என் மலர்
திருவண்ணாமலை
- பட்டப்படிப்பு, கூட்டுறவு பயிற்சி முடித்தவர்கள் வரவேற்பு
- கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு நகர வங்கி, பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு அச்சகம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://drbtvmalai.net என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முற்பட்ட வகுப்பினருக்கு 32 வயதும் மற்றும் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. டிசம்பர் 1 -ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 24-ந்தேதி நடைபெறும்.
மேலும் கூடுதல் விபரங்களை திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையதளமான https://drbtvmalai.net என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.
- தீயணைப்புத்துறையினருக்கு தகவல்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகர் பகுதி யில் ஆரணி டவுன், ஆரணிப்பா ளையத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் பானிபூரி தயாரித்து மொத்த விற்ப னை செய்து வருகிறார்.
நேற்று மாலை பானிபூரி செய்து கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டு அங்கிருக்கும் பொருட்கள் எரிந்தது. இதனால் உடனடியாக தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பூபாலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதனால் அங்கு பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ஆரணி நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை அமர வைத்து நேர்த்திக்கடன்.
- மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதிஉலா.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனி வந்தனர். இரவு 10 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க சாமி வீதிஉலா நடந்தது.
அப்போது மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சின்ன அதிகார நந்தி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 10 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகர் தங்க சூரியபிரபை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னர் தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
மேலும் பக்தர்கள் சிலர் கரும்பில் தொட்டில் அமைத்து தங்கள் குழந்தையை அதில் அமர வைத்து நேர்த்தி கடனாக மாட வீதியில் வலம் வந்தனர். இதைபோல் 7-ம் விழாவான தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.
தொடர்ந்து இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி இந்திர விமானங்களில் கோவில் மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமி வீதி உலாவின் போது போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
- பெரும்பாலான மனுக்கள் விவசாய கடன் தள்ளுபடிக்காக கொடுக்கப்பட்டிருந்தது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ரூ.37 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசியதாவது:-
40 அரசு துறைகள் இருந்தும் கூட்டுறவு துறையில் மட்டும் தான் கூட்டுறவு வாரம் நடத்தப்படுகிறது. கூட்டுறவு துறை வளர்ச்சி பெற நாணயம் என்ற மையப்புள்ளி தேவை.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கூட்டுறவுத் துறை வளர்ச்சி பெறுகிறது. இந்த துறையை அண்ணா வானவில்லோடு ஒப்பிடுகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மேகம்போல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 கூட்டுறவு வங்கிகள் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து ஆயிரத்து 546 கோடி ரூபாய் வைப்பு தொகையாக பெறப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் விவசாய கடன் தள்ளுபடிக்காக கொடுக்கப்பட்டிருந்தது.
திராவிட மாடல் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன் 125 கோடி ரூபாய் நகை கடன்களை தள்ளுபடி செய்தார். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 34 ஆயிரத்து 127 பேர் பயன்பெற்றனர்.
திமுக ஆட்சியில் தான் ஜவ்வாது மலைக்கு சாலைகள் அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றுகள் வழங்கப்பட்டன. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், எல்லோரும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கா.ஜெயம், சார்பதிவாளர் சுரேஷ்குமார், துணைப்பதிவாளர் ராஜசேகரன், மேலாண்மை இயக்குநர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது
- கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 23 -வது வார்டில் தேனருவி நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சாலை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த சாலை வழியாக செல்லும் போது கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாயிகளை வஞ்சிப்பது நோக்கமல்ல
- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ப்பட்டு உள்ளதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது.
வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு ஆணி செய்கின்ற தொழிற்சாலை கூட இங்கு கிடையாது. திருவண்ணா மலை மாவட்டம் என்பது விவசாயிகள் நிறைந்த மாவட்டமாகும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தொழிற்சாலை வேண்டும் என்று பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன.
தொழிற்சாலைகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் சிப்காட்டிற்காக 3 கட்டமாக நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்றது.
முதல் கட்டமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது 13 தொழிற்சா லைகள் வந்தது. குறிப்பாக அயல் நாட்டு தொழிற்சா லைகளும் வந்தன.
இதில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி தொகுதியை சேர்ந்தவர்கள் 30 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். 2-ம் கட்டமாக 1820 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டா லினின் முயற்சியினால் 55 தொழிற்சாலைகள் அங்கு வருகின்றன.
இதனால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்புகள் பெறுவார்கள். இன்னும் அயல் நாட்டு தொழிற்சாலைகள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கு முயன்று வருகின்றார். 3-வது கட்டமாக 1200 ஏக்கர் நிலம் கையப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
வேலை வாய்ப்பு
ஒரு தொழிற்சாலை கட்டினால் சுமார் அங்கு 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட 9 கிராமங்களில் இது குறித்து அரசின் சார்பில் பல்வேறு கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது.
இதில் 1881 விவசாயிகளின் நிலங்கள் எடுக்கப்படுகிறது. அதில் 239 விவசாயிகள் தான் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். அரசாங்கம் விவசாயிகளை பொருளாதார ரீதியாக நன்றாக வைத்து கொள்ள தான் எண்ணுகின்றது.
அதே நேரத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கினால் தான் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அதன் அடிப்படையில் தான் இந்த ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றது. இதில் சிலர் பேர் மட்டும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பை தூண்டும் விதமாக அரசாங்கம் எந்த வேலையும் செய்ய கூடாது என்று நினைக்கிறார்கள்.
அரசு விவசாயிகள் நிலங்களை அபகரிக்கின்றது என்று திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கின்றனர். விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாயிகள் நிலத்தை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளவர்க ளின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
- கேமராவில் பதிவான நபருக்கு வலை வீச்சு
- அடகு வைத்த நகையை மீட்டு வந்தபோது துணிகரம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசன் (வயது 33), டிரைவர். இவர் நேற்று தனக்கு சொந்தமான 3 பவுன் நகையை தெள்ளாரில் உள்ள தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்தார்.
அதில் கிடைத்த ரூ.93 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள மற்றொரு வங்கியில் ஏற்கனவே அடகு வைத்த பவுன் நகையை மீட்டார்.
பின்னர், நகையை தனது பைக்கின் சீட் அடியில் வைத்துக் கொண்டு தெள்ளார் வந்தார். அங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்த நகைக்கான ரசீது பெற வங்கி முன்பாக பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
அங்கு ரசீது வாங்கிக் வெளியே வந்தார். அப்போது, பைக் சீட்டின் லாக் உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணியரசன் தெள்ளார் போலீசில் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ் பெக்டர் ரேகாமதி, எஸ்ஐ சக்திவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் தொப்பி அணிந்தபடி முகம் தெரியாமல் இருக்க மாஸ்க் அணிந்து கொண்டு பைக்கில் இருந்த நகையை திருடியது தெரிந்தது. நகை திருடி சென்ற நபர் பைக்கில் வந்தவாசி சாலை நோக்கி சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து வந்தவாசி, தேசூர், ஏம்பலம், ஜப்திகாரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு ஏற்பாடு
- அருணாசலேஸ்வரர் கோவில் மடப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து 4,500 கிலோ முதல்தர அக்மார்க் நெய், ரூ.34 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,15 கிலோ எடையுள்ள 300 டின்களில் வழங்கப்பட்டுள்ள முதல் தர அக்மார்க் முத்திரை பதித்த ஆவின் நெய், அருணாசலேஸ்வரர் கோவில் மடப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கொப் பரை, கடந்த 2021-ம் ஆண்டு பக்தர் ஒருவரால் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. அந்த கொப்பரை தொடர்ந்து இந்த ஆண்டும் பயன் படுத்தப்படுகிறது. அதோடு, பக்தர்கள் நெய் காணிக்கையை ரொக்கமாக செலுத்தவும், நெய்யாக நேரில் செலுத்தவும் சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருக்கிறது. அதன்படி, ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தலாம்.
அதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் யானை மண்டபம் எதிரில் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு செயல்படுகிறது.
இங்கு, நெய் குட காணிக் கைக்கான தொகையை ரொக்கமாக செலுத்தி, அதற்கான ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும், நேரடியாக நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, கோவில் கொடி மரம் அருகிலும், ராஜகோபுரம் அடுத்த திட்டிவாசல் பகுதியிலும் விரைவில் சிறப்பு பிரிவு தொடங்கப்படும்.
அதே போல், மகா தீபத்திருவிழாவின்போது, பே கோபுர வீதியில் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- வட்டார மகளிர் சேவை மைய கட்டிடத்தில் இயங்க உள்ளது
- நீதிபதி, வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்
வந்தவாசி:
வந்தவாசியில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த சார்பு நீதிமன்றம் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார மகளிர் சேவை மைய கட்டிடத்தில் இயங்க உள்ளது.
திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிபதி பி.மதுசூதனன் தலைமை தாங்கி சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட கூடுதல் நீதிபதி இருசன் பூங்குழலி, தலைமை குற்றவியல் நடுவர் வி.ஜெகன்னாதன், சார்பு நீதிபதி சரண்யா, உரிமையியல் நீதிபதி செந்தில்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், அன்பரசு, ஜெ.சி.பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- 7 நாட்கள் வரை வீடு, கடை விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவார்கள்
- பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது
செங்கம்:
ஒவ்வொரு ஆண்டும் தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மலை உச்சியில் கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். உலகில் உள்ள சிவபக்தர்கள் தீப திருநாளை முன்னிட்டு அகல்விளக்குகளை ஏற்றி வைத்து தீபத்திருநாளை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபத்திருநாளை முன் னிட்டு அனைத்து பகுதிகளிலும் 7 நாட்கள் வரை வீடு, கடை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் அகல்விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.
இந்த நிலையில் செங்கம் பகுதியில் தீபம் ஏற்றுவதற்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். செங்கம் பகுதியில் தயாரிக்கப்படும் தீப விளக்குகள் செங்கத்தை தாண்டி பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
- 75 பேரை அப்புறப்படுத்த அமைச்சர் எ.வ.வேலு அதிரடி உத்தரவு
- கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அனைத்து துறை அலுவலர்களும் சிறந்த முறையில் செய்து தர வேண்டும்.
காவல்துறையின் சிறந்த செயல்பாட்டால் கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஆன்மீக பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.
இது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஆண்டு தீப தரிசனம் காண வரும் கட்டளைதாரர்கள் மற்றும் உபய தாரர்களுக்கு முறையான அனுமதி வழங்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்புத் துறையினர் அன்னதானம் வழங்கும் இடங்களில் உணவு தட்டுகளை கிரிவலப்பாதையில் போடாமல் அதற்கென உள்ள குப்பை தொட்டியில் போட அன்னதானம் வழங்குபவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உறுதி படுத்த வேண்டும். தண்ணீர் பாட்டில்களை உரிய விலைக்கு விற்பனை செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்.
சமூக வலைதளங்களில் நல்ல தகவல்களை விட உண்மைக்கு புறம்பான தகவல்கள் தான் அதிகம் பதிவிடப்படுகிறது.
அண்ணாமலையில் தீ விபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஆயிரம் மீட்டருக்கு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவிற்கு முன்பு மாடவீதி முழுவதும் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைத்து தரப்படும்.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற வேண்டும். கிரிவலப்பாதை நடைபாதையில் உள்ள கடைகளை அகற்றி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும், பக்தர்களுக்கு இடையூறு இல்லாமலும் கடை வைக்க ஒரு இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கித்தர வேண்டும்.
பணம் பறிக்கும் கும்பல்
நகராட்சி துறையினர் சேவை மனப்பான்மையுடன் தீபத்திருவிழா பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிரிவலம் வரும் பக்தர்களை இடைமறித்து ஆசீ வழங்குவதை போல் ஒரு கும்பல் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக புகார் சொல்லப்படுகிறது. ஆன்மீக பக்தர்கள் மீது விபூதி பூசுவது போல் 14 கிலோ மீட்டர் தூரத்தில் 75 க்கும் மேற்பட்டவர்கள் காவி உடையில் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இதுபோன்ற நபர்களை கிரிவலப்பாதையில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 100 சதவிகிதம் சிறப்பான முறையில் தீபத் திருவிழா நடைபெறும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டர் பா.முருகேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன், மாவட்ட கவுன்சிலர் இல.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
- குண்டர் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
செய்யாறு தாலுகா மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மேல்மா கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாக கீற்றுக்கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட போராட்டங்கள் மூலமாக விவசாயிகள் நிலம் கையகப்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குடியுரிமை, வாக்குரிமை சம்பந்தமான ஆவணங்களை செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகாவிடம் அளிக்க செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முகப்பு வாயிலில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
தொடர்ந்து அன்று மாலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவித்தும், மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த சப்-கலெக்டர் அனாமிகா அங்கு வந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றார். இதற்கிடையே, அனுமதி இன்றி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 4-ம் தேதி அதிகாலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருள் (45) உள்பட 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரை பேரில் கலெக்டர் பா.முருகேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 பேரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஊத்தங்கரை தாலுகா அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருள் (45), தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவன் (45), மணிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சோழன் (32), மேல்மா கிராமத்தைச் சேர்ந்த திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி, குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் (38) ஆகிய 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது ஏன் என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள். அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.