என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உண்மை எது
- ஜூலை 22 அன்று உத்தர பிரதேசத்தில் உள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
- குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும், இறந்துபோன சிறுவனும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்.
சமீபத்தில் ஒரு இந்து சிறுவன், முஸ்லிம் சிறுவன் ஒருவனை குளத்தில் தள்ளி கொன்றதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது.
"இந்துக்களுக்கும் இந்து தீவிரவாதிகளுக்கும், முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு கற்பனை செய்து பார்க்க முடியாதது. லக்னோ நகரில் கிஷோர் எனும் இந்து சிறுவன் ஒருவன், 7-வயதான அப்துல் சமத் எனும் முஸ்லிம் சிறுவனை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, குழியில் தள்ளி கொலை செய்துள்ளான். இக்கொலை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் மேல் கொலை குற்றம் சாட்டப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்." எனும் செய்தியுடன் ஒரு பயனரால் இந்த வீடியோ பகிரப்பட்டது.
ஆனால் கடந்த ஜூலை 24ஆம் தேதி வெளிவந்த அதிகாரப்பூர்வ செய்திகளின்படி, இறந்த குழந்தையின் தந்தை அகமது சஃபி என்பவர், முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது அண்டை வீட்டுக்காரர்களான ஹ்யூமா, அதிக், சைக்கா, அரிஃப், கலித் மற்றும் அந்த குழந்தையை தள்ளி விட்ட சிறுவன் ஆகியோர் மீது கொலை குற்றம் சாட்டி காவல்துறையிடம் புகாரளித்தார்.
"எங்கள் இரு குடும்பங்களுக்குமிடையே இருந்த பகையின் காரணமாக, அவர்கள் அந்த சிறுவனை அனுப்பி என் மகனை கொலை செய்திருக்கின்றனர்" என அப்புகாரில் அகமது தெரிவித்திருக்கிறார்.
ஜூலை 22 அன்று உத்தர பிரதேசத்தில் உள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. காலா பாஹத் எனும் பகுதியில் ஒரு நீர்நிலையில் இறந்த சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
"இந்த குற்றத்தில் எந்த மத சம்பந்தமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்" என லக்னோ மேற்கு பிராந்திய காவல்துறை துணை ஆணையர் சிரஞ்சீவ் நாத் சின்ஹா தெரிவித்தார்.
ஆக, முஸ்லிம் இனத்தை சேர்ந்த இரு குடும்பங்களின் விரோதத்தால் நிகழ்ந்த ஒரு சோக சம்பவத்திற்கு, மத சாயம் பூசும் முயற்சியுடன் இந்த பொய்யான தகவலுடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
- ஓசாயா என்பது தாய்லாந்து நாட்டை சேர்ந்த தேநீர் நிறுவனம்.
- போலி வீடியோவில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் ஹோண்டா ஷோ ரூம் இரண்டும் இந்த அசல் வீடியோவில் தெரிகிறது.
தாய்லாந்து சம்பவத்தை இந்தியாவில் நடந்ததாக சித்தரிக்கும் போலி வீடியோ
"இந்தியாவில் புதிதாக கட்டப்பட்ட மெட்ரோ பாலம் ஒன்று இடிந்ததாக" சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. குறைவான நேரமே ஓடும் இந்த வீடியோவில் மேல்நிலை பாலம் ஒன்று உடைவது தெரிந்தது.
ஆனால், இது பொய்யான செய்தி என தெரிய வந்துள்ளது. நாடு முழுவதிலிருந்து எங்கும் பாலம் இடிந்ததாகவோ, உடைந்ததாகவோ செய்தி ஏதும் வரவில்லை.
அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது "பிடிடி ஸ்டேஷன்" (Ptt station) எனும் எழுத்துக்கள் மற்றும் ஒரு பெட்ரோல் பங்க் வாசலில் "ஒசாயா" (Ochaya) எனும் பெயர் கொண்ட பலகையும் தெரிந்தது.
ஓசாயா என்பது தாய்லாந்து நாட்டை சேர்ந்த தேநீர் நிறுவனம். எனவே இது தாய்லாந்து நாட்டு வீடியோ என ஊர்ஜிதமானது.
விசாரணையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் லுவாங் ஃபேங்க் (Luang Phaeng) சாலையில் 2020லிருந்து கட்டப்பட்டு வந்துள்ள லாட் கிராபாங் (Lat Krabang) மேம்பாலம் இடிவதும், அதில் 2 பேர் பலியானதும், 11 பேர் காயமடைந்ததும் தெரிய வந்துள்ளது.
ஒரு மிகப்பெரிய கான்கிரீட்டை தூக்கிச்சென்ற இயந்திரம் கோளாறானதில் இச்சம்பவம் நடந்துள்ளது. போலி வீடியோவில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் ஹோண்டா ஷோ ரூம் இரண்டும் இந்த அசல் வீடியோவில் தெரிகிறது.
இதன்மூலம், இந்தியாவின் மெட்ரோ குறித்து வெளியான பொய் வீடியோ, தாய்லாந்தின் கட்டுமானம் நிறைவடையாத ஒரு மேம்பால சாலையில் நடைபெற்ற விபத்து என தெரிய வந்துள்ளது.
- பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
- பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி.
பாட்னா:
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலேசானை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடந்தது.
அதை தொடர்ந்து, 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் இதில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து பேசிய பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாகவும், அதனாலேயே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்வில்லை எனவும் கூறினார்.
ஆனால் நிதிஷ் குமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, முடிவில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உடனடியாக பாட்னாவுக்கு வர வேண்டியிருந்ததால், கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி. இப்போது அது வடிவம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக அழிந்துவிடும்" என கூறினார்.
- அந்த வீடியோவில் ராகுல் காந்திக்கு பின்புறம் "அல் ஜவஹர்" எனும் உணவகத்தின் பெயரும் தெரிந்தது.
- காங்கிரஸ் தலைவரும் உணவு பத்திரிக்கையாளரும் நீல நிற சட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்திருப்பதை காணலாம்.
இந்து நாட்காட்டியில் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை வரக்கூடிய மாதம், இந்துக்களுக்கு புனிதமான ஷ்ரவண அல்லது சாவன் மாதம். பெரும்பாலான இந்துக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆனால், இந்த புனித மாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசைவ உணவு சாப்பிட்டதாக கூறி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு உணவகத்தில் ராகுல் காந்தி அசைவ உணவை உண்பதாக அந்த வீடியோவை பதிவிட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
"ராகுல் காந்தி சாவன் மாதத்தில் அசைவம் சாப்பிட உணவகம் வந்தார். அதனால்தான் மக்கள் அவரை சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் இந்து பக்தர் என்று சொல்கிறார்கள்" என்ற தகவலுடன் அந்த வீடியோ வலம் வருகிறது.
அந்த வீடியோவில் ராகுல் காந்திக்கு பின்புறம் "அல் ஜவஹர்" எனும் உணவகத்தின் பெயரும் தெரிந்தது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த தேடலில், பழைய வீடியோவை பொய்யான தகவலுடன் ஷேர் செய்தது தெரியவந்தது.
குறிப்பாக இந்த வீடியோவை பூம் (BOOM) ஆய்வு செய்ததில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 19, 2023 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி குறிப்பில், டெல்லியின் புகழ் பெற்ற சாந்தினி சௌக் பகுதிக்கு ராகுல் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள "அல் ஜவஹர்" உணவகத்திற்கும் சென்றிருந்தார். "சாட்" மற்றும் "கோல் கப்பே" போன்றவற்றை விரும்பி உண்டார். உணவு மற்றும் உணவகங்களை குறித்த சிறப்பு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர் குணால் விஜயகருடன் சேர்ந்து உணவு உண்டார். அப்போது ராகுல் காந்தி உணவருந்திய போது ஒரு வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. ரம்ஜானைக் கொண்டாடுவதற்காக தர்பூசணி மற்றும் ரோஸ் சிரப்பின் சுவைகள் கொண்ட பிரபலமான கோடைகால பானமான "மொஹபத் கா ஷர்பத்" போன்றவற்றையும் அவர் ருசித்து பார்த்திருக்கிறார். ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவை வைரலான வீடியோவுடன் ஒப்பிடும் போது, காங்கிரஸ் தலைவரும் உணவு பத்திரிக்கையாளரும் நீல நிற சட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்திருப்பதை காணலாம். ஆனால், இது நடந்தது ரம்ஜான் மாதமான ஏப்ரல் மாதமே தவிர, ஜூலை மாதம் அல்ல.
இதிலிருந்து வைரல் வீடியோ வெளியிட்டிருக்கும் செய்தி உண்மையல்ல என தெரிய வருகிறது.
- சிலர் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.
- வெளியான தகவல் போலியானது என்பதை பிஐபியின் உண்மை சரிபார்ப்பு பிரிவும் டுவிட்டரில் தெரிவித்தது.
பல சமயங்களில் சாலையில் திடீரென நின்றுபோன வாகனங்களை பலர் பின்னால் ஒன்றுகூடி தள்ள, என்ஜின் ஸ்டார்ட் ஆவதை பார்த்திருக்கிறோம். அதேபோன்று ரெயிலை தள்ளுவதுபோன்ற ஒரு வீடியோ கடந்த இரு நாட்களுக்கு முன்பாக சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் ராணுவ வீரர்கள், போலீஸ் குழுக்கள், ரெயில்வே ஊழியர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சேர்ந்து ஒரு ரெயிலை தள்ளுவது தெரிந்தது.
பல ஊடகங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த வீடியோவை பகிர்ந்ததால் டுவிட்டரில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றது. நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றி சென்ற இந்திய ரெயில்வேயின் ரெயில் எதிர்பாராதவிதமாக நடுவழியில் நின்றுவிட்டதாகவும், அதன் பயணத்தைத் தொடர அனைவரும் தள்ளவேண்டியிருந்ததாகவும் வீடியோவை பகிர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டனர். சிலர் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.
இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் தேடியபோது அந்த வீடியோவுக்கும் பரப்பப்படும் தகவலுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.
பயணிகளுடன் சென்ற அந்த ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ரெயிலின் மற்ற பெட்டிகளில் தீ பரவாமல் தடுப்பதற்காக அனைவரும் செய்த முயற்சியைத்தான் திரித்து பொய் செய்தியாக பரப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஜூலை 7, 2023 அன்று, ஹவுரா-செகந்திராபாத் வழித்தடத்தில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தீப்பிடித்தன. மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்க, 3 பெட்டிகள் கொண்ட பின்பகுதியை உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர் போலீசாரால் பிரிக்கப்பட்டு அனைவரும் சேர்ந்து தள்ளி நகர்த்தி உள்ளனர். இதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து மற்ற பெட்டிகளை பிரிக்க, மக்கள் ரெயிலை தள்ளுவதைத்தான் வீடியோ காட்டுகிறது. வீடியோவில் உள்ளவர்கள் மற்றொரு இயந்திரம் வரும் வரை காத்திருந்து நேரத்தை வீணாக்காமல், தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
நின்றுபோன ரெயிலை ராணுவ வீரர்கள் இறங்கி தள்ளி ஸ்டார்ட் செய்ததாக வெளியான தகவல் போலியானது என்பதை பிஐபி-யின் உண்மை சரிபார்ப்பு பிரிவும் டுவிட்டரில் தெரிவித்தது.
இது குறித்து பேசிய ரெயில்வே அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, "ஜூலை 7 ஆம் தேதி ரெயில் எண் 12703 தீ விபத்தின் போது ரெயிலின் பின்பக்க பெட்டிகளை தீயிலிருந்து காக்க, ரெயில்வே பணியாளர்களும் உள்ளூர் போலீசாரும் கைகோர்த்து பிரித்தனர். உடனடியாக செயலில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றி"என கூறினார்.
இதே கருத்தை வெளியிட்டு தெற்கு மத்திய ரெயில்வே நிர்வாகம் உண்மையை தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, நின்று விட்டதால் ரெயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் செய்தி உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது.
- பருவழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை
- இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் நிலச்சரிவு எற்பட்டு சேதம்
இடைவிடாத கனமழையால் இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை, மாநிலங்கள் முழுவதும் குறைந்தது 19 பேர் இயற்கையின் சீற்றத்திற்கு பலியாகியுள்ளனர்.
எல்லா நேரங்களிலும், வட இந்திய மாநிலங்களில் இயற்கையின் சீற்றம் குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதில் 2 நிலச்சரிவு குறித்த வீடியோக்கள் தவறானவை என தெரிய வந்துள்ளது.
"இமாச்சல பிரதேசம் மணாலியில் பேரழிவு போன்ற நிலச்சரிவு" என்ற வார்த்தைகளுடன் பகிரப்பட்ட முதல் வீடியோ, மலைப்பாதையில் ராட்சத பாறைகள் கீழே விழுவதைக் காட்டியது.
ஆனால் இது ஜூலை 28, 2019 அன்று பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோ என்பது ஆய்வில் தெளிவாகியிருக்கிறது.
அதேபோல், இரண்டாவது வீடியோவும் பாறைகள் மலையிலிருந்து கீழே விழுவதைக் காட்டியது. பாறைகள் இடிந்து விழுந்ததில் மக்கள் உயிருக்கு பயந்து ஓடுவதையும் காண முடிந்தது. இந்த சம்பவம் உத்தரகாண்டில் நடைபெற்றது போல் பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால் இது ஏப்ரல் 2, 2023 அன்று வெளியான ஒரு பழைய நிகழ்வு குறித்த வீடியோ என தெளிவாகியுள்ளது.
எனவே, இந்த இரு வீடியோக்களிலும் இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவை குறித்த எந்த தகவலும் இல்லை.
ஏற்கனவே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முன்னதாக ஏற்பட்ட நிலச்சரிவு குறித்த வீடியோக்களாகும் எனத் தெரியவந்துள்ளது.
- விமானத்தில் சென்ற டோனி, கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
- இதனால் டுவிட்டரில் கேண்டி க்ரஷ் கேம் இன்று காலையில் இருந்து டிரெண்ட் ஆனது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனியின் வீடியோ ஒன்று நேற்று வைரலானது. அதில் அவர் விமானத்தில் பயணம் செய்த போது அந்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த ஒருவர் டோனிக்கு பரிசு கொடுப்பது போன்று இருந்தது. இந்த வீடியோ நேற்றில் இருந்து வைரலானது.
அந்த வீடியோவில் டோனி, கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் டுவிட்டரில் கேண்டி க்ரஷ் கேம் இன்று காலையில் இருந்து டிரெண்ட் ஆனது.
இந்நிலையில் 3 மணி நேரத்தில் 3 மில்லியன் வரை இந்த கேம் டவுன்லோட் ஆனதாக தகவல் வெளியானது. கேண்டி க்ரஷ் கேம் என்ற பெயரிலான டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியான அந்த தகவலில், டோனிக்கு நன்றி தெரிவிக்கபட்டிருந்தது. ஆனால் அந்த டுவிட்டர் கணக்கு கேண்டி கிரஷ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்குதானா? என்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே, கேண்டி க்ரஷ் அந்த அளவுக்கு டவுன்லோடு ஆனதா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
எனினும், டோனியின் பெயருடன் இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் சில பகுதிகள் சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பு நிறுவனம் அனுமதி பெற்று, ஜிஎஸ்டி உட்பட ரூ.1.24 கோடி கட்டணமாக விமான நிலைய நிர்வாகத்திடம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது.
அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றது. விமானம் புறப்படும் பகுதியில் மட்டுமே படமெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், படக்குழுவினர் விமான நிலையத்தின் மற்ற சில பகுதியில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் முறையான அனுமதி இல்லை எனக் கூறி படப்பிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டதாகவும் இதனால் நேற்று படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் இந்தியன் 2 படக்குழுவிடம் விமான நிலையத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட தகவல் குறித்த விளக்கம் கேட்டது. இதற்கு பதிலளித்த படக்குழு முறையான அனுமதியின்றி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்று தெரிவித்தது. மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்தது.
- சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அதிகாரி கூறினார்.
- பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக, பஹனாகா ரெயில் நிலைய ஜூனியர் சிக்னல் என்ஜினீயர் அமிர் கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த ஜூனியர் என்ஜினீயர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் பரவியது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.
பஹனாகா ரெயில் நிலைய ஊழியர் தலைமறைவானதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என தென்கிழக்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அதித்ய குமார் சவுத்ரி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், தடம்புரண்டு கிடந்த ரெயில் பெட்டிகள் மீது அதிவேகத்தில் மோதியது. இவ்விபத்தில் 292 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
- பெற்றோருக்கு பயந்து பொய் கூறியதாக தெரியவந்துள்ளது
- சிசிடிவி கேமராவால் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார் டெலிவரி பாய்
பெங்களுருவில் உள்ள எலாக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டில் உணவு டெலிவரி பாய், ஆர்டர் செய்தவருக்கு உணவுப் பார்சலை வழங்க சென்றுள்ளார். அப்போது, அந்த டெலிவரி பாய் தன்னை மொட்டைமாடிக்கு அழைத்துக் சென்றார். தான் அவரது கையை கடித்துவிட்டு தப்பித்தேன் என பெற்றோரிடம் கூறியுள்ளார்.
உடனே, அவரது பெற்றோர் அப்பார்ட்மென்ட் காவலாளியிடம் கேட்டை மூடச்சொல்லி, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் டெலிவரி பாயை நைய புடைத்துள்ளனர். காவலாளிகளும் தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர் போலீஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரில் நாங்கள் மொட்டைமாடி சென்றோம். அப்போது எங்களது குழந்தை தனியாக நின்றிருந்தாள். அவளிடம் விசாரித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. போலீசார் சிசிடிவி-யை பரிசோதனை செய்து பார்த்தபோது, அந்த சிறுமி தனியாகத்தான் மொட்டைமாடி சென்றுள்ளார். டெலிவரி பாய் அந்த சிறுமியை அழைத்துச்செல்லவில்லை. இதனால் அந்த சிறுமி வேண்டுமென்றே பொய் சொல்லியுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.
ஏன் பொய் சொன்னாய்? என அந்த சிறுமியிடம் கேட்டபோது, படிக்கும் நேரத்தில் விளையாடியது தெரிந்தால் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்பதால், அவர்களுக்கு பயந்து பொய் சொன்னதாக தெரிவித்தாள்.
ஒரு சிறுமியின் பொய்யால் டெலிவரி பாய் தர்ம அடி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனது மகள் சொல்வது உண்மை என நம்பி தவறுதலாக புகார் அளித்துவிட்டோம் என சிறுமியின் பெற்றோர் மன்னிப்பு கேட்டனர்.
இதுகுறித்து அந்த டெலிவரி பாய் கூறுகையில் ''சிறுமியின் பெற்றோர்கள், அருகில் உள்ளவர்கள் காவலாளிகளுடன் சேர்ந்து என்னை தாக்கினார்கள். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிசிடிவி என்னை பாதுகாத்துள்ளது. சிசிடிவி கேமரா இல்லையென்றால் என்ன செய்வது? என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கவலை'' என்றார்.
- மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது.
- இன்று காலை 11.30 நிலவரப்படி 101.12 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 15 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வருவதோடு, அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருவதோடு, பழச்சாறுகள், நுங்கு, கரும்பு சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்தி வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் குறைத்து வருகின்றனர். இருந்த போதிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காலை நேரங்களில் கடும் வெயில், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வந்ததால் சீதோஷ்ண மாற்றமும் ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்ச வெயிலாக 104.36 டிகிரி அளவில் வெயில் அளவு பதிவாகி கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இன்று காலை 11.30 நிலவரப்படி 101.12 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது.
இதுகுறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருவதை காண முடிகிறது. மேலும் சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருவதால் அனல் காற்று வீசி வருவதோடு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து கடுமையான அனல் காற்று வீசி வருவதால் வறண்ட வானிலை ஏற்பட்டு கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் சரியான முறையில் நிலை கொண்டு மழை அதிகளவில் பெய்து வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புண்டு. இது மட்டுமின்றி கிழக்கு திசையில் இருந்து வரக்கூடிய ஈரப்பதகாற்று சரியான முறையில் வரவில்லை. ஆகையால் தமிழக அரசின் அறிவுறுத்திலின் பேரில் பொதுமக்கள் காரணமின்றி வெளியில் சுற்றுவதை குறைத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.
- இந்திய அரசு, மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- மாணவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் கனடாவில் தங்கியிருக்க அனுமதி
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவில் படித்து வருகின்றனர். பட்டதாரியான பிறகு அங்கேயே குடியேற விண்ணப்பித்தும் வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கனடாவிற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதற்கிடையே மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்போது பெரும்பாலான மாணவர்களுடைய ஆவணங்கள் போலியானவை எனத் தெரியவந்தது. போலியான தகவல் அளிக்கப்பட்டு கனடா வந்துள்ள மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என கனடா அரசு அறிவித்தது.
இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசு மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி உண்மையல்ல என கனடா நாட்டின் குடிவரவுத்துறை மந்திரி சீன் பிராசர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-
வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய படிப்பிற்கான அனுமதி விண்ணப்பங்களை சமர்பிக்க கேட்டிருந்த நிலையில், அது போலியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது.
ஆனால் நான் ஒன்றை உறுதிப்படுத்த விரும்புகிறேன். வெளிநாட்டு மாணவர்கள் போலி ஆவணம் தாக்கல் செய்ததில் தொடர்பு இல்லை என்றால் அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.
தனிப்பட்ட ஒரு மாணவரை எடுத்துக் கொண்டால், அவர் படிக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு கனடா வந்து, அவருடைய விண்ணப்பம் போலியானது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றால், தற்காலிகமாக அவர் தங்குவதற்கு அனுமதி வழங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இது சிறந்த நோக்கத்தோடு வந்துள்ள சர்வதேச மாணவர்கள், பட்டதாரிகள் கனடாவில் தங்கியிருக்க உறுதி செய்யும். அவர்கள் கனடாவிற்கு ஐந்து வருடம் வருவதற்கு தடை என்பதில் வரமாட்டார்கள்'' எனத்தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்