என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arupadaiveedu"

    • பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.
    • தனித்து அமர்ந்த தலம் என்பதால் திருத்தணிகை.

    திருப்பரங்குன்றம்: தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

    திருச்செந்தூர்: அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

    பழனி: ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

    சுவாமிமலை: தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

    திருத்தணி: சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

    பழமுதிர்ச்சோலை: தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    • ஆறு விதமான ஆதாரங்களை நமக்கு வழங்கும் என்பது நம்பிக்கை.
    • பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆறு விதமான ஆதாரங்கள் தேவை.

    நமக்கு வீடு இருப்பது போல முருகனுக்குப் படை வீடுகள் இருக்கின்றன. அவற்றை ஆறுபடை வீடு என்று வர்ணிப்பது வழக்கம். அந்த ஆறுபடை வீடுகளும் ஆறு விதமான ஆதாரங்களை நமக்கு வழங்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கை வளம்பெற பொருளாதாரமும், அருளாதாரமும் நமக்குத் தேவை. அருணகிரிநாத பெருமான் முருகப்பெருமானை நோக்கிப் பாடும்பொழுது, 'அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியால் இடைஞ்சல் களைவானேய' என்று குறிப்பிடுவார்.

    ஒரு மனிதன் பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆறு விதமான ஆதாரங்கள் தேவை. அவை ஆரோக்கியம், நல்ல உறவு, பொருளாதாரம், அபயம் எனப்படும் பாதுகாப்பு ஆற்றல், ஆளுமைத்திறன், நிறைவான ஞானம். இந்த ஆறு ஆதாரங்களையும் முறையாக சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருத்தணி, பழநி ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் ஜென்ம நட்சத்திரமன்று அல்லது செவ்வாய்க்கிழமை அன்று சென்று வழிபட்டு வந்தால் பெறலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகன் என்றால் 'அழகன்' என்று பொருள்.
    • கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம்.

    முருகன் என்றால் `அழகன்' என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும்.

    இந்த மாதத்தில் ஆறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டுடிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு பேருடைய பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பனிரெண்டு கரங்களை பெற்றிருப்பதால் அள்ளிக்கொடுக்ககும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால் தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது.

    வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றி, சாதனைபுரிய வைப்பவன் முருகப்பெருமான் என்பதை கும்பிட்டவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்த தீப்பொறிகள் கங்கையில் பறந்த போது கங்கையே வற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவன் முருகப்பெருமான்.

    கங்கையில் தோன்றியதால் 'காங்கேயன்' என்ற ஒரு பெயர் வந்தது. சரவண பொய்கையில் தோன்றியதால் தான் 'சரவண பவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று.

    திருப்பரங்குன்றம்

    இது முதல் படைவீடாகும். தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம் திருப்பரங்குன்றம்.

    திருச்செந்தூர்

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடம் திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார் முருகப்பெருமான். சேவலை கொடியாக்கிக்கொண்டான்.

    பழனி

    இது மூன்றாவது படைவீடாக உள்ளது. மாம்பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச்சுற்றினார்கள் பிள்ளையாரும், முருகனும். ஆனால் முன்னதாகவே `அன்னையும் பிதாவும் அகிலம்' என்று சொல்லி சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்டார் ஆனைமுகப் பெருமான். எனவே கோபத்தோடு முருகன் மலையேறி நின்ற இடம் தான் பழனி.

    சுவாமிமலை

    நான்காம் படை வீடு சுவாமிமலை. தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த இடமாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும் தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் உபதேசிப்பது புதுமை. பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் தான் `சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    திருத்தணி

    ஐந்தாம் படை வீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் திருத்தணி. சினம் இருந்தால் பணம் வராது. எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவரிகள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபடுவது நல்லது.

    பழமுதிர்சோலை

    ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. அவ்வை பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம் என்பார்கள். 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புபவர்கள் இங்கு சென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெற முடியும்.

    "வேலும் மயிலும், வேலும் மயிலும்` என்று சொல்லி அந்த வேலவனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள். முருகப்பெருமானைக் கைகூப்பித்தொழுதால் நலம் யாவும் வந்து சேரும். படைவீடு செல்லுங்கள். பகை வெல்லும்! பணம் சேரும்!

    • விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
    • நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

    இந்நிலையில் பக்தர்கள் வரும் முக்கிய பகுதியான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில்அ திகளவு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும், குறிப்பாக அலகு குத்தி வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்தன.

    இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன்பின் படிப்படியாக நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதுடன் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவதும் தடுக்கப்பட்டது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

    கடந்த வாரம் பழனி நகர்மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் தேவஸ்தான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வருகிற 13-ந் தேதி பழனியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என நகர்மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி நகர மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுகாத்திடவும், பழனி நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும், நீதியரசர் கவனத்தை ஈர்த்திடும் வகையில் இந்த போராட்டம் நடைபெறும் என நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    விரைவில் உலக முருக பக்தர்கள் பேரவை மாநாடு நடைபெற உள்ள நிலையில் தேவஸ்தானத்திற்கும், நகராட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போராட்ட சூழல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
    • ஆவணி திருவிழா என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை நாள், நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் ஆவணித் திருவிழா நடைபெற்று வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்தும், சிலர் பரிகார பூஜைகள் செய்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலை மோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஞாயிறு விடுமுறை தினம், நாளை கிருஷ்ண ஜெயந்தி, ஆவணி திருவிழா என்பதாலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

    வழக்கம் போல் அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியால் போக்கு வரத்து ஸ்தம்பித்தது. ஆனாலும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வாறு சரி செய்தனர்.

    பக்தர்கள் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

    • உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானது.
    • தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    தமிழ்நாட்டில் தமிழர்கள் பலரும் கொண்டாடும் முக்கியமான நிகழ்வாக தைப்பூசம் இருக்கிறது. பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணையும் இந்த நாளில் தெய்வங்களை வழிபடும்போது, அவர்களிடம் இருந்து கிடைக்கும் அருள் பன்மடங்காக இருக்கும் என்கிறார்கள்.

    'பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த..' என்ற திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகத்தின் வாயிலாக, சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தைப்பூசம் தமிழ்நாட்டில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது.


    இந்த உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானது. அதன்பிறகு பிரமாண்டமான நிலப்பகுதி தோன்றியது என்று புராணங்கள் சொல்கின்றன. அப்படி இந்த உலகம் உருவாகத் தொடங்கிய தினமாக 'தைப்பூசம்' உள்ளது என்பது முன்னோர்களின் கருத்து.

    இதனால்தான் இந்த உலகத்தில் முதன் முதலில் நீர் தோன்றியதை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்களிலும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது என்று, அந்த கருத்துக்கு வலுசேர்க்கிறார்கள்.

    தைப்பூசத் திருநாளில் சிவபெருமானையும், அம்பாளையும் வழிபடுவதும், முருகப்பெருமானை முன்னிலைப்படுத்துவதும்தான் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

    வியாக்ர பாதர், பதஞ்சலி முனிவர் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மன், விஷ்ணு உள்ளிட்ட அனைத்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், சிவபெருமான்- அம்பாள் ஆகியோரின் நடனத்தைக் காணும் ஆவல் உண்டானது.

    அதன்படி ஈசனும், தேவியும் தங்களின் நடனத்தை அவர்களுக்கு காட்டி அருளிய தினம், இந்த 'தைப்பூச'த் திருநாள் என்கிறார்கள். எனவே இந்த நாளில் சிவாலயங்கள் தோறும், நடராஜருக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

    தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் ஆகிய அசுரர்களிடம் தேவர்கள் சிறைபட்டுக் கிடந்தனர்.

    அவர்களை மீட்பதற்காக தேவர்களின் சேனாதிபதியாக இருந்து, அசுரர்களுடன் போர்புரிந்தார், முருகப்பெருமான். போர்க் கடவுளான அவரை போற்றும் விதமாகத்தான் 'தைப்பூசம்' கொண்டாடப்படுவதாக சொல்கிறார்கள்.

    மேலும் வள்ளியை முருகப்பெருமான் மணம் முடித்த தினம் இந்த 'தைப்பூசம்' என்கிறார்கள். ஞானப்பழம் கிடைக்காததால், முருகப் பெருமான் பழனி மலையில் ஆண்டியாக வந்து நின்ற தினம் 'தைப்பூசம்' என்ற கருத்தும் உள்ளது. இதனால்தான் தைப்பூச திருநாளானது, பழனியில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இவற்றை எல்லாம் புறந்தள்ளினாலும், இன்னொரு விஷயத்தை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அது என்னவென்றால், முருகப்பெருமான், தமிழர்களின் தெய்வமாக கருதப்படுகிறார்.

    தமிழர்களின் உயர்வைச் சொல்லும் மாதமாக தை மாதம் திகழ்கிறது. அதோடு ஒவ்வொரு பவுர்ணமியும் தெய்வத்தை வழிபட சிறந்த நாளாக சொல்லப்பட்டிருக்கிறது.

    அந்த வகையில் தமிழர் மாதமான தை மாதத்தில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை, பவுர்ணமி தினத்தில் வழிபடுவதால் தைப்பூசம் சிறப்புக்குரிய நாளாக மாறி இருக்கலாம் என்பது பலரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கருத்தாக இருக்கிறது.

    இந்த நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.


    திருப்பரங்குன்றம்

    சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலம் ஆகும்.

    திருச்செந்தூர்

    அசுரன் சூரபத்மனோடு முருகர் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலம் ஆகும்.

    பழனி

    மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலம் ஆகும்.

    சுவாமிமலை

    தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தந்த திருத்தலம் ஆகும்.

    திருத்தணி

    சூரனின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலம்.

    பழமுதிர்சோலை

    அவ்வைக்கு பழம் உதிர்த்து வள்ளி, தெய்வானையோடு காட்சி தந்த திருத்தலம்.

    தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் முருகப்பெருமானுக்கான இந்த தைப்பூசம் சிறப்பான முறையில் நடைபெறுவதை நாம் பார்க்கலாம்.

    • ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
    • அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

    முருகப்பெருமானின் முதல்படை வீடாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. குடவரைக்கோயிலான இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து மூலவரான முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பழனி

    அறுபடைவீடுகளில் 3-வது படைவீடான பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் தினமும் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் பாதையாத்திரையாக வந்தும் முருகப்பெருமான தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்

    தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் வேல் குத்தி காவடி எடுத்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனைக்கு பின் சுவாமி அலை வாயு கந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி முருகன் கோவில்களில் இன்றுகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×