என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadithapasu"

    • நாகங்களுக்கு பால் - பழம் படைப்பதால் நாகதோஷம் விலகும்.
    • கோவில் இருக்கிற இடம் சங்கரநயினார்புரம் என அழைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ளது, பேய்குளம் கிராமம். இது முற்காலத்தில் பெரும் காடாக இருந்தது. இந்த வழியாக வரும் வழிப்போக்கர்கள் இவ்விடத்தில் தங்கவே அஞ்சி நடுங்கினர்.

    தற்போது பேய்குளம் பஜார் இருக்கும் இடம், இருண்ட காடாகவும், நுழைய முடியாத அளவுக்கு நெருக்கமான அதிக மரங்கள் கொண்ட இடங்களாகவும் இருந்தது. இதனால் மதிய வேளையில் கூட இவ்விடம் இருண்டு, பேய் குடிகொண்டிருக்கும் இடமாக தோன்றிய காரணத்தினால் 'பேய்குளம்' என பெயர் பெற்றது.

    இந்த பகுதியில் பஞ்ச தலங்களில் ஒரு தலமான கட்டாரி மங்கலம் நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலைக் கட்டிய வீரபாண்டியன் என்ற மன்னன், ஆலயத்தை கட்டி முடித்ததும் கொடிமரம் நடுவதற்காக யாகம் ஒன்றை செய்தான்.

    அப்போது வேதவிற்பன்னர்கள், ஐந்து தேவதைகளை அழைத்து கொடிமரத்தில் அமர வைத்தனர். ஊர்மக்கள் கூடி கொடிமரத்தை கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது எங்கள் ஊருக்கு காவல் தெய்வமாக இந்த தேவதைகளும் இடம்பெற வேண்டும் என்று பக்கத்து ஊர் மக்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு அவர்கள் அந்த தேவதைகளை அழைத்துப் போய் தங்கள் ஊர்களில் காவல் தெய்வமாக குடிவைத்துக்கொண்டார்களாம்.

    கட்டாரிமங்கலம், அம்பலச்சேரி, புளியங்குளம், கருங்கடல், பேய்குளம் ஆகிய ஐந்து கிராமங்களில் தான் அந்த தேவதைகள் குடிபுகுந்தன. அதன்பிறகு வேதவிற்பன்னர் அந்த தேவதைகளை கொடிமரத்துக்கு வர எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அந்த தேவதைகள் கொடிமரத்திற்கு வர மறுத்தனர்.

    தங்களை விரும்பி அழைத்த மக்களின் ஊருக்குச் சென்று, அந்த ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக அமர்ந்து கொண்டனர். எனவே தேவதை இல்லாத கொடிமரத்தை கோவிலில் நாட்டவில்லை. ஆகவே கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில் கொடிமரம் இன்றியே காணப்படுகிறது.

    பேய்குளம் தேவதை குடிகொண்ட இடமாக மாறிய காரணத்தினால் இவ்வூர் காடு அழிந்து நகரமாக மாறிவிட்டது. தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சென்று வழிபடும் பக்தர்கள், அக்காலங்களில் பாத யாத்திரையாக செல்வார்கள்.

    எனவே அவர்கள் தங்குவதற்காக வழி நெடுகிலும் அன்னதான சத்திரங்கள் அமைத்தனர். பொதிகைமலை அடிவாரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாத யாத்திரீகர்கள் தங்குவதற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்த்தாண்டன் என்ற ஒரு சிவ பக்தர் இந்த பகுதியில் ஒரு மடம் அமைத்தார். அந்த மடத்தில் சில பசுக்களையும் பராமரித்து வந்தனர். அதனால் இந்த மடம் 'பசு மடம்' என்று அழைக்கப்பட்டது.


    பின்னாளில் இங்கு வந்து தங்கிய சிவனடியார்களில் ஒருவர் இங்கு சிவபூஜை செய்து வந்தார். ஆண்டு தோறும் ஆடி தபசு காட்சியை காண சங்கரன்கோவில் சென்று வருவார். வயதான காரணத்தினால் அவரால் சங்கரன்கோவில் செல்ல இயலவில்லை. அதனால் மிகுந்த வருத்தத்தில் சங்கரலிங்க சுவாமியையும், கோமதி அம்மாளையும் நினைத்து சிவசிந்தனையில் அமர்ந்து தியானம் செய்தார்.

    அதன் பலனாக சங்கரன்கோவிலில் நடந்த தவசுக் காட்சியானது இவ்வூரில் இருந்த அவருக்கு தெரிந்தது. இதனால் ஆனந்தம் அடைந்தார். 'தென்னகத்தில் இறைவன் தபசு காட்சி தந்த இந்த இடம் அல்லவா சின்ன சங்கரன்கோவில்' என்று எண்ணினார்.

    இறைவனிடம் 'தனக்கு காட்சி தந்தது போலவே, இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காட்சி தரவேண்டும்' என்று கோரினார். இறைவனும் 'அவ்வாறே ஆகட்டும்' எனக் கூறி மறைந்தார்.

    இதையடுத்து அந்த சிவனடியார், இங்கு சுவாமி மற்றும் அம்பாளை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தோறும் இங்கும் ஆடி தபசு காட்சி மிகச்சிறப்பாக நடைபெற வழி ஏற்படுத்தினார்.

    சங்கரன்கோவில் சென்று காட்சி காண முடியாத பக்தர்கள், இங்கேயே ஆடிதபசு காட்சியை கண்டு மகிழ்ந்தனர். அதன்பின் இந்த ஆலயத்தை வழிபட்ட சில பக்தர்கள், காசி விஸ்வநாதரைப் போன்று சிறிய லிங்கத்தையும் சிவ ஆகம விதிப்படி இங்கே பிரதிஷ்டை செய்தனர்.

    ஆலயத்தையும் சிறப்பான முறையில் அமைத்து, கருவறையில் கிழக்கு நோக்கி சங்கரலிங்க சுவாமியையும், அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி கோமதி அம்பாளையும் அமைத்தனர்.


    இந்த மண்டபத்தில் நடராஜப் பெருமாள், சிவகாமி அம்மாள், ஐம்பொன்னால் ஆன மாணிக்கவாசகர், அதிகார நந்தி உள்ளது.

    முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், துர்க்கை அம்மன் மற்றும் பைரவர் போன்ற பரிகார தேவதைகளும் உள்ளனர்.

    ஆலய பிரகாரத்தில் வேம்பு உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனடியில் புற்று மற்றும் சாஸ்தா சன்னிதி இருக்கிறது. இவ்விடத்தில் நாகங்களுக்கு பால் - பழம் படைப்பதால் நாகதோஷம் விலகும். இத்திருக்கோவிலில் தல விருட்சம், வில்வ மரம் ஆகும்.


    இந்த கோவில் இருக்கிற இடம் சங்கரநயினார்புரம் என அழைக்கப்படுகிறது. கூட்டம் பெருக பெருக ஒவ்வொரு வருடமும் ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டகப்படியும், அருகில் உள்ள ஊர்களுக்கு வழங்கப்படும்.

    குருகல்பேரி, பெருமாள்குளம், சாலைப்புதூர், தேர்க்கன்குளம், வீராக்குளம், ஸ்ரீவெங்கடேசபுரம், பழனியப்பபுரம், கோமநேரி, சங்கரநயினார்புரம், மீரான்குளம் ஊர் பொதுமக்கள் இந்த மண்டகப்படியை நடத்தி வருகிறார்கள்.

    பேய்குளம் ஊரின் மேல் புறம் உள்ள பிள்ளையார் கோவிலில் அம்மன் தபசு இருப்பார். இதையொட்டி அம்மன் காலை 10.15-க்கு தபசுக்கு புறப்படுவார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சீர்வரிசையுடன் அம்பாளை அழைக்க புறப்படுவார்.

    அம்பாளை அழைத்துக் கொண்டு வரும் சுவாமிக்கு, பேய்குளம் பஜாரில் மக்கள் வரவேற்பளிப்பர். அப்போது அப்பகுதியில் விளையும் கடலை, உளுந்து, பருத்தி போன்ற விளை பொருட்களை சந்தோஷமாக வீசி மகிழ்வார்கள்.

    இதனால் அடுத்த ஆண்டு விளைச்சல் மிக அதிகமாகும் என விவசாயிகளுக்கு நம்பிக்கை. இரவு 8.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பெண்கள் மாவிளக்கேற்றி சிறப்பாக வழிபாடு செய்கிறார்கள்.

    இத்திருக்கோவிலில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு வைத்து திருமணம் புரியும் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.

    முதலில் மடமாக இருந்த கோவிலில் பின் கருவறை மட்டும் கட்டப்பட்டது. அதன் பிறகு கும்பாபிசேகத்தின் போது இரண்டாவது பிரகாரத்தில் புதிதாக மகா மண்டபமும், அதில் கொடிமரம், நந்தி, பலிபீடம், நவக்கிரகம் மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதி, பைரவர் சன்னிதி, சாஸ்தா, பூதத்தார் திருக்கோவில் கல்யாண மண்டபம் போன்றவையும் உள்ளன.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    நாங்குநேரியில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பேய்குளம் உள்ளது. திருநெல்வேலி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் இருந்து பஸ் வசதி உண்டு.

    • திருமேனிநாதர் சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள துணை மாலையம்மன் சமேத திருமேனிநாதசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி, அம்பாள் சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.

    10-ம் நாள் தபசு நிகழ்ச்சி யானது நேற்று திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரி சையாக நடைபெற்றது. துணைமாலை அம்மன் கோபமுற்று தபசு மண்ட பத்தில் தவம் மேற்கொண்ட தாகவும், அப்போது திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனை விளக்கும் வகையில் குண்டாற்றில் ஆடித்தபசு திருவிழா நடந்தது. அப்போது திருமேனி நாதருக்கும், துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் சுவாமியை 3 முறை வலம் வந்த பின்னர், சுவாமி மற்றும் அம்மனுக்குத் தீபாராதனை காட்டப் பட்டது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, சுவாமி மற்றும் அம்மன் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு கோவிலைச் சென்றடைந்தனர். திருவிழா வைக் காண திருச்சுழி, அருப்புக் கோட்டை, நரிக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் குவிந்தனர்.

    திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தபசு காட்சி வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11-ந் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் அம்பாள் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கலையரங்கத்தில் சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி., தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தேரோட்டத்தில் அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, கோவில் துணை ஆணையர் கோமதி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி 11-ம் திருவிழாவான வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்கசுவாமி கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டக படிதாரர்கள் செய்து வருகிறார்கள். 

    • கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.
    • 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் உள் மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    ஆடித்தபசு திருவிழா நாட்களில் கோவில் பிரகாரத்தை 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி சுற்று சுற்றி வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாளுக்கு விளா பூஜையும், 9 மணிக்கு சங்கர நாராயண சுவாமி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கும், சுவாமி-அம்பாளுக்கும், சந்திரமவுலீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம், பிற்பகல் 1.35 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாளுக்கு ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெற்றது.

    மாலை 4.15 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 6.05 மணிக்கு சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கரநாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கிறார்.

    இரவு 11 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு, இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஆடித்தபசு திருவிழாவை காண தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான வர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சங்கரன் கோவிலில் எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலையாகவே தெரிகிறது.

    தபசு விழாவையொட்டி சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆடித்தபசு விழாவை யொட்டி 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    தீயணைப்பு துறை சார்பில் 4 விதமான தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மின் வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வாசல் அருகில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். 

    ×