என் மலர்
கிரிக்கெட் (Cricket)
27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி
- மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின.
- முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லக்னோ:
இரானி கோப்பை தொடருக்கான இறுதி போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.
ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில்191 ரன்னில் ஆட்டமிழந்தார். துருவ் ஜுரல் 93 ரன்னும், சாய் சுதர்சன், இஷான் கிஷன் தலா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான் தலா 3 விக்கெட்டும், மோகித் அவஸ்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 5 நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக தனுஷ் கோட்யான் 114 ரன்களும் பிரித்வி ஷா 76 ரன்களும் அடித்தனர்.
ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த முன்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.