் தலையிட்டு குளங்களுக்கு செல்லும் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.