search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு வார விழாவில் ரூ.37.67 கோடி நலத்திட்ட உதவி
    X

    கூட்டுறவு வார விழாவில் ரூ.37.67 கோடி நலத்திட்ட உதவி

    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
    • பெரும்பாலான மனுக்கள் விவசாய கடன் தள்ளுபடிக்காக கொடுக்கப்பட்டிருந்தது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ரூ.37 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசியதாவது:-

    40 அரசு துறைகள் இருந்தும் கூட்டுறவு துறையில் மட்டும் தான் கூட்டுறவு வாரம் நடத்தப்படுகிறது. கூட்டுறவு துறை வளர்ச்சி பெற நாணயம் என்ற மையப்புள்ளி தேவை.

    திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கூட்டுறவுத் துறை வளர்ச்சி பெறுகிறது. இந்த துறையை அண்ணா வானவில்லோடு ஒப்பிடுகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மேகம்போல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 கூட்டுறவு வங்கிகள் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து ஆயிரத்து 546 கோடி ரூபாய் வைப்பு தொகையாக பெறப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் விவசாய கடன் தள்ளுபடிக்காக கொடுக்கப்பட்டிருந்தது.

    திராவிட மாடல் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன் 125 கோடி ரூபாய் நகை கடன்களை தள்ளுபடி செய்தார். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 34 ஆயிரத்து 127 பேர் பயன்பெற்றனர்.

    திமுக ஆட்சியில் தான் ஜவ்வாது மலைக்கு சாலைகள் அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றுகள் வழங்கப்பட்டன. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், எல்லோரும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கா.ஜெயம், சார்பதிவாளர் சுரேஷ்குமார், துணைப்பதிவாளர் ராஜசேகரன், மேலாண்மை இயக்குநர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×