search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சாவூர்"

    • குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் ரெயில் மறியல் போராட்டம்.

    தஞ்சாவூர்:

    குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதாரவிலை கேட்டு சாகும் வரை பஞ்சாப் கண்ணூரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடிவரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) தலைவர் ஜெக்ஜித் சிங் டல்லேவாலோடு உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது ) சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்துவதற்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மண்டல தலைவர் துரை. பாஸ்கரன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் உள்பட ஏராளமான விவசாயிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு முதல் நடைமேடைக்கு வந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மத்திய அரசு எதிராகவும் கோஷமிட்டனர்.

    இதையடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் உள்பட 55 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்பிறகு ரெயில் காரைக்கால் நோக்கி புறப்பட்டது. இந்த சம்பவத்தால் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் சிவா (26) பயணிகள் கண்முன்னரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பேருந்தில் பயணிகள் காத்திருக்க டீ குடித்துவிட்டு பேருந்தை இயக்க ஓட்டுனர் சிவா சென்றுள்ளார்.

    அப்போது, முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.

    முகமூடி அணிந்து வந்த கும்பல் ஓட்டுநர் சிவாவை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது. இதைதொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓட்டுனர் சிவாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் தஞ்சை கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் இன்று தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் தொடக்க காலத்தில் சில நாட்கள் மழை பெய்தது. அதன் பின்னர் விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 11 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இன்று தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். மழை தொடரும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யும் இடங்களில் விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது.
    • இந்த போட்டியில் வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.

    'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.

    இந்நிலையில் தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பிழையின்றி முழுமையாக பாடினால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் ஒரு நூதன போட்டியை அறிவித்தது.

    ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாணவ, மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் 25 நபர்கள் சரியாக தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி தலா 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்று சென்றனர். 

    • அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • இந்த சர்ச்சையை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

    கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

    அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.

    அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த சர்ச்சையை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

    ஜோதி அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் BUN-ன்னா கிரீம் இருக்கனும்..Bike-ன்னா ஹெல்மெட் இருக்கணும் என்ற வாசகம் அடங்கிய BUN வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.

    • மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கும்பகோணம்:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின்கட்கரி நாக்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிபேட் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலைக் கல்லூரி மைதானத்திற்கு வந்தார்.

    அவரை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், சுதா, பா.ஜனதா நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும் வரவேற்றனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் விக்கிரவாண்டி 4 வழி சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்களை அறிய தஞ்சாவூரில் இருந்து சோழபுரம் வரையிலான சாலை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சோழபுரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வரை 4 வழி சாலை திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளை முடித்து கொண்டு திருச்சி சென்று விமானம் மூலம் நாக்பூர் செல்கிறார்.

    மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.
    • ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகு கவுன்சிலர்கள் வெளியேறினர். பின்னர், நகராட்சி அதிகாரிகளை வைத்து ஆணையர் குமரன் கூட்டம் நடத்தியுள்ளார்.

    அப்போது திடீரென பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி மற்றும் லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் அடங்கிய குழுவானது டெபுட்டி இன்ஸ்பெக்சன் செல் ஆபீஸர் ஐயம்பெருமாள் மற்றும் குணசேகரன் ஆகியோர் சென்று அதிகாரிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.

    நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் கணக்கில் வராத கையூட்டு தொகைகளை வைத்திருந்த நகராட்சி ஆணையர் குமரனிடமிருந்து ரூ.5 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதேப்போல் உதவி பொறியாளர் மனோகரனிடம் ரூ.80 ஆயிரம், ஒப்பந்ததாரர் எடிசனிடம் ரூ.66 ஆயிரம், டிரைவர் வெங்கடேசனிடம் ரூ.8 ஆயிரம் என மொத்தம் ரூ.6 லட்சத்து 54 ஆயிரம் கணக்கில் வராத கையூட்டு பணம் சோதனையில் கைப்பற்றப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

    பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த அதிரடி சோதனையில் ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
    • ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.

    தஞ்சாவூா்:

    ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளா் பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு 2 மாநிலங்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த பட்ஜெட் நகலை நாடு முழுவதும் எரிக்கும் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.

    இதன்படி, தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கிராமங்களில் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தை வருகிற 31-ந்தேதி நடத்து வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு நாளை கடைப்பிடிக்கும் விதமாக காா்பரேட்டுகளே இந்தியாவை விட்டு வெளியேறு என்ற கோரிக்கையை முன் வைத்து மாநிலம் முழுவதும் மாவட்ட, வட்ட தலைமையிடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இயற்கையை பாதுகாப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 17-ந்தேதி தூத்துக்குடி, சேலம், திருவாரூா், செங்கல்பட்டு ஆகிய 4 இடங்களில் கருத்தரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இந்த போராட்டங்களுக்கு இந்தியா கூட்டணி கட்சியினா் ஆதரவு அளிக்கு மாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர்.
    • கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்களில் பெரும்பாலானோர் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் பணிக்காக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்களில் சென்று வருகின்றனர். தினமும் ஷிப்ட் முறையில் பணிபுரியும் இவர்கள் வேலை நேரத்திற்கு ஏற்றவாறு பழைய பஸ் நிலையத்தில் இருந்து செல்கின்றனர்.

    அதன்படி இன்று காலை நேர பணிக்காக 6.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அரசு டவுன் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மருத்துவ கல்லூரி செல்லும் டவுன் பஸ் வந்தது. அதில் ஏற அவர்கள் முயன்றனர்.

    ஆனால் கண்டக்டர் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில ஏறுங்கள் என கூறினார். இதனால் அவர்கள் அடுத்து வந்த டவுன் பஸ்சில் ஏற முயன்றபோது அந்த கண்டக்டரும் இந்த பஸ்சில் ஏறாதீர்கள் என கூறி அலைக்கழித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பஸ்களை எடுக்க விடாமல் பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வெளியே செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் அங்கேயே நின்றது. மற்ற பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கரந்தை போக்குவரத்து கிளை மேலாளர் சந்தானராஜ், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பெண்கள், அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் என்பதால் எங்களை போன்ற பெண்களை ஏற்ற மறுக்கின்றனர். பஸ்சில் ஏறினாலும் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில் ஏறுங்கள் என மாறி மாறி கூறுகின்றனர்.

    இலவச டிக்கெட் என்பதால் சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர். அரசே இலவச டிக்கெட் என கூறும்போது கண்டர்கள் அவமரியாதையாக நடந்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாது.

    நாங்கள் 7 மணிக்குள் மருத்துவ கல்லூரிக்கு சென்றால் தான் இரவு பணியில் ஈடுபட்டவர்களை மாற்றி விட முடியும். பஸ்களில் ஏற்ற மறுப்பது பல நாட்களாக நடக்கிறது. இலவச டிக்கெட் என்பதற்காக தான் அவமதிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை பஸ்களை எடுக்க விட மாட்டோம் என திட்டவட்டமாக கூறினர்.

    இதையடுத்து போக்குவரத்து மேலோளர் சந்தானராஜ், இனி இதுபோல் பிரச்சினை நடக்காமல் பார்த்து கொள்கிறோம். மறியலை கைவிடுங்கள். மாற்று பஸ்சில் உங்களை அனுப்பி வைக்கிறோம் என்றார்.

    இதனை ஏற்றுக்கொண்டு பெண் பணியாளர்கள் மறியலை கைவிட்டனர். மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அதில் ஏறி மருத்துவ கல்லூரிக்கு சென்றனர். மேலும் ஆம்புலன்சிலும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த மறியல் போராட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடந்ததால் அதுவரை மற்ற பஸ்களும் செல்ல முடியாமல் நின்றது. மறியலை கைவிட்ட பிறகு மற்ற பஸ்களும் சென்றன. மேலும் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தஞ்சையில் வடபத்ரகாளியாக அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.
    • அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள்.

    அன்னை பராசக்தியானவள், துர்க்கையாக, காளிதேவியாக என்று பல்வேறு வடிவங்கள் எடுத்து, தீமையின் உருவமாகத் திகழ்ந்த பல அரக்கர்களை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் சொல்கிறது.

    வாழ்வில் வெற்றி, தோல்வி சகஜம் என்றாலும், அனைவரும் தெய்வத்திடம் வேண்டுவது 'செய்யும் செயல்களில் வெற்றிபெற அருள்புரிய வேண்டும்' என்பதைத்தான். அப்படி சோழர்களுக்கு வெற்றியை தேடித் தந்து இன்றும் தஞ்சையில் வடபத்ரகாளியாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள், மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் பார்வதி தேவியை நாடிச் சென்றனர்.

    அன்னையும், அந்த அரக்கர்களை அழிக்க 'கவுசீகி' என்ற அழகிய பெண் வடிவம் எடுத்து வந்தாள். அவள் அழகைக் கண்டு மயங்கிய சும்ப, நிசும்பர்கள், அவளை மணக்க எண்ணினர். ஆனால் அன்னையோ, "இருவரில் யார் மிகுந்த பலசாலியோ அவர்களையே மணப்பேன்" என்று கூறினாள்.

    இதையடுத்து சும்ப, நிசும்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அழிந்து போயினர். அவர்கள் அழிவுக்கு காரணமானதால், இந்த அன்னையை 'நிசும்பசூதனி' என்று அழைத்தனர்.

    சோழர்களால் குலதெய்வமாக வணங்கப்பட்டவள், இந்த நிசும்பசூதனி. கி.பி. 850-ல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி, பழையாறையில் இருந்து தஞ்சைக்கு தலைநகரை மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார்.

    பின்பு வந்த ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன்னர், இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.

    சோழர்கள் நிர்மாணித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் 7 அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தெரியும்படியான தோற்றத்தில் காட்சி தருகிறாள்.

    அஷ்ட திருக்கரங்களுடன் திகழும் இந்த அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள். நிசும்பனின் தலையைக் கொய்து, அந்த தலை மீது தன் திருவடியை வைத்து, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், திரிசூலம் ஆகியவற்றை தாங்கியபடி, அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி இருக்கிறாள்.

    இந்த கோவில் முன் மண்டபம், கருவறையுடன் கூடிய விமானத்துடன் அமைந்துள்ளது. முன்மண்டப முகப்பில் அம்மனின் அமர்ந்த கோலத்திலான உருவம் காணப்படுகிறது. 55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.

    இக்கோவிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்தால், ராகு - கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும்.

    இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய இன்னல்கள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.

    இக்கோவிலில் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை, 21 நாட்களுக்கு ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் பால்குடம் எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 11 மணிவரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தர் கோவில் தெரு வழியாக இக்கோவிலை சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
    • மூச்சு திணறல் உள்ளதா? என்று சுகாதார துறையினர் ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜெபமாலை புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் காரணாக மளமளவென தீ பரவி பற்றி எரிந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த ஆணையர் மகேஸ்வரி விரைந்து சென்று தீ அணைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.

    இந்த தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறியதால் ஜெபமாலைபுரம் மற்றும் சுற்றியுள்ள சீனிவாசபுரம், மேலவீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதி மக்கள், மாணவர்கள் அவதியடைந்தனர்.

    மேலும் துர்நாற்றத்துடன் கூடிய புகை பரவியதால் வாகன ஓட்டிகள் முகத்தை மூடியப்படி சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர். புகைமூட்டம் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

    மேலும் யாருக்காவது மூச்சு திணறல் உள்ளதா? எனவும் வீடு வீடாக சென்று சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்றால் குப்பை கிடங்கில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    • பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
    • மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

    தஞ்சாவூா்:

    நீட் நுழைவு தேர்வு முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக கூறி பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

    அந்த வகையில் இன்று நீட் தேர்வை கண்டித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மத்திய அரசின் கலால் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமையில் ஏராளமான மாணவ- மாணவிகள் திரண்டனர்.

    பின்னர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியவாறு கலால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.

    உடனே பாதுகாப்பில் இருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு மாணவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 மாணவ-மாணவிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    ×