என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95440"

    பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அமைதியாக, கட்டுக்கோப்பாக இருக்கிறார் என சேவாக் கூறியுள்ளார்.
    மும்பை:

    15-வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் சுற்று இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. 

    இந்த ஆண்டு தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்  கடைசி 2 இடங்களை பெற்று வெளியேறின. இளம் கேப்டன்களை கொண்ட குஜராத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, பெங்களூர் அணி  குவாலிஃபயருக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்த்திக் பாண்டியாதான் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்  தெரிவித்துள்ளார்.

    குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது ஹர்த்திக் பாண்டியா தான். அவருக்கு சிறப்பான தலைமை பண்பு இருக்கும்  என நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று  நினைத்தேன். ஆனால் அவர் அமைதியாக, கட்டுக்கோப்பாக இருக்கிறார். 

    எப்போது ஒரு கேப்டனின் தலைமை பண்பு நமக்கு பிடிக்கும்? இக்கட்டான சூழலில் அவர் எடுக்கும் முடிவுகளில் தான்.  குறிப்பாக  உங்கள் அணி பந்துவீசி கொண்டிருக்கும்போது நாம் ஃபீல்டிங்கையும், பந்துவீச்சையும் எதிரணிக்கு தகுந்ததாற்போல் மாற்ற வேண்டும். 

    அப்போது தான் சிறந்த பலன் கிடைக்கும். கடும் அழுத்தமான நேரங்களில் கூட அவர் அமைதியாக இருக்கிறார். இதுதான் அவருடைய கேப்டன்சியில் எனக்கு பிடித்தது.

    இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.
    2022, 2021, 2020, 2018 ஆகிய ஆண்டுகளில் கே.எல். ராகுல் 600 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
    மும்பை:

    நடைபெற்று வரும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ ஜெயண்டஸ் அணி, டூ பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. 

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ரஜத் படிதாரின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. 

    அணியின் வெற்றிக்காக போராடிய கேப்டன் கே எல் ராகுல் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இருப்பினும் நேற்றைய போட்டியில் 79 ரன்கள் குவித்ததன் மூலம் ராகுல் இந்த சீசனில் 600 ரன்களை கடந்துள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய அவர் 616 ரன்கள் குவித்துள்ளார். 

    இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 4 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் 626 ரன்கள், 2020-ஆம் ஆண்டில் 670 ரன்கள் மற்றும் 2018-ஆம் ஆண்டில் 659 ரன்களை கே.எல்.ராகுல் எடுத்துள்ளார். இடையில் 2019-ஆம் ஆண்டும் மட்டும் 593 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் 600 ரன்களை தாண்டும் வாய்ப்பை நழுவ விட்டார்.

    இவருக்கு அடுத்தபடியாக பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 3 முறை 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது கேமராவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.
    மும்பை:

    தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், தென் ஆப்ரிக்கா வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

    இதில் பட்லர் 16 போட்டிகளில் விளையாடி 4 சதம் உட்பட 824 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது கேமராவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.

    இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லர் ஒவ்வொரு முறையும் பெரிய ஷாட்டை அடிக்கும்போதும் கேமராவில் வான் டெர் டுசெனின் மனைவி லாரா தவறுதலாக காட்டப்பட்டார். இதனால் பலர் லாராவை பட்லரின் மனைவி என தவறுதலாக நினைத்துவிட்டனர். இதுகுறித்து கிண்டலாக பேசிய லாரா ‘நான் பட்லரை 2வது கணவராக தத்தெடுத்துவிட்டேன்’ என தெரிவித்தார்.

    இதுகுறித்து லாரா கூறியதாவது:-

    நான் ஜோஸ் பட்லரின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும்போது சில முறை கேமராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறார்கள். பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் அவரை பார்த்தது கூட இல்லை.

    என் கணவர் ரஸ்ஸி சில காரணங்களால் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதில் பட்லருக்கு உற்சாகத்தை தெரிவித்து வருகிறேன். இந்த சீசனில் நான் பட்லரை இரண்டாவது கணவராக தத்தெடுத்துவிட்டேன்.

    இவ்வாறு கிண்டலாக கூறினார். 
    விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
    சர்வதேச போட்டியில் 2½ ஆண்டுகளாக சதம் அடிக்காத இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு இந்த ஐ.பி.எல். சீசன் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

    33 வயதான விராட் கோலி 16 ஆட்டத்தில் விளையாடி 341 ரன்கள் எடுத்தார். 2 முறை மட்டுமே அரை சதம் அடித்தார். அவரது சராசரி 22.73 ஆகும்.

    பெரும்பாலான ஆட்டங்களில் தொடக்க வீரராக அடி குறைவான ரன்களையே எடுத்தார்.

    இந்த நிலையில் விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது நமக்கு தெரிந்த விராட் கோலி அல்ல. வேறு விராட் கோலிதான் இந்த சீசனில் விளையாடினார். இந்த சீசனில் செய்த தவறுகளை ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே அவர் செய்தது இல்லை.

    ரன்கள் குவிக்காத போது இது போன்று நிகழலாம். மோசமான பேட்டிங் நிலையை மாற்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றலாம். அது பல்வேறு விதமாக ஆட்டம் இழப்பதற்கு வழி வகுக்கும்.

    இந்த சீசனில் அனைத்து விதமான முறையிலும் கோலி அவுட் ஆகி உள்ளார்.

    இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் தோல்வி அடைந்த போதிலும் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தற்காக விராட் கோலி தனது உருக்கமான பதிவில் நன்றி தெரிவித்து உள்ளார்.
    • ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது.
    • நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. உலகக்கோப்பைக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    வேகப்பந்து வீரர் பும்ரா, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக 20 ஓவர் உலகக்கோப்பையில் ஆடவில்லை. முன்னணி வீரர்களான இருவரும் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. உலகக்கோப்பைக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த தீபக் சாஹரும் காயம் அடைந்துள்ளார். அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயத்தில் சிக்குவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அதிக அழுத்தம் இருப்பதாக உணரும் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லி நான் பார்த்து உள்ளேன். இதனால் அவர்களுக்கு இதனை சொல்லிக்கொள்கிறேன்.

    ஐ.பி.எல்.லில் ஆடுவதால் வீரர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். அழுத்தமாக உணர்ந்ததால் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட வேண்டாம் என்று நான் சொல்லிக்கொள்கிறேன்.

    வீரர்கள் கிரிக்கெட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் இருக்காது. மன அளவிலான சோர்வு குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன். கிரிக்கெட் அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தது இல்லை. வீரர்களும் விளையாட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் எதுவும் இருக்காது.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    • டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
    • இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ஏதோ புதிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர். டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியானது. மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் சில ரசிகர்கள் கணித்தனர்.

    ஆனால் இந்த யூகங்களுக்கு எல்லாம் மாறாக, பேஸ்புக் நேரலையில் அவர் அறிவித்த விஷயம், இதெல்லாம் ஒரு விஷயமா? என்று ரசிகர்களை பேச வைத்தது. சொன்னபடி பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டோனி, ஓரியோ பிஸ்கட் ஒன்றை அறிமுகம் செய்துவிட்டு எழுந்து சென்றார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்தியாவில் டோனி மீண்டும் ஓரியோவை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிராண்ட் முன்னதாக 2011 இல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இன்றைய பிராண்ட் விளம்பரத்தில், முந்தைய வெளியீடு மற்றும் உலகக் கோப்பை வெற்றியை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டார். இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

    இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். தனது பிராண்ட் விளம்பரத்திற்காக, தன்னை பின்தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்களை பயன்படுத்தியிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. இதற்காக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

    • எம்.எஸ்.டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
    • டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.

    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.

    இந்த நிலையில் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று (25-ந்தேதி) மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

    பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்தனர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.

    டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் ரசிகர்கள் கணித்து இருக்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன்பு விடைபெற விரும்புகிறேன் என்று டோனியும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு வீரரும் பெரிய சர்வதேச போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.
    • 20 ஓவர் உலக கோப்பைக்காக வீரர்களை தயார் செய்யும் பணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈடுபட்டு உள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். டெலிவிஷன் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரத்து 390 கோடிக்கு விற்பனையானது. ஏலம் முடிவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த தகவலை தெரிவித்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஒளிபரப்பு ஒப்பந்தம், 20 ஓவர் உலக கோப்பை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலி பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது அவர் வீரர்கள் பணத்துக்காக மட்டும் விளையாடுவார்கள் என நினைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    ஐ.பி.எல். ஒளிபரப்பு மெகா ஒப்பந்தம் மூலம் இந்திய கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த இது அரிய வாய்ப்பாகும். இன்னும் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க கிரிக்கெட் வாரியத்துக்கு உதவும். கிரிக்கெட் வீராங்கனைகளின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்திற்கான திட்டமிடல் 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டு. இது நுணுக்கமாக கையாளப்பட்டது. இந்த ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்தஸ்துக்காகவும், பெருமைக்காகவும் ஆடுகிறார்கள். ஒவ்வொரு வீரரும் பெரிய சர்வதேச போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியை விட சர்வதேச போட்டிகளில் தான் மதிப்பு அதிகம். ஐ.பி.எல். போட்டியால் இரு நாடுகள் இடையேயான தொடர் பாதிக்காது. அதற்கு ஏற்ற வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்படுகிறது. ஜூனியர் கிரிக்கெட்டுக்கு நாங்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்போம். இளம் வீரர்களை தொடர்ந்து உருவாக்குவோம்.

    ஐ.பி.எல். போட்டியால் வீரர்களுக்கு சோர்வு இருப்பதாக கருதவில்லை. 20 ஓவர் உலக கோப்பைக்காக வீரர்களை தயார் செய்யும் பணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈடுபட்டு உள்ளார்.இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வாய்ப்பு உள்ள வீரர்களுடன் விளையாட தொடங்குவோம்.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

    • இந்த ஐபிஎல் போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    • இந்த ஏலத்தின் முடிவு நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை:

    அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2023-2027) ஐ.பி.எல். போட்டிக்குரிய டி.வி. ஒளிபரப்பு உரிமம் மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலம் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2018-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.16,347 கோடிக்கு டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது. இந்த உரிமம் நடந்து முடிந்த ஐ.பி.எல். 15-வது சீசனுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் முதல்முறையாக மின்னணு ஏலம் மூலம் உரிமம் வழங்கப்பட இருக்கிறது. இந்த உரிமத்தை வாங்குவதற்காக டிஸ்னி-ஸ்டார், சோனி, ஜீ குழுமம், ரிலையன்ஸ் வியாகாம்18 உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.

    இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி 'ஏ-பிரிவில்' இந்திய துணை கண்டத்துக்கு மட்டும் டி.வி. ஒளிபரப்பு உரிமம், 'பி-பிரிவில்' இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம். 'சி-பிரிவில்' இந்திய துணை கண்டத்துக்கு மட்டும் ஐ.பி.எல். தொடக்க ஆட்டம், இறுதி சுற்று, பிளே-ஆப் உள்ளிட்ட குறிப்பிட்ட 18 ஆட்டங்களுக்கான டிஜிட்டல் உரிமம், கடைசியாக 'டி-பிரிவில்' உலக நாடுகளுக்கான டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவை தரப்படவுள்ளது.

    இந்த 4 பிரிவுகளுக்கும் அடிப்படை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் சேர்த்து மொத்தத்தில் ரூ.60 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள், தொகையை குறிப்பிட்டு ஏலம் கேட்பார்கள். இரண்டு அல்லது 3 ரவுண்டுகள் ஏலம் கேட்க வாய்ப்பு வழங்கப்படும். யார் அதிக தொகைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு உரிமம் ஒதுக்கப்படும். ஆனால் அதிக தொகை கேட்டுக் கொண்டே போனால் ஏலம் மறுநாள் கூட நீடிக்கும்.

    இந்த ஏலத்திற்கான முடிவு நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிரிக்கெட் விளையாட்டு தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாக சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
    • இன்று கிரிக்கெட் வீரர்கள் கோடிகளில் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் நடைபெற்று முடிந்தது. இதில் இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதேபோல கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஐ.பி.எல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவிலான சிறந்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இ.பி.எல்-ஐ (இங்கிலிஷ் பிரீமியர் லீக்) விட ஐபிஎல் தொடர் அதிக வருமானத்தை பெறுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட் போட்டி தொடர்ந்து பரிணாமவளர்ச்சி அடைந்து வருகிறது. என்னை போன்ற வீரர்கள் சில நூறுக்களை சம்பாதித்தோம். இன்று உள்ள வீரர்கள் கோடிக்களில் சம்பாதிக்கின்றனர். இந்த விளையாட்டு ரசிகர்களால், இந்திய மக்களால், பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது. இ.பி.எல்லை விட ஐ.பி.எல் அதிக வருமானத்தை பெறுகிறது. இந்த விளையாட்டு தொடர்ந்து வலுவடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்தார். 

    • ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் மின்னணு முறையில் நாளை தொடங்குகிறது.
    • ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தில் இருந்து அமேசான் நிறுவனம் திடீரென விலகி உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதிக ரசிகர்கள் இந்தப் போட்டியை பார்ப்பதால் ஒளிபரப்பு உரிமத்தைபெற எப்போதுமே கடும் போட்டி நிலவும்.

    2008-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சோனி நெட்வொர்க் நிறுவனம் ரூ.8,200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமத்தை பெற்று இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ஸ்டார் நிறுவனம் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பியது. அந்த நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.16,347 கோடிக்கு வாங்கி இருந்தது.

    2023-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பு மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமத்துக்கான டெண்டர் பணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே தொடங்கி இருந்தது.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் மின்னணு முறையில் நாளை தொடங்குகிறது. இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமம் இந்திய துணைக்கண்டம் ஒளிபரப்பு என 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தில் இருந்து அமேசான் நிறுவனம் திடீரென விலகி உள்ளது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18, ஜே.வி. தற்போதைய ஒளிபரப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி (ஸ்டார்), ஜீ குழுமம், சோனி நிறுவனம் ஆகியவை கடும் போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன.

    2 அல்லது 3 ரவுண்டகள் ஏலம் கேட்க வாய்ப்பு உள்ளது. அதிக தொகையை கேட்கும் நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கப்படும்.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு மற்றும் இணைய வழி பயன்பாடுக்கான டிஜிட்டல் உரிமம் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக ஐதராபாத் வீரர் உம்ரான் மாலிக் 157 கி.மீ வேகத்தில் பந்து வீசியிருந்தார்.
     அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்றது. 

    இந்த போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணி களம் இறங்கி விளையாடிய போது  குஜராத் வேக பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் 157.3 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனின் வேகமான பந்தை வீசி பதிவு செய்து அவர் சாதனை படைத்துள்ளார். 

    இதற்கு முன்னர் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், டெல்லி அணிக்கு எதிராக 157 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்திருந்தார். தற்போது பெர்குசன் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.


    ×