search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • விழா குழுவினருடன் காளை உரிமையாளர்கள் வாக்குவாதம்
    • 101 பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பரமனந்தல் அருகே உள்ள காமராஜ் நகரில் முதலாம் ஆண்டு மாடுவிடும் திருவிழா இன்று காலை நடைபெற இருந்தது.

    இதில் கலந்துகொண்டு பரிசு பெறும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் உள்பட மொத்தம் 101 பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அந்த கிராம மக்கள் செய்தனர்.

    கனமழை

    விழா நடக்கும் வீதியில் இருப்புறமும் மரக்கட்டையில் ஆன தடுப்புகள் கட்டப்பட்டு இருந்தது.

    சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தது. இதில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டது.

    வாக்குவாதம்

    நேற்று இரவு முதல் இன்று காலை 7 மணி வரை செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் விழா நடக்கும் வீதி சேரும் சகதியாக மாறியது. விழா நடத்த முடியாத சூழல் உருவாகியது.

    இதனால் விழா பாதியில் நின்றுபோனது. இதனால் விழா குழுவினருக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. விழாவை மழை விட்ட பிறகு தொடர்ந்து நடத்த வேண்டும் என காளைகளின் உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இருப்பினும் விழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் காளைகளை கொண்டு சென்ற உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கீழ்பென்னாத்தூர் அலுவலகத்தில் நடந்தது
    • அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குசாவடிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கீழ்பென்னாத்தூர் அலுவலகத்தில் தாசில்தார் சாப்ஜான் தலைமையில் நடந்தது.

    துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு) மாலதி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் நந்தகோபால் அனைவரையும் வரவேற்றார்.

    கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 285 வாக்குசாவடிகள் பராமரிப்பு நிலை குறித்தும், 1500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குசாவடிகள் 2- ஆக பிரித்தல் குறித்தும், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 19-பழுதடைந்த மற்றும் இடிக்கப்பட்டுள்ள வாக்குசாவடிகளை, அதே இடங்களில் இடமாறுதல் செய்து வாக்குசாவடி சீரமைத்தல் குறித்தும் அனைத்து கட்சி நிர்வாகிகளிடமும் விவாதிக்கபட்டு, ஆலோசனை நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இறுதியில் கிராம நிர்வாக அலுவலர் பிரவின்குமார் நன்றி கூறினார்.

    • புதன்கிழமை காலை தொடங்கி வியாழக்கிழமை காலை நிறைவடைகிறது
    • கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

    இங்கு தினமும் உள்ளூர், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

    மேலும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 30 -ந் தேதி(புதன்கிழமை) காலை 10.45 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி(வியாழக்கிழமை)காலை 8.19 மணிக்கு நிறைவடைகிறது.

    இதனால் புதன்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • விற்பனையாளர்கள் புகார்
    • வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் மாவட்ட கருவூல அலுவலருக்கு அளித்த மனுவில் கூறியதாவது;

    திருவண்ணாமலை மாவட்ட சார்கருவூல அலுவலங்களில் மிக குறைந்த அளவிலேயே நீதி சாரா முத்திரை த்தாள்கள், நீதிமன்ற முத்திரைத்தாள்கள், நீதிமன்ற வில்லைகள் இருப்பில் உள்ளது.

    நமது மாவட்ட சார்கருவூல அலுவலங்களில் சில வகையான முத்திரைத்தாள்கள் சுத்தமாக இருப்பில் இல்லை.

    இதனால் பொது மக்களும் வழக்கறிஞர்களும் பாதிக்கப்படுவதுடன் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

    எனவே திருவண்ணாமலை மாவட்ட சார்கருவூல அலுவலங்களில் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் எல்லா வகையான முத்திரைத்தாள்கள்,ஒட்டு வில்லைகள் உடனே கிடைக்க ஆவணம் செய்து எங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது
    • அதிகாரி தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சரகத்தில் 71 சங்கங்கள், திருவண்ணாமலை சரகத்தில் 88 சங்கங்கள் என 160 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மாவட்டத்தில் 37 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 4 நகர கூட்டுறவு வங்கிகளும், 8 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும், ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பாட்டில் உள்ளன.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஓராண்டிற்கு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன் மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மேலும் குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன், தானிய ஈட்டுக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், தாட்கோ. டாப்செட்கோ, டாம்கோ கடன்களும் வழங்கப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2023-24 ஆம் நிதியாண்டில் ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளது. 205 கோடி ரூபாய் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு மூலதன கடன், 876 கோடி நகை கடன், 202 கோடி ரூபாய்க்கு மகளிர் சுய உதவிக் குழு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடன், மத்திய கால முதலீட்டு கடன் 25 கோடி, இதர கடன்கள் 38.80 கோடி ஆகியவைகள் குறைந்த வட்டியில் வழங்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான கடன் உதவிகளை அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் அருகில் உள்ள கிளைகள், கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த வட்டியில் பெற்று பயன்பெற வருமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

    • கிரிவல பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு
    • சென்னைக்கு 5 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி முன்னிட்டு கிரிவல பக்தர்களின் வசதிக்காக வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பஸ்கள், பெங்களூரில் இருந்து 50 சிறப்பு பஸ்கள், வேலூர் மற்றும் ஆரணியில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    வார இறுதி நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 20 சிறப்பு பஸ்கள், போளூரில் இருந்து சென்னைக்கு 5 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    நாளை திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு செல்ல திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து அருணை பொறியியல் கல்லூரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் செந்தில் தெரிவித்துள்ளனர்.

    • பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபாடு
    • சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று ஆடி 6-வது வெள்ளி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் அம்மனுக்கு கமண்டல நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இரவில் கமண்டல நதியில் அம்மனுக்கு தீரத்தவாரி நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன் அம்மன் முத்து ரதத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. காலையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தூசிமோகன், வி.பன்னீர்செல்வம் உள்பட பலர் அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவஞானம், உதவி ஆணையர் ஜீவானந்தம், கோவில் அலுவலர்கள் மகாதேவன், சீனிவாசன், மோகன், ரவி, புலவர் சிவகுமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    மேலும் வேலூர், ஆரணி, போளூர் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப் பட்டிருந்தது.

    • வாழ்வாதாரம் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக கிராம பொதுமக்கள் வேதனை
    • சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் மனு

    ஆரணி:

    ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்து ஊராட்சிக்குட்பட்ட விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் புதியதாக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

    இந்த கல்குவாரி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் கிராம பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது சம்பந்தமாக முள்ளண்டிரம் கிராம பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவில்லை திடீரென கல்குவாரி அமைக்க பட்டுள்ளதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக கிராம பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கிராம மக்கள் ஆரணி டவுன் உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகிய அலுவலகத்தில் கல்குவாரி தடை செய்ய கோரி மனு அளித்தனர்.

    பின்னர் ஆரணி அதிமுக எம்.எல்.ஏ அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமானசேவூர் ராமசந்திரனிடம் புதியதாக அமைக்கப்பட்ட கல்குவாரியை ரத்து செய்ய கோரி மனுக்கள் அளித்தனர்.

    இது சம்பந்தமாக கலெக்டரிடம் பரிந்துரை செய்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுப்பதாக சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • குழந்தைக்கு உணவுகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 1522 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 87,842 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

    கொளக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    அப்போது அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தைக்கு அமைச்சர் உணவுகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் ரமணன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், மக்கள் நண்பர்கள் குழு தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொன்றும், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது
    • பணிகள் தீவிரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில், மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் கிரிவலப் பாதையில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் 8 நீர்நிலையங்கள் உள்ளன.

    இவை ஒவ்வொன்றும், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது. சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் பெறும் 2 நீர்நிலையங்களை தவிர, மற்றவற்றில் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் வசதிக்கு அருகில் போர்வெல்கள் உள்ளன.

    இருப்பினும், அதன் அதிக பராமரிப்பு செலவுகள் காரணமாக, நீர் நிலையங்கள் வார இறுதி நாட்கள், சித்ரா பவுர்ணமி நாட்கள் (மாதம் 2 முறை) மற்றும் ஆண்டுதோறும் மகா தீபத் திருவிழாவின் போது மட்டுமே திறக்கப்படுகிறது.

    வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    14 கி.மீ தொலைவு உள்ள கிரிவலபாதையில் 7 கி.மீ தொலைவிற்குள் அனைத்து நீர் நிலையங்களும் அமைந்துள்ளதால், நீர் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த நாட்களில் நிலையங்களில் உள்ள 1,000 லிட்டர் டேங்க் முழுவதும் நிரம்பிய 40 நிமிடங்களில் காலியாகிவிடுகிறது.

    இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த மாதம் கோவில் சாதுக்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களுடன் உரையாடினார். அப்போது கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அதிகப்படியான அடிப்படை வசதிகள், குறிப்பாக கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

    இதனையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒவ்வொரு ஒரு கி.மீ.க்கும் ஒரு சுத்திகரிப்பு நீர்நிலையம் அமைக்கப்படும்.

    மேலும் பாதையில் 8 நீர்நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துவதை குறைக்க இயலும். தற்போது, தினமும் சராசரியாக, 350 - 400 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், பாதையில் கிடக்கிறது. சேகரிக்கப்படும் கழிவுகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களாக உள்ளன.

    தற்போது புதிய நீர்நிலையங்கள் அமைப்பதற்கான இடங்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

    பக்தர்களுக்கான இதர வசதிகளுடன், கிரிவல பாதையில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அகலப்படுத்தப்பட்ட நடைபாதையில் கான்கிரீட் தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.  

    • உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த பகவந்தபுரத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 35).கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது விஜயன் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை குடும்பத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அலுமினிய மட்டக்கோலை தூக்கி சென்றார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கீழ் புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). கட்டிட மேஸ்திரி.

    இவர் நேற்று அதே பகுதியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது வீட்டு மாடிக்கு கொண்டு செல்ல அலுமினிய மட்டக்கோலை தூக்கி சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள மின் கம்பியில் மட்ட கோல் பட்டுள்ளது. அதிலிருந்து மின்சாரம் தாக்கி மகேந்திரன் தூக்கி வீசப்பட்டார்.

    அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சக ஊழியர்கள் மயங்கி கிடந்த மகேந்திரனை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து செய்யாறு போலீசில் மகேந்திரன் மகன் அருண் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×