search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Krittikai"

    • பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கோவிலுக்கு வந்தனர்.
    • ஆடிக்கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

    பழனி:

    பழனியில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம் நடந்தது. இதனையடுத்து காலசந்தி பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

    இதனால் படிப்பாதை, யானைப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், காவடி சுமந்து வந்தும் அரோகரா கோஷம் முழங்க கோவிலுக்கு வந்தனர்.

    இதனால் பழனி கோவிலில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் தலையாகவே காணப்பட்டது.

    இதே போல் பல்வேறு முருகன் கோவில்களிலும் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பாலாபிஷேகம் செய்து முருகனுக்கு உகந்த தேன், தினை மாவை படையலிட்டு வழிபட்டனர்.

    இதே போல் ராமலிங்கம்பட்டி பாதாள செம்புமுருகன் கோவில், கந்தக்கோட்டம் முருகன் கோவில், அபிராமி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதி, திருமலைக்கேணி உள்ளிட்ட கோவில்களிலும் ஆடிக்கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

    • முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • முருகருக்கு மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது.

    ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம். வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    ஆடி கிருத்திகை விழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆடிக்கிருத்திகை விழா கடந்த 27-ந் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கி, நேற்று ஆடிப்பரணியும், இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், நாளை இரண்டாம் நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது.

    இந்த 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் மலைக்கோவில், மலை அடிவாரம், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் 160 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக சென்னை, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேரணாம்பட்டு, பள்ளிப்பட்டு, திருப்பதி, சித்தூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆடி கிருத்திகை விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருணகிரிநாதருக்கு வழிகாட்டிய முருகப்பெருமான்.
    • அருணகிரிநாதர் முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளார்.

    முருகன் சுருட்டு புகைப்பாரா?... எந்த ஒரு இறை வழிபாடும் காரண காரியங்கள் இல்லாமல் செய்வதில்லை. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் நடைமுறை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள மலைமீது அமைந்துள்ள முருகன் கோவிலில் இன்றும் உள்ளது.

    வயலூரில் அருணகிரிநாதருக்கு காட்சி தந்த முருகன் விராலிமலைக்கு வரச் சொல்லியதால் இங்கு அருணகிர நாதர் வந்துள்ளார். வயலூரில் இருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் விராலிமலை தலம்.

    வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் இந்த விராலிமலை தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி (கூடு விட்டு கூடு பாயும் வித்தை) வழங்கியுள்ளார். இங்கு பலகாலம் தங்கியிருந்த அருணகிரிநாதர் இங்குள்ள முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளார். இந்த ஆலயத்துக்கு பல பெருமைகள் உண்டு.

    திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை. திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம்.

    ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம். இக்கோயிலில் ஒரு காலத்தில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து என்றபக்தர் ஈடுபட்டார்.

    ஒருநாள் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்றவைத்தார்.

    அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, "உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா?' என கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தபோது அவர் முன்னால் சுருட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

    கருப்பமுத்து நடந்ததைக்கூற அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார்.

    அவர் கனவில் தோன்றிய முருகன், "எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என பக்தர் விரும்பினார்.

    அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே!' என்றார். அதன்பிறகு இன்றுவரை இப்பழக்கம் இருக்கிறது.

    இந்த சுருட்டை பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவனுக்கு என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல; பக்தியும் அன்புமே முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

    இந்த கோவிலில் கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் என்பது அதிகளவில் நடக்கிறது. அந்த வகையில் ஆடி கிருத்திகையில் இங்கு பக்தர்கள் பலரும் அன்னதானம் வழங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

    • ஆடி கிருத்திகை வருகிற 9-ந் தேதி வருகிறது.
    • உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது.

    உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடி கொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் வாய்ந்தது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

    இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    இந்த ஆண்டு ஆடி கிருத்திகை வருகிற 9-ந் தேதி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பதவி உயர்வு தானாக வரும்.

    ஆடி கிருத்திகை விரதத்தை நாரதர் 12 ஆண்டுகள் மேற்கொண்டார். இதனால் அவருக்கு முனிவர்களில் முதன்மையான முனிவர் என்ற பதவி உயர்வு கிடைத்தது.

    இந்த நாட்களில் காலையில் நீராடி வழிபட வேண்டும். அப்போது கந்த சஷ்டி கவசம் மற்றும் சண்முக கவசம் பாடுவது நல்லது. முருகனுக்கு அன்று பாலாபிஷேகம் செய்வது கூடுதல் நன்மை தரும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப் பொறிகள். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது.

    காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி, மச்சக்காவடி, செடில் காவடி, சேவல்காவடி, தீர்த்தக்காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.

    கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகள் பக்தி சிரத்தையுடன் பாடிவிரதத்தை முடிக்கின்றனர்.

    அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றி புகழ்கிறது. திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும் திருத்தணி என்ற பெயரை சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.

    முருகப்பெருமான் இத்தலத்தில் ஞானசக்தியாகிய வேலைத் தாங்கி நிற்கிறார். முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

    • கார்த்திகை நட்சத்திரம் முருகனை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.
    • ஆடி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும்.

    ஈரோடு மாவட்டம் கோபி பச்சைமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை அன்று காலை 6.30 மணிக்கு 2 மாடுகள் 181 படிகட்டுகள் ஏறி வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும். அப்படி ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுவது ஆடிக்கிருத்திகை நாளாகும்.

    முருகப்பெருமான் அவதரித்தது விசாகம் நட்சத்திரத்தில் என்றாலும் கூட அவரை வளர்த்தெடுத்தது எல்லாம் கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது.

    மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது. கார்த்திகை விரதத்தன்று கந்தசஷ்டி பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் குளித்து விட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டு, பிறகு விரதத்தை நிறைவு செய்வது சிறப்பானதாகும்.

    கந்தசஷ்டி கவசத்துடன் கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பது மிகப்பெரிய புண்ணியத்தை தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் ஆடி கிருத்திகை நாளில் திருப்புகழில் உள்ள பாடலை பாராயணம் செய்து வழிபடுவதால் விரைவில் திருமண வரம் கூடி வரும்.

    பகல் முழுவதும் உப்பில்லாமல் உணவு எடுத்துக் கொண்டு, மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்கு சென்றும் விரதத்தை நிறைவு செய்வது சிறப்பு.

    • ஆறுமுகத்தானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருப்பூர்:

    ஆடிமாத கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், ஊத்துக்குளி கயித்தமலை கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    ஆறுமுகத்தானுக்கு பன்னீர், தேன், திணை மாவு, பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடனை முடித்தனர். மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது.

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடனை முடித்தனர்.

    திருப்பூர்:

    ஆடிமாத கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், ஊத்துக்குளி கயித்தமலை கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    ஆறுமுகத்தானுக்கு பன்னீர், தேன், திணை மாவு, பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார்.

    முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடனை முடித்தனர். மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது. 

    ×