என் மலர்
Recap 2024
- செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றம்.
- உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தமிழக அமைச்சரவையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டில் தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து 15 மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிறகு, செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்தார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்
செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியான மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறையும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டன.

வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், இதே துறையைக் கையாண்டு வந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்டன.
நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது.
அடுத்து, அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், இளித்துறை ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி.செழியனும் சுற்றுலா துறை அமைச்சராக பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் புதிதாக இணைந்தனர்.
செஞ்சி மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மை நலத்துறை, ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, 5-வது முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வராானார் உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த 2022 டிசம்பர் 14-ம் தேதியில், தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி அறிவிக்கப்பட்டார்.

அதன்பிறகு நடப்பு ஆண்டில் சில மாதங்களாக உதயநிதியைத் துணை முதல்வராக்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் தொடங்கி பலரும் கோரிக்கை வைத்தனர். முதல்வரும் அந்தக் கோரிக்கை வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை என பதிலளித்திருந்தார். இந்தநிலையில், தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக துணை முதல்வராகப் பதவியேற்கும் மூன்றாவது நபராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
- இப்பட்டியலில் முதல் 3 இடங்களை பூரி, வாரணாசி, ஹரித்துவார் ஆகிய புனித நகரங்கள் பிடித்துள்ளன.
- பழனி மட்டும் தான் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழக நகரம் ஆகும்.
இந்தியாவில் தற்போது ஆன்மீக சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. அவ்வாறு இந்தியா முழுவதும் ஆன்மீக தளங்களை தேடி செல்வோர் தங்குவதற்கு அந்தந்த ஊர்களில் உள்ள ஓட்டல்களில் முன்னரே புக் செய்வது வழக்கம். அவ்வகையில் 2024 ஆம் ஆண்டில் ஒயோ ஆப்பில் அதிகமானோர் முன்பதிவு செய்த ஆன்மீக இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
OYO வெளியிட்டுள்ள "Travelopedia 2024' அறிக்கையின்படி இப்பட்டியலில் 6 நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இப்பட்டியலில் முதல் 3 இடங்களை பூரி, வாரணாசி, ஹரித்துவார் ஆகிய புனித நகரங்கள் பிடித்துள்ளன. அதற்கடுத்த வரிசையில் தியோகர், பழனி, கோவர்தன் நகரங்கள் இடம்பிடித்துள்ளன. பழனி மட்டும் தான் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழக நகரம் ஆகும்.
பூரி:
ஒடிஷா மாநிலத்தில் பூரி நகரத்தில் தான் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் தொலைந்துபோன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக இந்தாண்டு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி.கே. பாண்டியனை குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி இவ்வாறு கூறியதாக சொல்லப்படுகிறது.
வாரணாசி:
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வாரணாசி நகரத்திற்கு எண்ணற்ற பக்தர்கள் வருடம்தோறும் வந்து செல்கின்றனர். முன்பு காசி என்று அழைக்கப்பட்ட இந்த இடத்திற்கு வருவது புண்ணியம் என்று பெரும்பாலான இந்துக்கள் நம்புகின்றனர்.
புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் கங்கை நதியில் குளித்து தங்களது பாவங்களை கழுவவும் எண்ணற்ற பக்தர்கள் வாரணாசிக்கு வருகை புரிகின்றனர்.
ஹரித்துவார்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவிற்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் இந்நகரத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கு வருகை தருகின்றனர்.
தியோகர்:
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் நகரத்தில் சிவனின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளனமான பக்தர்கள் தியோகர் நகரத்திற்கு வருகை புரிகிறார்கள்.
பழனி:
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாநிலத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது.
பழனியாண்டவரான முருகனை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.
கோவர்தன்:
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கோவர்தன் மலையை பகவான் கிருஷ்ணர் தூக்கியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கோவர்தன் நகரத்திற்கு நிறைய பக்தர்கள் வருடம்தோறும் பயணம் செய்கின்றனர்.
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
- 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள்.
உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு கணிசமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டுகளில் ஒப்பிடும் போது, வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் பல்வேறு புது மாடல்களை எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் அறிமுகம் செய்து வருகின்றன.
அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் எலெக்ட்ரிக், டாடா பன்ச் எலெக்ட்ரிக், மஹிந்திரா நிறுவனத்தின் BE 6E, XEV 9e, எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் வின்ட்சர், கியா நிறுவனத்தின் EV9 உள்பட பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யபபட்டுள்ளன. இவைதவிர ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் மேம்பட்ட வெர்ஷன்களும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை 2024 ஆம் ஆண்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி எலெக்ட்ரிக் வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 26.5 சதவீதம் அதிகரித்து 1.94 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதனை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1.5 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இது, நாட்டின் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை 7.46 சதவீதமாக உயர்த்தியது. இது 2023 ஆம் ஆண்டு 6.39 சதவீதமாக இருந்தது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வரும் போதிலும், பெட்ரோல் வாகனங்கள் ஆதிக்கம் தொடர்கிறது. இந்த ஆண்டு விற்பனையான ஒட்டுமொத்த (26.04 மில்லியன்) வாகனஹ்களில் 73.69 சதவீதம் (19.18 மில்லியன்) யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும்.
இதில் 10.5 சதவீதம் (2.62 மில்லியன்) யூனிட்கள் டீசல் மாடல்கள், 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள் ஆகும். 2024 ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் வாகனத்திற்கு இணையாக 12.43 பெட்ரோல்-சி.என்.ஜி, ஹைப்ரிட், டீசல் மாடல்கள் அடங்கும்.

மாதாந்திர விற்பனை:
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முறையே 1,45,064 மற்றும் 1,41,740 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மார்ச் மாதத்தில் 2,13,068 யூனிட்களாக அதிகரித்தது. பிறகு ஏப்ரல், மே மாதங்களில் குறைந்து 1,15,898 மற்றும் 1,40,659 யூனிட்களாக இருந்தது. ஜூன் மாதத்தில் 1,40,137 யூனிட்கள் விற்பனையானது.
2024 ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையானது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2,19,482 யூனிட்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிக வாகனங்கள் விற்பனையா மாதமாக அமைந்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த எண்ணிக்கை 1,92,575 மற்றும் 1,32,302 யூனிட்களாக சரிந்தது.
எனினும், இந்த ஆண்டு முழுக்க ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறைந்தபட்சம் ஒரு லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாகவே இருந்துள்ளது.

மத்திய அரசு திட்டம்:
இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்து ஃபேம் 2 திட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1,15,898 யூனிட்களாக சரிந்தது.
இதன் பிறகு, பண்டிகை காலம் மற்றும் பிரதமரின் இ-டிரைவ் திட்டம் காரணமாக மீண்டும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டில் எஞ்சியுள்ள காலக்கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உற்பத்தியாளர்கள் சமீப காலங்களில் அறிமுகம் செய்துள்ள புதிய மாடல்கள் மற்றும் புத்தாண்டு பிறப்பை ஒட்டி வாகன விற்பனை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
- பல படங்கள் தோல்வி அடைந்து பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- படங்களின் தயாரிப்பு செலவு ரூ.1000 கோடி.
மலையாள சினிமாவில் இந்த வருடம் பல படங்கள் வெற்றியை பெற்றுள்ளன. அந்த படங்கள் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன.
மலையாள வெற்றிப் படங்கள் பட்டியலில் பிரேமலு, பிரம்மயுகம், மலைக்கோட்டை வாலிபன், மஞ்சுமல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், உள்ளொழுக்கு, லெவல் கிராஸிங், கிஷ்கிந்தா காண்டம், ஆவேசம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.
ஆனாலும் பல படங்கள் தோல்வி அடைந்து பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2024-ம் ஆண்டில் மலையாளத்தில் 199 படங்கள் திரைக்கு வந்து 26 படங்கள் மட்டுமே லாபம் பார்த்துள்ளன. இந்த படங்களின் தயாரிப்பு செலவு ரூ.1000 கோடி.

ஆனால் இந்த படங்களின் மூலம் ரூ.350 கோடி மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. ரூ.650 கோடி முதல் ரூ.700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் ஏற்கவில்லை.
இது தொடர்ந்தால் மலையாள சினிமா துறை பெரிய இழைப்பை சந்திக்கும்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.
- ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சின்னத்திரையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி மற்றும் நகைச்சுவையால் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். இதனை தொடர்ந்து 'பசங்க' படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் 'மெரினா' என்ற படத்தில் கதாநாயகனாக 2012-ம் ஆண்டு தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் சிவகார்த்திகேயன். இப்படம் ரசிகர்களிடையே ஓரளவே கைகொடுத்தது.

அதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த '3' படத்தில் துணை நடிகராவும், மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர்.லோக்கல், ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர், டான், ப்ரின்ஸ், மாவீரன், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், மாப்ள சிங்கம், கனா, லிப்ட், மாவீரன் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
இதனிடையே, 2018-ம் ஆண்டு வெளிவந்த 'கனா' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். மேலும் இப்படத்தில் கௌரவ கதாபாத்திரலும் நடித்து இருந்தார்.
இப்படி, நிகழ்ச்சி தொகுப்பாளர், மிமிக்ரி, கதாநாயகன், பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளைக் கொண்ட சிவகார்த்திகேயனை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் தான் 'அமரன்'. இப்படத்தில் நடித்தன் மூலம் சிவகார்த்திகேயனை உலக அளவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில் தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது. மேலும் தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி உள்ளது.
இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.
சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனும், சாய்பல்லவியும் இணைந்து நடித்த முதல் படம் இதுவாகும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
'அமரன்' படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்றது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்தவர்களின் கண்ணீரையும் வரவைத்தது.

இத்திரைப்படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
எஸ்கே 21 என்ற பெயரில் ஜனவரி 2022ம் ஆண்டும் இப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 2024-ல் படத்தின் தலைப்பு உறுதி செய்து அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சி.எச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படம் சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது. சிவகார்த்திகேயனுக்கு உச்ச நட்சத்திர அந்தஸ்தையும் இந்த படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் நடிகை சாய்பல்லவிக்கும் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்படத்தை இயக்கிய ராஜ்குமார் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனுஷ் படத்தை முடித்துவிட்டு இந்திப் படமொன்றை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- திகில் காட்சிகள் நிறைந்த சிறந்த ஹாரர் ஹாலிவுட் திரைப்படங்களை இச்செய்தியில் காணலாம்.
- இப்படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காலின் மற்றும் கேமரான் இணைந்து இயக்கியுள்ளனர்.
திகில் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த கதைக்களம் உள்ள திரைப்படத்திற்கு எப்பொழுதும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. என்னதான் தமிழில் ஏகப்பட்ட திகில் திரைப்படங்கள் வந்தாலும். அவை எதுமே ஹாலிவுட் திரைப்படங்கள் கொடுக்கும் பயத்தையும் திகில் உணர்வையும் பார்வையாளர்களுக்கு கடத்த தவற விடுகிறது. இதனால் இந்தாண்டு திகில் காட்சிகள் நிறைந்த சிறந்த ஹாரர் ஹாலிவுட் திரைப்படங்களை இச்செய்தியில் காணலாம்.
லேட் நைட் வித் தி டெவில் {Late Night with the Devil}
இப்படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காலின் மற்றும் கேமரான் இணைந்து இயக்கியுள்ளனர். தாஸ்ட்மல்சியன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு நேரடி தொலைக்காட்சில் நடக்கும் அமானுஷ்யங்கள் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தி ஃபர்ஸ்ட் ஓமன் {The First Omen}
1976 ஆம் ஆண்டு தி ஓமன் என்ற கிளாசிக் ஹாரர் திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மார்கிரட் என்ற பெண் கான்வெண்டில் சேர்கிறார். அங்கு அவருக்கும் கார்லிடா என்பவருடன் நல்ல நட்பு ஏற்படுகிறது. அந்த கான்வெண்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடைப்பெற்று வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை சுற்றியே இக்கதை நகரும். இந்நிலையில் இயக்குனர் அர்கஷா லாஸ்ட் ஓமன் திரைப்படத்தை அதன் தொடர்ச்சிலேயே இயக்கியுள்ளார். இப்படமும் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
எக்ஸ்ஹுமா {Exhuma}
எக்ஸ்ஹுமா ஒரு கொரியன் திரைப்படமாகும். இப்படம் கொரியாவின் கலாச்சார பின்னணியில் உருவாகிய ஒரு ஹாரார் திரைப்படமாகும். இப்படம் இறப்பிற்கும் ஆன்மாவிற்கும் இடையே உள்ள கொரியன் மக்களின் நம்பிக்கை அடிப்பைடையில் அமைக்கப்பட்ட கதைக்களமாகும். இப்படம் வெளியாகி கொரியன் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் ஜாங் ஜே ஹுன் இயக்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். நிறைய திகில் மற்றும் பயப்பட வைக்கும் காட்சிகள் இல்லை என்றாலும். அடுத்து என்ன அடுத்து என்ன என தூண்டும் திரைக்கதை படத்திற்கு பெரிய பலம். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆடிட்டி {Oddity}
இப்படத்தை ஐரிஷ் இயக்குனரான மெக் கார்தி இயக்கியுள்ளார். இப்படம் ஊரில் புதிதாக குடி வந்த தம்பதிகளின் மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைக்களமாகும். மனைவி வீட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறார். கணவன் அந்த ஊரில் உள்ள மனநல மருத்துவமனையில் வேலைபார்த்து வருகிறார். ஒருநாள் அவர் மருத்துவமனைக்கு செல்ல அங்கு இருந்து தப்பித்த ஒரு மனநல நோயாளி தப்பித்து கதாநாயகி தனியாக இருக்கும் போது வீட்டிற்கு வருகிறார் இதற்கு அடுத்து நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹெரெடிக் {Heretic}
இப்படம் மூன்று கதாப்பாத்திரங்கள் ஒரு லொகேஷனில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. ஆனாலும் மூன்று கதாப்பாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள். அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் பார்வையாளர்களை மிரளவைக்கிறது. இப்படத்தை ஸ்காட் பெக் மற்றும் பிரயான வூட்ஸ் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு வெளியான சிறந்த ஹாரர் திரைப்படங்களை பார்த்து மகிழுங்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
- இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின
இயற்கைப் பேரழிவுகள் எந்த காலத்திலும் இருந்து வரும் ஒன்று. ஆனால் சமீப காலங்களாக அதிகரித்து வரும் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் விளங்குகிறது. தீவிர வானிலை நிலைமைகள், காலநிலை நெருக்கடிகளும் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் (2024) உலகம் முழுவதும் 3,700 பேர் இறந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக வானிலை கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் ஆண்டின் சராசரி வெப்ப நாட்களில் 41 நாட்கள் கூடுதலாகி உள்ளது.

காலநிலை மாற்றம் என்றால் என்ன?
காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் வானிலை மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் நீண்ட கால மாற்றமாகும். இது இயற்கையாக நிகழக்கூடியது என்றாலும், புதைபடிவ[fossil] எரிபொருட்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் 1800 களில் இருந்து காலநிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்தாத பட்சத்தில் ஆபத்துக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நூற்றாண்டின் இறுதியில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது.
இதற்கான முன்னறிவிப்பாக இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் வெப்ப அலைகள், காட்டுத்தீ, சூறாவளி, வறட்சி மற்றும் வெள்ளம் என பல்லாயிரக்கணக்கான உயிர்களை காலநிலை மாற்ற பேரழிவுகள் பலிகொண்டுள்ளது.
பேரழிவுகள்
அட்லாண்டிக் கடலில், 11 சூறாவளிகள், 18 புயல்கள் ஏற்பட்டன. இதனால் அமெரிக்க பகுதிகளில், ஜூலையில் பெரில், ஆகஸ்டில் டெபி, செப்டம்பரில் ஹெலன் மற்றும் அக்டோபரில் மில்டன் ஆகிய கொடிய சூறாவளிகளால் 330-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பில்லியன் டாலர்கள் வரை சேதம் ஏற்பட்டது.

மே மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் வாக்கில் தெற்கு பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் மே மாதத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில், 300 க்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்டது. 6,000 வீடுகள் முற்றாக அழித்தன.

கேரளாவில் ஜூலையில், நிலச்சரி மற்றும் கனமழையால் வயநாடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 400 பேர் இறந்தனர்.

தென்கிழக்கு ஆசியாவில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட யாகி என்ற சூப்பர் புயல், கிட்டத்தட்ட 600 பேரைக் பலிகொண்டது.
அக்டோபர் பிற்பகுதியில் தென்கிழக்கு ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வறண்ட பிரதேசமான மத்திய கிழக்கிலும் ஏப்ரலில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. துபாய் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.

பருவநிலை மாற்றம் வறட்சி, மழைப்பொழிவு மற்றும் வெப்பத்தால் பயிர்கள் சேதமடைந்து உணவுப் பற்றாக்குறை, உலகளவில் விவசாயத் தொழிலுக்கு இழப்புகளை அதிகரித்தது.
வெப்ப அலை மரணங்கள்
மழை வெள்ள பேரழிவுகளை தவிர்த்து, இந்த வருடம் கோடையில் உலகளவில் உணரப்பட்ட வெப்ப அலை ஆயிரக்கணக்கானோரை பலிகொண்டது.
உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை ஜனவரி முதல் செப்டம்பர் வரை சராசரியை விட 1.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
உலகளாவிய சராசரி வெப்பநிலை ஜூலை 22 ஆம் தேதி 17.15 டிகிரி செல்சியஸை எட்டியது. இதுவே இந்த வருடம் பூமியில் வெப்பமான நாளாக பதிவுசெய்யப்பட்டது. ஜூலை 21 பதிவான 17.09 டிகிரி செல்ஸியஸ் இரண்டாவது வெப்பமான நாளாக பதிவானது.

இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ விளைவு காரணமாக பல நாட்களாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை நிலவியது. ஹீட்ஸ்ட்ரோக் வெப்ப அலைகளால் ஆசியா முழுவதும் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஹீட்வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் பாதிப்புகள் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகக் கூறுகிறது.
ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின் போது வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஐரோப்பாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளில் வெப்ப அலை காரணமாக 19 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன, குறிப்பாக கிரீஸ் மற்றும் இத்தாலியில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் வெப்ப அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு, 1,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவானது. வெப்பம் தொடர்பான நோய்களால் மெக்சிகோவில் 150 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளது.
தீர்வுதான் என்ன?
காலநிலை மாற்றத்தால் மறைமுகமாக இதய நோய்கள், காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுவாச நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பல முக்கிய காரணங்கள் போன்ற கொடிய நோய்களால் உயிர்கள் பறிபோகின்றன.

2024-ஐ திரும்பிப் பார்க்கும்போது, நாம் அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஒரு நாள் நமது கிரகம் மனிதகுலம் வாழத் தகுதியற்றதாக மாறும் என்பது நிரூபணமாகிறது.
உலகளாவிய அமைப்புகளும் அரசாங்கங்களும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில் இருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்ற கடுமையான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதே தீர்வாகும்.
- அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மேக்னைட்.
- இந்த கார் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், இந்த ஆண்டு ஏராளமான கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2024 ஆண்டு துவக்கமே, கார் மாடல்கள் விலை ஏற்றத்துடன் துவங்கியது. எனினும், அதன்பிறகு முன்னணி கார் பிராண்டுகள் புதிய கார் மாடல்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்தன.
பதிய கார் மாடல்களில் சில கார்கள் ஏற்கனவே செய்யப்பட்ட மாடல்களின் வருடாந்திர அப்டேட் செய்யப்பட்டவைகளாக இருந்தன. சில மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. எதுவாயினும், இந்த ஆண்டு அறிமுகமானதில், பிரபல கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
கியா கார்னிவல்:
கியா இந்தியா நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. மாடலை அதிகளவு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த காரில் ஏராளமான மாற்றங்களுடன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

நிசான் மேகனைட்:
இந்திய சந்தையில் நிசான் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மேக்னைட். இந்த மாடலின் புது வெர்ஷனும் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் ஒட்டுமொத்த டிசைன் மாற்றப்பட்டு, புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா கைலக்:
இந்தியாவில் ஸ்கோடா விற்பனை செய்யும் குறைந்த விலை எஸ்.யு.வி. மாடலாக கைலக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அசத்தலான டிசைன் மற்றும் ஏராளமான அம்சங்களுடன் ஸ்கோடா கைலக் மாடல் வெளியிடப்பட்டது.
கியா EV9:
கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக EV9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாக்ஸி டிசைன் கொண்டிருக்கும் கியா EV9 ஏராளமான கனெக்டெட் அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

டாடா கர்வ்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் மாடலின் ஐ.சி. எஞ்சின் வெர்ஷன் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் அறிமுக விலை ரூ. 10 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்:
இந்த ஆண்டு துவக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா 2024 ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தது. ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மஹிந்திரா XUV 3XO:
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக XUV 3XO அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய கேபின் டிசைன் கொண்டிருக்கும் XUV 3XO இரட்டை 10.25 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்களை புதிய மஹிந்திரா XUV 3XO கொண்டுள்ளது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர்:
2024 மாருதி சுசுகி டிசையர் மாடல் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த காரின் விலை ரூ. 6.79 லட்சத்தில் துவங்கி ரூ. 10.14 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகினர்
- கட்சியின் பொறுப்பாளர்களை ஒரு பொருட்டாகவே சீமான் எடுத்துக் கொள்வதில்லை.
நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பெரியகுளம் ராமச்சந்திரன் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகினர். இதேபோல், சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகினார்.
அதேபோல் நா.த.க. நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினோத்குமார் உட்பட 50 பேர், அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர்.

இதுகுறித்து வினோத் குமார் கூறுகையில், கட்சிக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசி வருகிறார் என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியகுளம் ராமச்சந்திரன். இவர் தான் வகித்து வந்த, மாவட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவருடன் கோவை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கோவை வடக்கு மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏழுமலை ஆகியோரும் கட்சியில் இருந்து விலகினர்.

கட்சியில் இருந்து விலகியது குறித்து நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் கூறுகையில்,
கடந்த 10 வருடமாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் பயணித்தோம். சீமான் முதலமைச்சர் ஆவார். அதற்கான வெற்றி இலக்கை அடைவார் என்ற நோக்கிலேயே நாங்கள் தீவிரமாக களப்பணியாற்றி வந்தோம்.
ஆனால் சமீப காலமாக சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். செயல்பட்டு வருகிறார். கொங்கு மண்டலத்தில் அருந்தியர் சமூகத்தின் பங்கு என்பது மிகப்பெரியது.
அப்படிப்பட்டவர்களை பார்த்து சீமான் வந்தேறிகள் என்று பேசியது பெரிய பிரச்சனையாக மாறியது. மேலும் எங்களது உறவினர்கள் ஏராளமானோர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் உள்ளனர்.
இதற்கு பிறகு அவர்களும் எங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர். சீட் தராததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவது முற்றிலும் தவறானது.
சீமான் கொள்கைளில் முரண்பட்டு செயல்பட்டதாலேயே நாங்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம். எங்களை தொடர்ந்து இன்னும் கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள நாம்தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து விலகுவார்கள் என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர்.
நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கூறுகையில்,
நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகினர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் நாதக நிர்வாகிகள் கூறுகையில்,
கொடி நட்டு, மேடை அமைப்பதில் இருந்து கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்கிற எங்களை எச்சில் என்கிறார் அண்ணன் சீமான். புதிதாக வருபவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம் என்று கூறினர்.

இவர்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது, எங்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. இதுகுறித்து கேட்டால், கட்சியில் இருந்து வெளியேறுமாறு கூறினார் என்று சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.
கட்சியின் பொறுப்பாளர்களை ஒரு பொருட்டாகவே சீமான் எடுத்துக் கொள்வதில்லை. கட்சிக்காக பண விரயம் செய்ய வேண்டும். ஆனால், கேள்வி கேட்டால் பதில் கிடைப்பதில்லை என்று கூறினார்.
மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த டாக்டர் இளவஞ்சியும் அக்கட்சியில் இருந்து விலகினார்.

இது தொடர்பாக இளவஞ்சி கூறுகையில், நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த முதல் மருத்துவர் நான்தான். 14 வருடங்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற சாதாரண பதவியில் இருக்கிறேன். இதே அணியில் எனக்குப் பின்பு வந்தவர்களுக்கு தலைவர், துணைத் தலைவர் எனப் பதவி கொடுத்தார் சீமான். என்னை செயல்படவே விடவில்லை" என்று கூறினார்.
அதேநேரம், நாம் தமிழர் நிர்வாகிகள் குறித்து சீமான் பேசிய சில உரையாடல்கள் ஆடியோ வடிவில் பொதுவெளியில் பரவியதும் நிர்வாகிகள் விலகலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது,
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுபவர்கள் எங்களின் ஸ்லீப்பர் செல். நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம். மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம் என்று சிரித்துக்கொண்டே அவர் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.
- ஸ்பெயின் அரையிறுதியில் பிரான்ஸை வீழ்த்தியது.
- இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான மிகப்பெரிய கால்பந்து தொடரான யூரோ 2024 ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகளும், அதேபிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடம் பிடித்த முதல் நான்கு அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.
அதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும் அந்த வகையில் காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை (1-1) பெனால்டி சூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
துருக்கியை 2-1 என வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜெர்மனியை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
போர்ச்சுக்கலை (0-0) பெனால்டி சூட்அவுட்டில் 5-3 என பிரான்ஸ் வீழ்த்தி காலிறுதிக்க முன்னேறியது.
முதல் அரையிறுதியில் இங்கிலாந்து- நெதர்லாந்து- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஸ்பெயின்- பிரான்ஸ் இடையிலான போட்டியில் ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஜூலை 15-ந்தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினர். இதனால் ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 47-வது நிமிடம்) ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. நிக்கோ வில்லியம்ஸ் இந்த கோலை பதிவு செய்தார்.
பின்னர் நீண்ட நேரம் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்தது. அந்த அணியின் கோலே பால்மேர் கோல் அடிக்க போட்டி 1-1 என சமன் ஆனது.
ஆனால் ஸ்பெயின் வீரர் மிகெல் ஒயர்சபால் 86-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஸ்பெயின் 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் இங்கிலாந்து அணியை கோல் அடிக்கவிடாமல் தடுக்க, 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தி யூரோம் 2024 சாம்பியன் பட்டத்தை வென்றது.
- உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 இல் இந்தியா 126 வது இடத்தில் உள்ளது.
- உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தில் உள்ளது.
உலகளாவிய குறியீடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் செயல்திறன் குறித்த அளவீடுகளாக உள்ளது. அந்த வகையில் 2023-2024 ஆம் ஆண்டின் உலகளாவிய குறீயீடுகளில் இந்தியா பெற்றுள்ள இடம் வருங்காலங்களுக்கான படிப்பினையை வழங்குவதாக அமைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி, கண்டுபிடிப்பு, மனித மேம்பாடு, பருவநிலை மாற்றத்தை கையாள்வது உள்ளிட்டவற்றில் வளர்ச்சி இருந்தபோதிலும் அமைதி, ஊழல், பாலின சமத்துவமின்மை மற்றும் காற்றின் தரம் ஆகியவற்றில் இந்த வருடம் இந்தியா பெற்றுள்ள இடம் கவலை அளிப்பதாக உள்ளது.

ஐநா மனித வளர்ச்சிக் குறியீடு
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின்படி, 2023-2024க்கான மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. மனித வளர்ச்சிக் குறியீடு, ஆரோக்கியம், அறிவு மற்றும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் நாடுகளை அளவிடுகிறது. சில பகுதிகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.
காலநிலை மாற்றம் செயல்திறன் குறியீடு
இந்த வருடம் வெளியான ஜெர்மன்வாட்ச் அமைப்பின் காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2023 இன் படி இந்தியா 7வது இடத்தில் உள்ளது. பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் பயன்பாடு மற்றும் காலநிலை கொள்கை உள்ளிட்ட நான்கு அளவுகோல்கள்படி இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிக கவனம் அளிக்கப்படுவதால் இந்தியாவில் இந்த முன்னேற்றமானது நிகழ்ந்துள்ளது.
உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு
2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் இந்தியா 14வது இடத்தில் உள்ளது. 163 நாடுகளில் நடந்த சம்பவங்கள், இறப்புகள், காயங்கள் மற்றும் பணயக்கைதிகள் ஆகிய அளவுகோள்களின் அடிப்படையில் பயங்கரவாதத்தின் தாக்கத்தை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது. இதில் இந்தியா பெற்றுள்ள இடம் நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுத்தி வரும் சவால்களை சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச ஐபி குறியீடு
நாடுகளில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை அளவிடும். அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இந்த வருடம் வெளியிட்டுள்ள சர்வதேச ஐபி குறியீடு 2024 இல் இந்தியா பின்னடைவோ முன்னேற்றமோ இல்லாமல் அதே 42வது இடத்தில் உள்ளது.
குளோபல் Soft power குறியீடு
இராஜதந்திர, கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளில் நாடுகளின் நிலை குறித்து அளவிடும் குளோபல் Soft power 2024 குறியீட்டில் 29 இடத்தை இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக 28 வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் 1 இடம் பின்தங்கியுள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு
பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2024 இல் இந்தியா 84 வது இடத்தில் உள்ளது.

பாலின சமத்துவமின்மை குறியீடு
இந்த வருடம் வெளியான UNDP இன் பாலின சமத்துவமின்மை குறியீடு 2022 இல் இந்தியா 129வது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீடு பெண்களின், இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளர் சந்தைகளில் பாலின சமத்துவமின்மையை வைத்து அளவிடுகிறது. பெண்களின் உரிமைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியா இன்னும் குறிப்பிடத்தக்கப் பாலின வேறுபாடுகளை எதிர்கொள்கிறது.
உலக மகிழ்ச்சி அறிக்கை
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் (SDSN) வெளியிட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 இல் இந்தியா 126 வது இடத்தில் உள்ளது. இது இந்திய குடிமக்கள் மத்தியில் மிதமான மகிழ்ச்சி நிலைகளைக் குறிக்கிறது. வாழ்க்கைத் தரம், சமூக ஆதரவு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை கொண்டு இந்த குறியீடு அளவிடப்படுகிறது.'
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு
உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்ட உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2024 இல் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. இந்தியா தொழில்நுட்ப விண்வெளி மற்றும் ஆராய்ச்சி பகுதிகளில் வளர்ந்துள்ளதை இது காட்டுகிறது. கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் சுற்றுச்சூழலில் வளர்ச்சியடையாமல் உள்ளது.
உலகளாவிய பட்டினி குறியீடு
2024 ஆம் ஆண்டின் உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 105 வது இடத்தில் உள்ளது. குடிமக்கள் அனைவருக்கும் போதுமான ஊட்டச்சத்தை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் சவால்களைக் கொண்டுள்ளதையே இந்த இடம் குறிக்கிறது.
உலகளாவிய போட்டித்திறன் குறியீடு
உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தில் உள்ளது.நீண்ட கால மதிப்பை உருவாக்குவதற்கு நாடுகள் தங்கள் திறன்களை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதை இந்த குறியீடு அளவிடுகிறது.
உலகளாவிய அமைதிக் குறியீடு
சமூகப் பாதுகாப்பு, மோதல்கள் மற்றும் இராணுவமயமாக்கல் மூலம் ஒரு நாட்டில் அமைதியின் அளவை மதிப்பிடும் உலகளாவிய அமைதிக் குறியீடு 2024 இல் இந்தியா 116வது இடத்தில் உள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் அமைதியை உறுதிப்படுத்த இந்தியா தவறியதை இந்த இடம் குறிக்கிறது.

எதிர்கால வாய்ப்புகள் குறியீட்டு
உலகளாவிய மாற்றங்களுக்கு நாடுகள் எவ்வாறு தங்களை மேம்படுத்தி மாற்றியமைக்கின்றன என்பதைக் கொண்டு அளவிடப்படும் எதிர்கால வாய்ப்புகள் குறியீட்டு 2024 இல் இந்தியா 35 வது இடத்தில் உள்ளது
ஊழல் தடுப்பு குறியீடு
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் 2023 இன் ஊழல் புலனாய்வு குறியீட்டில் இந்தியா 93 வது இடத்தில் உள்ளது. ஊழலுக்கு எதிரான அரசு நடவடிக்கையின் போதாமையை இவ்விடம் பிரதிபலிக்கிறது.
உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு
2024ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில், இந்தியா 159வது இடத்தில் உள்ளது, இது பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தில் மிகுந்த கவலைக்குரிய இடத்தில் இந்தியா உள்ளதை குறிக்கிறது.
- திருப்பத்தி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்தார் .
- ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் பிரசாத லட்டு தயாரிக்க, மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்த நெய்யை பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.
லட்டிற்கு தயாரிக்கப்படும் நெய் சுத்தமானது இல்லை. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது குற்றம் சுமத்தினார்.

இதனையடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குநரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இதனிடையே திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பரிதாபங்கள் யூட்யூப் சேனலில் வெளியான காணொளிக்கு இந்துத்துவா ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த வீடியோ பரிதாபங்கள் யூட்யூப் சானலில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த வீடியோ யூட்யூபில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி அறிவித்தார். பின்னர் பரிதாபங்கள் குழுவினர் பாஜகவிடம் மன்னிப்பு கேட்டபிறகு இந்த விவகாரம் சுமூகமாக முடிவுக்கு வந்தது.
அதே போல் மெய்யழகன் திரைப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது 'லட்டு என்பது சென்சிட்டிவான விஷயம்' என்று கார்த்தி பேசிய வீடியோ வைரலானது. இதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக கார்த்தி இந்த விவகாரம் தொடர்பான மன்னிப்பு கோரினார்.
திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திராவை தாண்டி தமிழ்நாட்டிலும் அந்த சமயத்தில் பல பரபரப்புகளை ஏற்படுத்தியது.

இதனிடையே திருப்பத்தி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்து அலிபிரி நடைபாதை வழியாக திருப்பதி மலைக்கு நடந்து சென்றார்.
பின்னர் குடும்பத்தினருடன் சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான தரிசனம் செய்து லட்டு பரிகார விரதத்தை பவன் கல்யாண் நிறைவு செய்தார்.
இதனை தொடர்ந்து லட்டுக்கு பரிகார பூஜைகளை செய்தார். அன்னதான கூடத்திற்கு சென்று அன்னதானம் தரமான பொருட்களைக் கொண்டு சுவையாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
திருப்பதி பாதயாத்திரையின்போது படியேற முடியாமல் களைப்பில் பவன் கல்யாண் ஓய்வெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், திருப்பதி லட்டுவில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும்வகையில் ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.
இதனையடுத்து பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர்.
லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி சென்றனர்.

லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்ததாக எழுந்த விவகாரம் அரசியல் தளத்தில் பெரும் பேசுபொருளானாலும் மக்களிடையே பெரிதாய் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் அப்போதும் திருப்பதி லட்டுவை கடவுளின் பிரசாதம் என்று நினைத்தே வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.