search icon
என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஒருவரை யானை மிதித்து தாக்கியது.
    • இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    திருச்செந்தூரில் கோவில் யானை தெய்வானை பாகன் மற்றும் அவரது உறவினரை மிதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஒருவரை யானை மிதித்து தாக்கியது.

    இதில், படுகாயமடைந்த யானை பாகன் மற்றும் பக்தர் ஆகியோரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை முன்பு உறவினர்கள் கதறி அழுதனர்.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.
    • அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கோவில் வளாகத்தில் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

    திருச்செந்தூர்:

    கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடக்கிறது.

    இந்நிலையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் குவிந்தனர். அங்கு அவர்கள் கடலில் புனித நீராடி புத்தாடை அணிந்து கோவில் வளாகம், தூண்டுகை விநாயகர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர்.

    திருச்செந்தூர் அகில பாரத ஐயப்ப சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் அஜித் குமார், ஆறுமுகநேரி குருசாமி முத்து கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் சரண கோஷம் முழங்கியது.

    கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கோவில் வளாகத்தில் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதி இந்தியாவிலேயே அதிகம் மழைப்பொழிவு பெறும் வனப்பகுதியாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் மழை நீடித்தது.

    நேற்றும் பகலில் தொடங்கி இன்று காலை வரையிலும் நாலுமுக்கு, ஊத்து பகுதியில் பலத்த மழை பெய்தது. காக்காச்சி பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 10.1 சென்டிமீட்டரும், நாலுமுக்கில் 9.6 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    இதேபோல் மாஞ்சோலை, காக்காச்சி தேயிலை தோட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நேற்று மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இன்றும் அங்கு மழை பெய்து வருவதால் 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை வனத்துறை நீட்டித்துள்ளது.

    களக்காடு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
    • மழையை பொருட்படுத்தாமல் மக்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சமீபகாலமாக மாதந்தோறும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கியிருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இரவில் கடற்கரையில் தங்கி நிலா வெளிச்சத்தில் கடற்கரையில் பூஜை செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்நிலையில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.

    இன்று பவுர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் தங்க இயலாது.

    எனவே இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று அம்பை, ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. அம்பை, ராதாபுரம் பகுதிகளில் பிற்பகலில் தொடங்கி இரவு வரை பரவலாக மழை பெய்தது.

    ராதாபுரத்தில் அதிகபட்சமாக 19 மில்லிமீட்டரும், அம்பையில் 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூர், திருக்குறுங்குடி உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மலை பெய்த வண்ணம் இருந்தது. இன்று காலை முதலே வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது.

    பாபநாசத்தில் 23 மில்லிமீட்டரும், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் பகுதிகளில் 19 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    நம்பியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 17 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை மாநகர பகுதியில் நெல்லை, பாளையங்கோட்டையில் நேற்று பகலில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்த நிலையில், பிற்பகலில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்தது.

    சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டையில் 13.20 மில்லிமீட்டரும், நெல்லையில் 8.20 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    இன்று காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டதால் கடும் அவதிக்கு இடையே மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டி னம், சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் நேற்று பிற்பகலில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.

    திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினத்தில் இன்று காலையிலும் மீண்டும் மழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.

    காலை நிலவரப்படி அதிகபட்சமாக திருச்செந்தூரில் 6 சென்டிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியிருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    திருச்செந்தூரில் சாக்கடை மற்றும் மழைநீர் கலந்து வடிகாலில் அதிகமான தண்ணீர் கடலுக்கு சென்றது. திருச்செந்தூரில் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை மழை பெய்த நிலையில், பள்ளி மாணவ-மாணவிகள் குடை பிடித்தும், சில மாணவிகள் மழையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட்டு பள்ளிக்கு சென்றனர்.

    குலசேகரன்பட்டினம் பகுதியில் விடிய, விடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்சி அடைந்தனர். பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் உட்பட 18 ஊராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 9 மணியை கடந்தும் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.


    உடன்குடி, குலசை, பரமன்குறிச்சி பஜார் பகுதியில் மழைநீர் பல இடங்களில் தேங்கி கிடந்ததால் போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்தது. தென்னை, பனை மர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ராமநதி, கடனாநதி மற்றும் கருப்பாநதி, குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    ராமநதியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து சென்றது.

    • அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    • உதயநிதி ஸ்டாலினிடம் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசின் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்திதில் கலந்து கொள்ள சென்றார்.

    அப்போது டூவிபுரத்தில் உள்ள வருவாய் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று 'திடீர்' ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் சுப்பையா மற்றும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் அளிக்கும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது என்று கூறினார்.

    தொடர்ந்து அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    பின்னர் பொதுமக்கள் அளிக்கும் பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அதனை முடித்து வெளியே வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி உடன் இருந்தார்.

    • பயனாளிகளுக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டானிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    அப்போது பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தும், முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்று பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து மாலை 6 மணி அளவில் கார் மூலம் சாலை மார்க்கமாக தூத்துக்குடி வருகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி சத்யா ரிசார்ட்டில் நடைபெறும் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் மதியம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் தமிழக அரசின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் தி.மு.க. பவளவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை 4 மணிக்கு குறிச்சி நகர் மெயின்ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழக்கும் விழாவில் பங்கேற்கிறார்.

    அப்போது ஏராளமான பயனாளிகளுக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    இதனை முடித்துக் கொண்டு மாலை 6 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் மதுரை புறப்பட்டு செல்கிறார். பின்னர் அங்கிருந்து விமானம் சென்னை செல்கிறார்.

    துணை முதலமைச்சர் ஆன பின்னர் தூத்துக்குடிக்கு முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இன்று மாலை மாவட்ட எல்லையான எட்டயபுரம் நான்கு வழிச்சாலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டானிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    • தமிழகம் முழுவதும் கொலைகள் அதிகமாக உள்ளது.
    • தேர்தல் வேலைகளை ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    தூத்துக்குடி:

    திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்வதற்காக வி.கே. சசிகலா சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல் சூழ்நிலை எப்போதும் போல தான் உள்ளது. புதிய கட்சிகள் தொடங்கியவர்கள் பற்றி 2026-ம் ஆண்டு தான் தெரியும். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் வரப்போகிறது. எனவே 2026-ல் தேர்தலுக்காக பயணத்தை தொடங்கி இருப்பார்கள்.

    தி.மு.க. அரசு அமைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் மக்களுக்கு செய்ய வேண்டியது எதையுமே தி.மு.க. அரசு செய்யவில்லை. தமிழகம் முழுவதும் கொலைகள் அதிகமாக உள்ளது. பெண்கள் மாலை 5 மணிக்கு மேல் வெளியில் போக முடியவில்லை. சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது. மக்கள் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்பது குறித்து தற்போது வரை தி.மு.க. அரசுக்கு தெரியவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு நல்லது செய்வதை போன்று பிம்பத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மக்கள் அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், தேர்தல் வேலைகளை ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதை மக்கள் கவனித்து கொண்டுதான் உள்ளனர். இது 2026 தேர்தலில் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குலசேகரப்பட்டினம் வடக்கூர் கடற்கரையில் இருந்த படகில் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்ததை கண்ட கியூ பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு தொடர்ந்து பீடி இலைகள், மஞ்சள், பூச்சி மருந்து, அழகுப்பொருட்கள், கடல் அட்டை, போதை பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் 'கியூ' பிரிவு போலீசார், கடலோர காவல் குழும போலீசார் மற்றும் சுங்க இலாகாவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் கடற்கரை வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார்,சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்கள் கீதன், ராமர், தலைமை காவலர் இருதய ராஜ்குமார், குமார், இசக்கிமுத்து மற்றும் பழனி முருகன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது குலசேகரப்பட்டினம் வடக்கூர் கடற்கரையில் இருந்த படகில் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்ததை கண்ட கியூ பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த பண்டல்களையும், இருசக்கர வாகனங்களையும் விட்டு விட்டு கடத்தலில் ஈடுபட்டவர்கள் படகு மூலம் தப்பி சென்றனர்.

    இதைத்தொடர்ந்து, கடற்கரையில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 636 கிலோ எடை கொண்ட 21 பீடி இலை மூட்டைகளையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.
    • பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூறினார்கள்.

    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைச் சேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார்.

    கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவ-மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றார். அங்கு முதல் நாள் போட்டி முடியாததால் மறுநாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் இரவில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். அப்போது, பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. அதாவது, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

    இதுபற்றி அறிந்த குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி சிதம்பரநாதன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் பாலசுந்தரம், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பள்ளி நிர்வாகம், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    பள்ளி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, பெற்றோர் கூறுகையில், உடற்கல்வி ஆசிரியரை கைது செய்ய வேண்டும். பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதுதொடர்பாக துணை சூப்பிரண்டிடம், பெற்றோர்கள் புகார் செய்தனா். அதன்பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கோவையில் பதுங்கிய இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் நேற்று இரவில் கைது செய்து திருச்செந்துர் அழைத்து வந்ததனர்.

    இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பீடி இலை பண்டல்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடலோர காவல்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • பீடி இலை பண்டல்களை கடத்தி வந்தவர்கள் யார்? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கோவலம் கடற்கரை பகுதியில் முட்புதருக்குள் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ரென்னீஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது முட்புதருக்குள் ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கபட்டிருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 2 டன் எடை உள்ள பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மதுரையில் இருந்து இந்த பீடி இலை பண்டல்கள் கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இவற்றின் மொத்த மதிப்பு ரூ.60 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை பண்டல்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடலோர காவல்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த பீடி இலை பண்டல்களை கடத்தி வந்தவர்கள் யார்? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரை ஒதுங்கிய ஆமை சுமார் 3 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.
    • ஆமை எவ்வாறு இறந்தது? யாரேனும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை ஆமை இனங்கள் உயிர் வாழ்கின்றன. அவை கடற்கரை பகுதிகளில் குஞ்சு பொரித்து வாழ்ந்து வருகின்றன.

    ஆமையை மீனவர்கள் உணவுக்காக பிடிக்கவோ, வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் அரிய வகை ஆமை இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.

    கரை ஒதுங்கிய ஆமை சுமார் 3 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதன் முகத்தில் கண்கள் இல்லாமல், வாய் மற்றும் இறக்கை பகுதிகள் சேதம் அடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டது. கடற்கரையில் இறந்து ஒதுங்கி கிடந்த ஆமையை கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் இளைஞர்கள் பார்த்தனர்.

    இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆமை எவ்வாறு இறந்தது? யாரேனும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஆமையை அந்த பகுதியிலேயே உடற்கூறாய்வு செய்து புதைக்கவும் ஏற்பாடு செய்தனர். 

    ×